குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை

Kulanthai Tholilalar Katturai In Tamil

இந்த பதிவில் “குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் அவர்களுக்கு சிறுவயதில் முறையான கல்வியும் ஆளுமையும் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. குழந்தைத் தொழிலாளர்கள் எனப்படுபவர்கள்
  3. குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணங்கள்
  4. குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்
  5. குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாத்தல்
  6. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது அந்நாட்டுக் குழந்தைகளின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே குழந்தைகள் பாதுகாப்புடனும்⸴ திறமையுடனும்⸴ கல்வியறிவுடனும் வளர்க்கப்படுவதே நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதுவாக இருக்கும்.

குழந்தைத் தொழிலாளர்கள் இந்த உலகின் மிகப் பெரும் சோகமாகும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோத செயலாகும்.

இது இயற்கைக்கு முரணான ஒரு சமூகக் குற்றம். குழந்தைகளின் கனவுகளை அழிப்பதற்கு ஈடான வன் செயல் ஏதுமில்லை. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி இக் கட்டுரையில் காண்போம்.

குழந்தைத் தொழிலாளர்கள் எனப்படுபவர்கள்

குழற்தைத் தொழிலாளர்கள் எனப்படுபவர்கள் நீடித்த பணியில் குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதனைக் குறிக்கின்றது. இது அனைத்து நாடுகளிலும் பரவலாக இடம்பெறுகின்றது.

இவர்களது சுதந்திரங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்றனர். தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாகின்ற குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களது எதிர்காலம் சூறையாக்கப்படுகின்றது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணங்கள்

குழந்தைத் தொழிலாளர்கள் வறுமை காரணமாகவும்⸴ கல்வியறிவின்மை காரணமாகவும் பெரும்பாலும் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.

தரகர்கள் மூலமாகவும் விலைக்கு விற்பதன் மூலமும் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர். பல நாடுகளில் குழந்தைகள் கடத்தல் செல்வம் கொழிக்கும் தொழிலாகவே மாறிவிட்டது.

குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டம் 1986ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 1981ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது.

இச் சட்டத்தின் முக்கிய குறிக்கோள் அனைத்து விதமான குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பது ஆகும்.

மற்றும் அபாயகரமான தொழில் அல்லது பணிகளில் உள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்க பங்களித்தல்

மற்றும்⸴ அவர்களை திறன் மேம்பாட்டு பயிற்சியில் இணைத்தல்⸴ விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாத்தல்

குழந்தைகள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதில் இருந்து அவர்களை பாதுகாத்தல் மிகமிக அவசியமாகும். சட்டமானது உயிர்ப்புடனும்⸴ வலுவாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை செயல்படுத்துவதற்கான வளங்களை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படல் வேண்டும்.

இலவசமாக அதேவேளை கட்டாயக் கல்வியைத் தீவிரமாக மேற்கொள்ளல் வேண்டும். பெற்றோர்கள் வறுமை நிலையைக் காரணம் காட்டி குழந்தைகளைத் தொழிலுக்கு அமர்த்தாமல் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

குழந்தைகள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதைக் கண்டாலோ அல்லது அறிந்தாலே அதனைத் தடுத்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க எப்போதும் பின் நிற்கக் கூடாது.

முடிவுரை

இன்றைய குழந்தைகளே நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் ஆகும். இவர்களே நாளைய உலகை ஆளப்போகும் வீரர்களாவர். இன்று அவர்கள் எப்படி நடாத்தப்படுகின்றார்களோ அதன் எதிரொலிப்புத் தான் நாளை வெளிப்பட போகின்றது.

எனவே இவர்களுக்குச் சிறந்த கல்வியும்⸴ ஆளுமையையும் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.

நம் கண் முன்னே ஓர் குழந்தையின் சுதந்திரம் பறிபோகுமாயின் நம் மௌனங்கள் களையப்பட்டு அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

You May Also Like:

அறிவே ஆற்றல் தரும் கட்டுரை

சேமிப்பின் அவசியம் கட்டுரை