அறிவே ஆற்றல் தரும் கட்டுரை

அறிவு பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “அறிவே ஆற்றல் தரும் கட்டுரை” பதிவை காணலாம்.

முட்டாள்களின் கையில் ஆட்சி கிடைப்பதானது “குரங்கின் கையில் பூமாலை” போன்றது. இந்த நிலை தான் பல நாடுகளில் அதிகம் அவதானிக்கப்படுகிறது.

அறிவே ஆற்றல் தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவெனப்படுவது.
  3. அறிவின் மகத்துவம்
  4. அறிவு வளர் அகிலம் ஆழ்.
  5. மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  6. அறிவின்மையின் அனர்த்தங்கள்
  7. முடிவுரை

முன்னுரை

“அறிவு என்பது ஒரு மனிதனுக்கு மிகச் சிறந்த பலமாகும். இதுவே ஏனைய விலங்குகளில் இருந்து மனிதனை தனித்துவமாக்கி காட்டுகிறது.

இதனால் தான் திருவள்ளுவர் பின்வருமாறு “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என்று மிகைப்படுத்தி கூறுகின்றார்.

அதாவது அறிவாற்றல் என்பது மனிதனை அழிவில்லாமல் காக்கும் அரணாகும். இதனால் தான் மனிதர்கள் அறிவை பெருக்கி கொள்ள விளைய வேண்டும். நன்மக்கள் எப்போதும் நல்லறிவு பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

இக்கட்டுரையில் அறிவுடைமையின் தன்மையும் அதன் நன்மைகள் தொடர்பாக நோக்கப்படுகிறது.

அறிவெனப்படுவது

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்கிறது பொய்யாமொழி அதாவது இந்த உலகில் பலபேர் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தாலும் அவற்றில் எது சரி எது தவறு என்பதை சரியாக பகுத்தறியும் திறன் தான் உண்மையான அறிவு என்பது ஆன்றோரின் கருத்து

அதைவிடுத்து முட்டாள்தனங்களுக்கும் கட்டுகதைகளுக்கும் செவிசாய்த்து மனிதாபிமானம் இன்றி நடந்து கொள்வது அறிவென பொருள்கொள்ளப்படாது.

கல்வி அறிவுடையவராயினும் அவர் பகுத்தறிவில்லாதவராயின் அதில் துளியும் பயனில்லை. நல்லெண்ணம் உடையவர்க்கு நல்லறிவே துணையாகும்.

அறிவின் மகத்துவம்

நல்லறிவானது களங்கமற்ற சிந்தனையின் விளைவானது. பல நூல்களை கற்பதனாலும் வாழ்வில் நிறைய மனிதர்களை சந்திப்பதனால் கிடைக்கும் அனுபவத்தினாலும் அறிவானது மேம்படுகிறது.

இதனை ஒளவையார் “தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கிறார்.

நிறைய நூல்களை கற்றவர்கள் மிகச்சிறந்த கூர்மையான அறிவினை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் ஒரு சமூகத்தினையும் நாட்டினையும் வழிநடாத்தி செல்லும் வழிகாட்டிகளாக இருப்பார்கள்.

இதனால் தான் அறிவுடையவர்களை சான்றோர்கள் என்று பெருமையுடன் அழைப்பார்கள். ஒரு மன்னனை காட்டிலும் அறிவுடையவன் புகழ் பெறுவான் மன்னனுக்கு தனது தேசத்தில் தான் மதிப்பு அறிவுடையவனுக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு.

மாவீரன் ஜீலியஸ் சீசர் யாராவது 1000 புத்தகங்களை கற்றவர்கள் இருக்கிறார்களா? அவனே எனது நண்பன் என்கிறார். அந்தளவிற்கு அறிவு உடையவர்கள் மகத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அறிவு வளர் அகிலம் ஆழ்

அறிவனை வளர்த்து கொள்வதால் இந்த உலகில் உயர்ந்த நிலையினை அடைந்து கொள்ள முடியும். உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள் தான். அறிவினால் கிடைக்கும் பேராற்றல் மிகப்பெரியது.

பிரச்சனைகளை தீர்க்கவும் நாட்டு மக்களை நல்வழியில் வாழ வழி செய்யவும் தலைவர்களுக்கு மிகச்சிறந்த அறிவாற்றல் மிக முக்கியமானது.

உலகில் எந்த வளங்களும் இல்லாமல் இருந்த சிறிய தீவான சிங்கப்பூரை உலகின் முதல் தர வணிக நாடாக மாற்றியது. அந்த நாட்டின் மிகச்சிறந்த அறிவாற்றல் மிக்க தலைவரான “லீ குவாங் யூ” என்பவருடைய திட்டங்களும் மக்களின் ஒற்றுமையும் முயற்சியும் ஆகும்.

மெய்ப்பொருள் காண்பதறிவு

எமது உலகில் இன்று அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பாதகமான விளைவுகளுக்கும் காரணம் மனிதனுடைய அறிவற்ற செயல்கள் தான்.

அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் வளர்ந்து விட்ட மனிதன் சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையை அறியவில்லை. சக நாடுகள் சக மனிதர்கள் என்ற நோக்கமின்றி அதிகாரத்திற்காகவும் வளங்களுக்காகவும் போரிடுகின்றனர்.

அதனால் தான் இந்த உலகம் அமைதியின்றி தவிக்கிறது. ஆகவே வாழ்க்கையின் மெய் என்பது யாதென அறிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வாழ தலைப்படுவதே நல்லறிவாகும்.

அறிவின்மையின் அனர்த்தங்கள்

முட்டாள்களின் கையில் ஆட்சி கிடைப்பதானது “குரங்கின் கையில் பூமாலை” போன்றது. இந்த நிலை தான் அதிகம் அவதானிக்கப்படுகிறது.

எமது சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்கவென்றே உருவான மதம், சாதி, நிறம் போன்ற பேதங்கள் முட்டாள்தனமான சமூக வழக்கங்கள் என பலவற்றை எமது சமூகத்தில் அறிவற்றவர்கள் விதைத்து சென்றிருக்கின்றனர்.

இவற்றினால் தான் இன்றும் எமது சமூகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றது. பின்னடைவுகளுக்கும் இதுவே காரணமாகும்.

இவ்வகையான அறிவின்மைகள் பல போர்கள், உயிரிழப்புக்கள், அமைதியின்மை போன்ற அனர்த்தங்கள் தோன்ற காரணமாக அமைகின்றது.

முடிவுரை

அறிவானது மனிதர்க்கு நல்ல ஆற்றலை தரவேண்டும், நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும் சக மனிதர்களையும் விலங்குகளையும் அன்பு செய்ய கற்று தரவேண்டும்

இயற்கையை பேரன்பு கொண்டு நேசிக்க கற்று தரவேண்டும் வன்முறைகளை இல்லாதொழிக்க செய்யவேண்டும் இது தான் மனிதர்களுக்கு தேவையான அறிவு.

You May Also Like:

சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை