சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை

Siru Thuli Peru Vellam Katturai In Tamil

இந்த பதிவில் “சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை” பதிவை காணலாம்.

எதிர்காலத்தில் உண்டாகும் துயரத்தை வெற்றி கொள்ள நிகழ்காலத்தில் உழைப்பில் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

  • சிறு துளி பெரு வெள்ளம்
  • Siru Thuli Peru Vellam Katturai In Tamil
அறம் செய்ய விரும்பு கட்டுரை

சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேமிப்பின் அவசியம்
  3. சேமிப்பும் வெற்றியும்
  4. சேமிப்பு இன்மையின் விளைவுகள்
  5. முடிவுரை

முன்னுரை

உலகத்தின் எல்லா வித வெற்றிகளுக்கும் ஆரம்ப புள்ளி மிக சிறிய முயற்சியாக தான் இருக்கும்.

கண்ணுக்கு தெரியாத சிறிய துகள் விதையில் இருந்து பலநூறு பேர் ஓய்வெடுக்கும் ஒரு ஆலமரம் உருவாகின்றதனை போல

சிறிய தீப்பொறி பெரும் காட்டினையே எரிப்பதனை போல சிறிய ஒரு துளி நீர் தான் காட்டாற்று வெள்ளமாக பேராறுகளாய் பிரவகிக்கின்றன.

இது நமக்கு மிகப்பெரிய உண்மை ஒன்றை உணர்த்துகிறது. நாம் சிறுக சிறுக சேமிப்பதனால் தான் தான் அது எம்மை பெரும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.

சேமிப்பு நிச்சயமாக ஒரு நாள் எம்மை உயர்த்தும் சேமிப்பு என்பது வெறுவெறுமனே பணத்தை சேமிப்பது என்று பொருளல்ல நல்லறிவையும் நல்லோரினுடைய அன்பையும் நல்ல நினைவுகளையும் சேமிக்க வேண்டும்.

இக்கட்டுரையில் சேமிப்பின் அவசியமும் வெற்றியும் படிப்படியான முயற்சியும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றது.

சேமிப்பின் அவசியம்

ஒரு மனிதன் வாழ்வில் வெற்றியடைய நல்லறிவுடையவனாகவும் அதே நேரம் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.

கல்வியாகட்டும் செல்வமாகட்டும் சிறுக சிறுக சேர்ப்பதனாலேயே முழுமையான மற்றும் நிலையான அடைவினை அடைந்து கொள்ள முடியும்.

மனித வாழ்க்கை நிறைய சிக்கல்கள், பிரச்சனைகளோடு பிண்ணி பிணைந்தது இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து போகும். இவற்றை சமாளிக்க பணத்தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

நம் முன்னோர்கள் இளமையில் உடல் வலிமையாய் இருக்கும் போது பாடுபட்டுழைத்து ஒரு பகுதியை “எய்ப்பில் வைப்பு” எனும் முறையில் பிற்காலத்தில் துன்பமடையாது வாழ சேமித்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

உதாரணமாக வயல்களை அண்டிவாழும் தூக்கணாங்குருவிகள் நெல்மணிகளை தம் வாழ்விடங்களில் சேமித்து வைத்து பஞ்சமான காலங்களில் உண்பதை போல நாமும் செல்வத்தை சேமித்து வைத்து பிறருக்கும் உதவ வேண்டும்.

சேமிப்பும் வெற்றியும்

நாம் உயர்ந்த பல இலக்குகளை அடையவேண்டுமென்றால் சிறுவயதில் இருந்து சேமிப்பு பழக்க வழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஊதாரித்தனமாக செலவு செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினமாகும். நாம் ஒரு துறையில் பயணிக்கும் போது அதில் உயர்ந்த நிலையை அடைந்து கொள்ள சேமிப்பு அவசியமாகும்.

உலகத்தில் சிறந்த நிலையை அடைந்தவர்கள் சிறந்த சேமிப்பு திறன் உடையவர்களாக இருப்பர். ஏனென்றால் வாழ்க்கையின் கஷ்டமான நிலைகள் உருவாகும் போது தம்மை பாதுகாத்து கொள்ள சேமிப்பு தான் உதவுகின்றது.

இதனால் இன்றைய தலைமுறை குழந்தைகளை சிறுவயதில் இருந்தே சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

“சிறு துளி பெரு வெள்ளம்” என்பது போல சிறுக சிறுக சேமிக்கும் விடயங்கள் பெரிய செல்வமாக மாறும். இது மனிதனின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சேமிப்பு இன்மையின் விளைவுகள்

“தண்ணீரின் அருமை கோடையில் தெரிவது போல” சேமிப்பின் அருமையானது வறுமை வரும் போது நன்றாகவே தெரியும்.

சேமிப்பு இல்லாமல் வீண் செலவுகளை செய்பவர்களாகட்டும் ஏழைகளாகட்டும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலமைகளின் போதும் பணம் இன்றி அவர்கள் அனுபவிக்கும் வேதனையும் துன்பமும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகும்.

இந்த காலத்தில் செல்வம் இல்லாதவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள் உதவி செய்பவர்களும் அரிதாகி விட்டனர்.

எனவே “தன்கையை நம்பியே” ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்பதனால் உழைப்பதில் ஒரு பகுதியையாவது சேமித்து வைத்துவிட வேண்டும். இதனால் எம்மையும் எம்மை நம்பி இருப்பவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

முடிவுரை

வானில் இருந்து விழும் நீரின் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாவதனைப் போல மனிதனுடைய சேமிப்பு பிற்காலத்தில் நிச்சயமாக கைகொடுக்கும்.

எனவே இதனை உணர்ந்து வீண் விரயங்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து. சேமிப்பதன் மூலமாக தாமும் முன்னேறுவதுடன் தம்மை சார்ந்த சமூகமும் முன்னேற இது வாய்ப்பாக அமையும்.

நிகழ்காலத்தில் வீண் செலவுகள் செய்துவிட்டு எதிர்காலத்தில் துன்பத்தில் விழாமல் இருக்க சேமிப்போம் மகிழ்வாக வாழ்வோம்.

You May Also Like:

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை