சேமிப்பின் பயன்கள் கட்டுரை

semippin payangal katturai in tamil

இந்த பதிவில் “சேமிப்பின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

எதிர்கால நலன் கருதி அனைவரும் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவசர நேரங்களில் சேமிப்பு கைகொடுக்கும்.

சேமிப்பின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேமிப்பு என்றால் என்ன
  3. சேமிப்பின் அவசியம்
  4. சேமிப்புத் திட்டங்கள்
  5. சேமிப்பின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

“சிறு துளி பெருவெள்ளம்ˮ என்பர். நாம் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து வைப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

பணம் மனித வாழ்க்கையைச் சிறப்பாக்கும்⸴ வறுமையற்று வாழ வைக்கும். இதனால் தான் “பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமம்ˮ என்கின்றனர். எனவே சேமிப்பு அவசியமாகும்.

சேமிப்பின் அவசியத்தை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாகும். சேமிப்பின் பயன்கள் அதன் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சேமிப்பு என்றால் என்ன

வருமானத்தின் ஒரு பகுதியைச் செலவு செய்யாமல் ஒதுக்கி வைப்பது சேமிப்பு எனலாம். சேமிப்பு என்பது சிக்கனத்தின் குழந்தையாகும்.

உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளில் ஒருவரான வாரன் பஃபெட் (Warren Buffett) என்பவர் சேமிப்பு பற்றி கூறும் போது “உங்களின் வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். உங்கள் வருமானத்தில் சேமிப்பு போக மீதியை செலவழியுங்கள்ˮ என்கிறார்.

சேமிப்பின் அவசியம்

நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்க முடியாது. எனவே உழைக்கும் காலத்தில் சேமிப்பது அவசியமாகும். அப்போது தான் பிற்காலத்தில் வறுமை இன்றி வாழலாம். அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள சேமிப்பு அவசியமாகும்.

எதிர்பாராத தேவைகள்⸴ பிற்காலத் தேவைகள் என்று வாழ்வில் வரும் போது அதனை நிவர்த்தி செய்ய சேமிப்பு அவசியம் ஆகும். பிறரிடம் கடன் பெறாமல் இருக்க சேமிப்பு அவசியமாகும்.

சேமிப்புத் திட்டங்கள்

சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. அஞ்சலகத்தில் உள்ள சேமிப்புத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். வங்கிகளில் சேமிக்கலாம்.

தேசிய பாதுகாப்புப் பத்திரங்கள் மூலம் சேமிக்கலாம். மாணவர்கள் சேமிப்புக்காக பள்ளியில் பல வங்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவற்றிலெல்லாம் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிப்பின் பயன்கள்

சேமிப்பு ஒரு சிறந்த பழக்கமாகும். இப்பழக்கமானது ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க கற்றுத் தருகின்றது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வழிவகை செய்கின்றது.

அவசர தேவைகளுக்கு பிறரிடம் கையேந்தி நிற்காமல் நாமே தேவையைப் பூர்த்தி செய்ய சேமிப்பு பழக்கம் உதவுகின்றது. மருத்துவச் செலவுகளுக்கு உதவுகின்றது.

மாணவர்கள் சிறு செலவுக்காக பெற்றோரை துன்புறுத்தாமல் இருக்க சேமிப்பு பணம் உதவுகின்றது. வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் சேமிப்பது துணை புரிகின்றது.

முடிவுரை

மனிதனை விட அறிவு குன்றிய விலங்குகளான எறும்புகள்⸴ தேனீக்கள் போன்றன சேமிப்பை செய்து தம்முடைய எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. எனவே மனிதர்களாகிய நாமும் சேமிப்பின் பயன் உணர்ந்து சேமிப்பு பழக்கத்தை பழகிக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் வாழ்வில் பணத் தட்டுப்பாடு இன்றி வாழலாம். சேமிப்புப் பழக்கமானது வாழ்வைப் பாதுகாக்கும். மனித வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படும் போது தான் சேமிப்பின் அருமை புரியும்.

சேமிப்பது எமக்கு மட்டும் பயன் தராமல் பிறருக்கும் உதவக் கூடிய நிலையைத் தரும். எனவே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வாழ்வில் வளம் பெறுவோம்.

You May Also Like:

சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை

சேமிப்பின் அவசியம் கட்டுரை

சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்