சேமிப்பின் அவசியம் கட்டுரை

semippu avasiyam katturai in tamil

இந்த பதிவில் “சேமிப்பின் அவசியம் கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்க்கையில் சேமிப்பு பழக்கத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சேமிப்பின் அவசியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சேமிப்பு பழக்கவழக்கம்
  3. ஏன் நாம் சேமிக்க வேண்டும்
  4. பணத்தின் மதிப்பு
  5. இல்லாதவர்களின் நிலை
  6. நாம் சேமிக்க வேண்டியவை
  7. முடிவுரை

முன்னுரை

எப்போதும் செலுவு போக மீதியை சேமிக்காதே சேமிப்பு போக மீதியை செலவு செய் என்று கூறுவார்கள். அதாவது நாம் எமது வாழ்க்கையில் சேமிப்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மழைக்காலத்தில் பெய்கின்ற மழைநீரை குளங்கள் சேமிப்பது போலவும், தேனிக்கள் தேனை சேகரித்தல் போலவும், உழைப்பின் ஒரு பகுதியை சேமித்தால் தான் நாமும் மனநிம்மதியாக வாழ்வின் சவால்களை சமாளித்து இங்கே வாழ முடியும்.

பணத்தின் அருமை என்பது வறுமையில் இருக்கும் போது தான் தெரியும் ஆகையால் சேமிப்பு மிகவும் அவசியம் ஆகின்றது. இந்த கட்டுரையில் சேமிப்பின் அவசியம் தொடர்பாக நோக்குவோம்.

சேமிப்பு பழக்கவழக்கம்

வாழ்க்கையில் பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் உழைப்பது அனைத்தையும் ஒரு சில நாட்களில் ஊதாரிதனமாக செலவு செய்து விடுவார்கள். ஒரு சிலர் உழைப்பை செலவே செய்யாமல் கஞ்சத்தனமாக இருப்பார்கள்.

ஒரு சிலர் உழைப்பதை செலவு செய்வதோடு சேமிக்கவும் செய்வார்கள் இவர்களால் தான் வாழ்வில் சிறப்பாக வாழமுடியம். வரவிற்கு ஏற்றாற் போலவே செலவு செய்தல் என்ற பழக்கவழக்கமே சிறந்ததாகும்.

கோடைகாலத்தில் எறும்புகள் கடினமாக உழைத்து தானியங்களை தனது கூட்டில் சேர்த்து வைக்கும் மழைக்காலத்தில் அவற்றை உண்டு உயிர்வாழும் எறும்புகள், தேனீக்கள் போன்றன சேமிப்பு பழக்கவழக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்து காட்டுக்களாகும்.

ஏன் நாம் சேமிக்க வேண்டும்

உடலில் வலிமை இருக்கும் வரையில் தான் எம்மால் உழைக்க முடியும் இளமை பருவம் கடந்து விட்டால் உழைப்பது கடினமாகி விடும். வாழ்வின் எல்லா நேரங்களிலும் வேலைவாய்ப்பு வருமானம் என்பது ஒரே போல இருக்காது.

இக்கட்டான சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளில் இருந்து வெளிவர நமக்கு யாரும் உதவாத சந்தர்ப்பங்களில் நமது சேமிப்பு எமக்கு உதவியாக இருக்கும்.

இளமைக் காலத்தில் நாம் சேமித்து வைப்பதனால் முதுமைக் காலத்தில் அது நமக்கு உதவியாக இருக்கும்.

பணத்தின் மதிப்பு

பணம் என்ற வார்த்தை இந்த உலகத்தில் புரட்டி போடாத விடயங்களே இல்லை. இன்றைய உலகில் பணம் தான் அனைத்து மனிதர்களினுடைய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வாழ்க்கை தரத்தினையும் தீர்மானிக்கின்றது.

பலருக்கும் உணர்வுகளையும் உறவுகளையும் தாண்டி பணமே முக்கியமானதாக காணப்படுகிறது. இதனால் தானோ என்னவோ “ஈட்டி எட்டின மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்றொரு பழமொழி தமிழில் வழங்கப்படுகிறது.

வசதி படைத்தவர்கள், வறியவர்கள் என்ற இரு பிரிவுகளை பணம் தான் தீர்மானிக்கின்றது.

இல்லாதவர்களின் நிலை

“இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் பேச்சு” என்ற ஒளவையாரின் வரிகளை போலவே இல்லாதவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.

உண்ண உணவின்றி தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மிகவும் கொடியது வறுமை. இல்லாதவர்களின் நிலை எம்மை சுற்றி உள்ள வறியவர்களின் வாழ்வை அவதானித்தால் இல்லாதவர்களின் நிலை நன்றாகவே புரியும்.

நாம் சேமிக்க வேண்டியவை

நமது வாழ்வில் நாம் சேமிக்க வேண்டியவை எவை? உண்கின்ற உணவை சேமிக்க வேண்டும் அதனை வீண்விரயம் செய்யலாகாது. ஏனென்றால் அன்றாடம் உணவின்றி பசியோடு வாடுபவர்கள் ஏராளம் இந்த உலகத்தில் உள்ளனர்.

நீரை விரயம் செய்யாது சேமிக்க வேண்டும் இயற்கையான வளங்களை சேமிக்க வேண்டும். அவற்றை எம்மால் மீள உருவாக்க முடியாது.

அது போல வாழ்க்கையில் நல்ல உறவுகள் அன்பு மற்றும் நினைவுகளை சேமிக்க வேண்டும் இவை மிகவும் பெறுமதியானவை.

முடிவுரை

“கனிந்த பழங்கள் உள்ள மரத்தை அதிகம் உலுப்ப வேண்டாம்” என்றொரு சுவிட்சர்லாந்து பழமொழி இருக்கிறது. அதாவது அதிகமாக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் நாம் சேமித்து கொள்ள வேண்டும் என்பது பொருளாகும்.

வாழ்வின் அந்த அந்த சந்தர்ப்பங்களில் கிடைக்காத நிம்மதியும் சந்தோசமும் பின் கிடைப்பதால் எந்த பயனுமில்லை ஆதலால் சேமிக்கின்ற பழக்கத்தை நாம் அதிகப்படுத்தி கொள்வது எமக்கு நன்மை பயப்பதாக அமையும்.

You May Also Like:

சிறு துளி பெரு வெள்ளம் கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை