ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை

Oota Sathu Katturai In Tamil

இந்த பதிவில் ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை காணலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவுகள் பல நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.

துரித உணவு துரித முடிவு கட்டுரை

ஊட்டச்சத்து பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஊட்டச்சத்துக்கள்
  3. உணவும் ஆரோக்கியமும்
  4. துரித உணவு கலாச்சாரம்
  5. முடிவுரை

முன்னுரை

“உணவே மருந்து” என்று நம் முன்னோர்கள் குறிப்பிடுவார்கள். மனிதனுடைய ஆரோக்கியம் அவன் உண்கின்ற உணவிலேயே தங்கியுள்ளது.

“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்பர் நிலத்தினை நீரானது எவ்வாறு வளப்படுத்துகின்றதோ அதனை போலவே உணவும் மனிதனுடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

மனிதனுடைய வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் ஒரு சக்தி அவசியமாகும். அதனை ஊட்டம் நிறைந்த உணவுகள் வழங்குகின்றன.

ஊட்டம் நிறைந்த உணவுகள் மனிதனுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் அளிக்க வல்லது.

உலகத்தில் அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைத்து விடுவதில்லை. உணவின்றியும் போதிய ஊட்டச்சத்து இன்றியும் இங்கு பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்பது வேதனைக்குரியது.

இக்கட்டுரையில் ஊட்டச்சத்துக்கள் எனப்படுபவை எவை, உணவும் ஆரோக்கியமும் மற்றும் துரித உணவு கலாச்சாரம் போன்றவற்றை நோக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் எனப்படுபவை பிரதானமாக காபோவைதரேற், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கனியுப்புக்கள், தாதுப்பொருட்கள் என்பவற்றை குறிக்கின்றது.

அந்தவகையில் காபோவைதரேற் ஆனது அதிகம் கிழங்குகள், தானியங்கள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படும். காபோவைதரேற் மூலமே உடலுக்கான குளுக்கோஸ் கிடைக்கிறது.

மற்றும் புரதமானது இறைச்சி, மீன், முட்டை, பால், தானியங்கள் போன்றனவற்றில் அதிகளவில் காணப்படுகின்றது. உடல் வளர்ச்சிக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதச்சத்து அதிகம் தேவைப்படுகின்றது. உடலானது வலிமை அடைய அதிகம் புரத உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும்.

அடுத்து கொழுப்பு சத்தானது அதிகம் விலங்கு கொழுப்பு, வெண்ணை, பால்க்கட்டி, எண்ணெய் வகைகள் போன்றனவற்றில் அதிகம் காணப்படும். தோல் தலைமுடி போன்றனவற்றின் ஆரோக்கியத்துக்கு இது பயன்படுகிறது.

விற்றமின்கள் அதிகளவில் பழங்கள், பச்சை காய்கறிகள், போன்றனவற்றில் அதிகம் காணப்படுகின்றது. விற்றமின்கள் அதிகம் நோயெதிர்ப்புசக்தி பார்வைதிறன் மற்றும் தலைமுடி தோல் பல் எலும்பு போன்றன ஆரோக்கியமாக இருக்க இவை பயன்படுகின்றன.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சீராக அடங்கிய உணவுகள் நிறையுணவுகள் எனப்படுகின்றன.

உணவும் ஆரோக்கியமும்

மனித உடலில் ஏற்படுகின்ற ஏராளமான நோய் நிலைகள், குறைபாடுகள் என்பன ஏற்படுவதற்கு ஊட்டசத்து குறைபாடுகளே காரணமாக உள்ளன.

இதனால் தான் உணவினை சரியான முறையில் எடுத்து கொண்டாலே பாதி நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஒவ்வொரு நோய்நிலமைகளுக்கு காரணமாக அமைகின்றன.

காபோவைதரேற் உடலின் பிரதான சக்தி இதுவாகும். மூளை, சிறுநீரகம், இதயம், தசைகள் சரியான முறையில் தொழிற்பட செய்கின்றது.

அவ்வாறே புரதம் ஆனது கலங்கள் வளர்ச்சி, தசைவளர்ச்சி போன்றன இடம்பெற உறுதுணையாக அமைகிறது.

விற்றமின்கள் வரிசையில் விற்றமின் சி ஆனது மனித உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கவல்லது மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகள் என்பு வளர்ச்சி மற்றும் குருதி ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துகிறது.

கல்சியம் அதிகமாக காணப்படும் உணவுகளை உண்பதால் என்புகள் பலமடையும் மற்றும் பல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடல் உணவுகளில் புரதம் மற்றும் அயடீன் அதிகமாய் உள்ளதனால் ஆரோக்கியமான உணவுகளாகும்.

இவ்வாறு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவுகளை நிறையுணவு என்று அழைக்கலாம்.

சிறந்த உணவு பழக்கம் எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

துரித உணவு கலாச்சாரம்

இன்றைக்கு எமது சமூகத்தில் ஆரோக்கியமான இயற்கை முறையிலான சமைத்த உணவுகளை உள்ளெடுப்பதை விடுத்து மேற்கத்தைய நாகரீக மோகத்ததால் துரித உணவு கலாச்சாரம் எமது சமூகத்தில் தொற்றியுள்ளது.

துரித உணவுகள் அதிக உப்பு, அதிக சீனி, அதிக கொழுப்பு, அதிக சுவையூட்டிகளை கொண்டு காணப்படுவதனால் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது.

இதனையே எமது மக்களும் அதிகமாக விரும்பி வாங்கி உண்கின்றார்கள். அதிக விலைகொடுத்து நோய்களையும் இலகுவாக வாங்கி கொள்கின்றனர்.

முடிவுரை

உண்ணும் உணவு தான் ஒருவருடைய ஆரோக்கியத்தையும் அவர்களது வாழ்நாளையும் தீர்மானிக்கிறது . நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கின்றவர்கள் நீண்ட காலம் நோய்நொடிகள் இன்றி வாழ்வார்கள்.

அது போல ஆரோக்கியம் இல்லாத ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்பவர்கள் இலகுவில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் தான் நேரம் செலவிடுவர்.

இன்றைக்கு வைத்தியசாலைகள் அதிகம் நிரம்பி வழிவதற்கு காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்கள் என்றே கூறலாம்.

நமது மூதாதையர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி வாழ்ந்தமையால் நீண்டகாலம் வாழ்ந்தார்கள்.

நாமும் அவ்வகையான நடைமுறைகளை பின்பற்றி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

You May Also Like:

போதைப்பொருள் பாவனை கட்டுரை

உணவே மருந்து கட்டுரை