மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

maram valarpom katturai in tamil

இந்த பதிவில் “மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் உருவாக்குகின்ற ஒவ்வொரு மரங்களும் தான் எமது அடுத்துவரும் தலைமுறையினரை பாதுகாக்கவிருக்கிறது

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தாவரங்களின் அவசியம்
  3. அவற்றின் தொழிற்பாடுகள்
  4. மரங்களின் சூழல் முக்கியத்துவம்
  5. பொருளாதார நன்மைகள்
  6. மரங்களை அழிப்பதன் தீமைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இயற்கையின் படைப்பில் பூமியில் தோன்றிய மிக முக்கியமான அம்சமாக தாவரங்கள் காணப்படுகின்றன. இவை பச்சை போர்வையாக பரந்து விரிந்து நமது பூமியை பசுமையாகவும் ரம்மியமாகவும் வைத்திருக்கின்றன.

மனிதர்களது உதவியின்றி தாவரங்களால் இங்கு வாழமுடியும் ஆனால் தாவரங்களது உதவியின்றி இங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆதலால் தான் உற்பத்தியாக்கிகள் என்று இவை அழைக்கப்படுகின்றன.

உயிர்ப்பெருந்திணிவின் அடிப்படையாக தாவரங்களே காணப்படுகின்றன. ஆகவே மனிதனுக்கும் மரங்களுக்கும் இடையான தொடர்பு தாயும் சேயும் போல பிண்ணி பிணைந்ததாக காணப்படுகிறது.

இக்கட்டுரையில் மரங்களின் தோற்றமும் அவற்றின் நன்மைகள் பற்றியும் நோக்கப்படுகிறது.

தாவரங்களின் அவசியம்

மனிதன் இந்த பூமியிலே உயிர் வாழ அவசியமானவை எவை? சுவாசிப்பதற்கு பிராண வாயுவான ஒட்சிசன் அவசியம், பருகுவதற்கு நீர் அவசியம், உண்பதற்கு உணவு அவசியம், வாழ்வதற்கு வாழ்விடங்கள் அவசியம்.

இந்த அவசியமான அனைத்தையும் வழங்குவது தாவரங்கள் தான். இவை தான் காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வெளிவிடுகின்றன. வளிமண்டலத்தில் முகில்கள் உருவாகி மழை உருவாக காரணமாய் உள்ளன.

உண்பதற்கு தானியங்களையும் பழங்களையும் காய்கறிகளையும் தருகின்றன. வாழ்விடங்களை அமைக்க மரங்களே உபயோகம் ஆகின்றன. ஆகவே தான் தாவரங்கள் மிக அவசியம் ஆகின்றன. மரங்கள் இல்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

தாவரங்களின் தொழிற்பாடுகள்

தாவரங்கள் நீர் மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி வளர்கின்றன. தமக்கு தேவையான உணவை தாமே பச்சையத்தின் உதவியுடன் தயாரித்து கொள்கின்றன. இவை பூமியில் நிகழ்கின்ற பல தொழிற்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

தாவரங்களில் இருந்து ஒட்சிசன் வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் காபனீரொட்சைட் உறிஞ்சப்படும் இதனால் வளிமண்டலம் சமநிலையாக இருக்கும். நீரியல் வட்ட செயன் முறைகளுக்கும் தாவரங்கள் பங்காற்றுகின்றன.

மேலும் காபன் வட்டம், நைதரசன் வட்டம் என பல செயற்பாடுகள் சமநிலையாக இடம்பெற இவை காரணமாக இருக்கின்றன, மற்றும் தாவரங்களை நம்பியே பல உயிரங்கிகள் வாழ்கின்றன புவி மேற்பரப்பு வெப்பமடையாமல் இருக்க இவை ஒரு பசும்போர்வையாக தொழிற்படுகின்றன,

உயிரினங்களின் உணவு சங்கிலி, உணவு வலை போன்றவற்றையும் இவை தான் பேணுகின்றன, ஆறுகளின் உருவாக்கம் தரைக்கீழ் நீர் உருவாக்கம், வளமான மண் உருவாக்கம் இவை போன்ற பல செயற்பாடுகள் தாவரங்களின் உதவியுடனே நிகழ்கின்றன.

மரங்களின் சூழல் முக்கியத்துவம்

மனிதன் வாழ சூழல் தன்மை மிகவும் அவசியமாகும். மரங்கள் இல்லாத பாலைவனத்திலோ பனி துருவங்களிலோ மனிதன் வாழ்வது சாத்தியமற்றதாகும்.

மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதனால் தான் அந்த பிரதேசங்கள் உவப்பான காலநிலைகளை பெற்று கொள்கின்றன. போதுமான மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று. ஈரப்பதன் போன்றன கிடைக்கின்றன.

உதாரணமாக அயன மழைக்காடுகளை அண்டிய பிரதேசங்கள் மனிதர்கள் வாழ மிகவும் உகந்த சூழல் தன்மைகளை கொண்டிருக்கின்றன. இவை காடுகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. ஆகவே தான் நாம் மரங்களை பாதுகாக்க வேண்டும்.

பொருளாதார நன்மைகள்

மரங்கள் ஏராளமான பொருளாதார நன்மைகளை தருகின்றன. பலகைகள், அரிமரங்கள் போன்றன விலை உயர்ந்த கட்டட மற்றும் தளபாட உருவாக்கத்திற்கு பயன்படுகின்றன.

எரிபொருளாக விறகு கிடைக்கிறது இது ஒரு பாரிய வளமாகும். மரங்களின் மூலம் பெறுமதியான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மருத்துவ ரீதியாக பல மூலிகை மருந்துகள் மரங்களின் ஊடாக கிடைக்கிறது.

மற்றும் இயற்கையான மரங்கள் நிறைந்த சூழலை கண்டுகளிக்க அதிக சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள் இதன் மூலமாகவும் அதிக பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றது.

மரங்களை அழிப்பதன் தீமைகள்

நாம் மரங்களை வளர்ப்பதால் அதிகளவான நன்மைகளை பெற்று கொள்ள முடியும். அதைவிடுத்து மரங்களை அழிப்பதனால் இன்று நாம் பல தீமையான விளைவுகளை பெற்று கொண்டிருக்கிறோம்.

காலநிலை மாற்றங்கள், பூகோள வெப்பமயமாதல், பச்சைவீட்டு விளைவு, கடல் மட்ட உயர்வு இவை போன்ற அசாதாரண நிலைமைகள் இன்று பூமியில் தோற்றம் பெற பிரதான காரணம் காடுகளை அழிப்பது தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே நாம் மரங்களை அழிக்காது அவற்றை பாதுகாக்க முயல வேண்டும்.

முடிவுரை

மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வரங்கள் தான் இந்த மரங்கள் இவை மனிதனுக்கும் இந்த சூழலுக்கும் அதிகளவான நன்மைகளை வழங்குவததோடு இந்த பூமியையும் அழிவடையாமல் பாதுகாக்கின்றது.

நாம் உருவாக்குகின்ற ஒவ்வொரு மரங்களும் தான் எமது அடுத்துவரும் தலைமுறையினரை பாதுகாக்கவிருக்கிறது. ஒவ்வொருவரும் சூழலை நேசித்து இந்த உலகில் வாழ வேண்டும்.

You May Also Like :

மரம் வளர்ப்போம் கட்டுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை