இந்த பதிவில் மனிதநேயம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.
ஒருவரால் இந்த உலகில் தனியாக வாழ்ந்து விட முடியாது ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் ஒவ்வொருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் தான் இவ்வுலகில் வாழ முடியும்.
மனிதநேயம் என்பது இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும்.
- Manithaneyam Katturai In Tamil
- மனிதநேயம் கட்டுரை
அன்னை தெரசா பற்றிய கட்டுரை
மனிதநேயம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மனிதநேயம் என்பது
- தமிழர் வரலாற்றில் மனிதநேயம்
- அருகிவரும் மனிதநேயம்
- முடிவுரை
முன்னுரை
“பிறப்பொக்கும் எல்லாவுயிர்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று பாடுகிறார் தெய்வபாவலர் வள்ளுவன்.
அதாவது மனிதர்கள் எனப்படுபவர்கள் பிறப்பினால் யாவரும் சமன் என்பதாகும். உயர்வு தாழ்வுகள் இல்லாமல் பிற மனிதர்கள் மீது அன்பு பாராட்டும் அந்த உயரிய பண்புடையவனே உண்மையான மனிதனாவான் அத்தகைய பண்பில்லாதவர்களை மனிதனாக கருத முடியாது.
சக மனிதர்கள் மீது அன்பு, கருணை, இரக்கம் காட்டுவதனால் தான் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது.
இக்கட்டுரையில் மனிதநேயம், தமிழர் வரலாற்றில் மனிதநேயம் மற்றும் அருகிவரும் மனிதநேயம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
மனிதநேயம் என்பது
உலகத்தில் வாழக்கூடிய முன் பின் அறியாத புதிய மனிதர்கள் புதிய முகங்கள் நம்மை பார்த்து செய்யும் புன்னகை கூட மனிதநேயம் தான்.
யாரென்று அறியாது இன்னொரு மனிதன் துன்பப்படுகின்ற போது உதவி செய்கின்ற அந்த மனம் தான் மனிதநேயம் எனப்படுகிறது.
உதவி செய்ய முடியாத பொழுதும் கூட அவர்கள் மனம் ஆறுதல் அடையும் படியாக நான்கு வார்த்தை ஆறுதலாக பேசி செல்வதும் மனிதநேயம் தான். “தன்னுயிர் போல மன்னுயிரையும் பாவித்தல்” என்கின்ற விடயமே மனிதநேயமாகும்.
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதர்களும் துன்பத்தால் துவள்வது இயற்கை அப்போது நம்மால் முடிந்த உதவியினை செய்தல், பசித்தவற்கு உணவழித்தல், தாகமாய் இருப்போற்கு நீர் கொடுத்தல், வறுமையில் வாடுவோருக்கு உதவிடுதல் என வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் மனிதநேயத்தை நாம் உணர முடியும்.
மனிதநேயம் என்பது சிறிதளவாயினும் இருப்பதனால் தான் மனிதர்களும் பிற உயிர்களும் வாழ்கின்றன.
அன்பு, கருணை, இரக்கம், அன்பான புன்னகை, பாசம், அரவணைப்பு இவை தான் மனிதநேயத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
இவ்வுலகில் யாரும் தனி மனிதர்களாக வாழ முடியாது. நம் வாழ்வனைத்தும் சக மனிதர்களது மனிதநேயத்தினால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெளிப்படை உண்மையாகும்.
தமிழர்கள் வாழ்வில் மனிதநேயம்
“யாதுமூரே யாவரும் கேளிர்” என்று உலகத்திற்கே மனிதநேயத்தை எடுத்து காட்டி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் சுயநலம் இல்லாத பிறர் நலம் பேணவேண்டும் என்பதில் தமிழர்கள் முன்னோடிகளாய் இருந்தனர்.
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே”
என்று 3000 வருடங்களுக்கு முன்பே திருமூலர் திருமந்திரத்தில் மனிதநேயம் தொடர்பான கருத்தியலை பதிவு செய்கிறார்.
மனிதநேயம் தொடர்பாக சங்கமருவிய காலத்தில் எழுந்த அறநூல்கள் மிகச்சிறப்பாக எடுத்து காட்டுகின்றன. அவற்றுள் முதன்மைனயானது திருக்குறளாகும்.
வரலாற்றில் வாழ்ந்த சிபிசக்கரவர்த்தி புறாவுக்காக தன்னுடலை தானம் செய்தமையும், பாரி மன்னன் முல்லைக்காக தேர் கொடுத்தமையும், பேக மன்னன் மயிலிற்காக போர்வை அளித்தமையும்,
மனுநீதி சோழன் ஒரு பசுவின் கன்றிற்காக தன் மகனையே தண்டித்வன் இத்தகைய மன்னர்கள் மனிதநேயத்திற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமிழர் பாரம்பரியத்தில் வந்தாரை வரவேற்று உபசரித்து உணவழித்தல், இன்சொல் பேசுதல் இது போன்ற மனிதநேயம் காக்கும் அன்னதானம், தாகசாந்தி இது போன்ற உயரிய மனிதநேய விழுமியங்கள் தமிழர் வாழ்வியலில் காணப்படுகின்றன.
இவற்றை நாமும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
அருகிவரும் மனிதநேயம்
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடையே மனிதநேயம் அருகி கொண்டே செல்கிறது.
மத பிரச்சனை, மொழிப்பிரச்சனை, நாடுகளுக்கிடையே ஆன பிரச்சனை, நிற பேதம், சாதி பேதம் என பலவகையான பேதமைகளால் அதிகாரபோட்டிகளினால் இவ்வுலகம் இரண்டு பெரும் உலகப்போர்களை சந்தித்தது பல உயிர்களையும் இழந்தது.
மனிதர்களுக்கு மனிதர் அன்பு பாராட்டுவதற்கு பதிலாக வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்குகின்றனர்.
அதிகார போட்டி, பொருளாதார போட்டி இவை போன்ற காரணங்களால் மனிதர்கள் நல்லெண்ணங்கள் இல்லாது சண்டையிட்டு கொள்ளும் மிருகங்களாக மாறியுள்ளனர்.
சக மனிதர்களையே கொலை செய்தல், பெண்களை துஷ்ப்பிரயோகம் செய்தல் இவை போன்ற மிருகத்தனமான செயற்பாடுகளில் இன்றைய மனிதன் ஈடுபட்டு வருவது மனவேதனைக்குரிய விடயமாக உள்ளது.
முடிவுரை
மனிதநேயத்திற்கு இணையான பொருள் அல்லது செல்வம் இவ்வுலகத்தில் எதுவும் கிடையாது. இதற்கு நல்ல மனம் வேண்டும் நல்ல உணர்வு வேண்டும் அவ்வெண்ணத்தை புதுப்பிக்ககூடிய நல் புத்தியானது இருக்கவேண்டும்.
மனிதநேயம் உயர்வாக உள்ள மனிதர்கள் இதயத்தினால் சிந்தித்து புத்தியினால் அதை உணரவும் செய்வார்கள் இதனை தான் மகாத்மா காந்தி செய்தார். அன்னை தெரேசாவும் செய்தார். சே குவேராவும் நெல்சன் மண்டேலாவும் இதனையே செய்தார்கள்.
உண்மையான மனிதநேயத்துக்கு விருப்பும் கிடையாது வெறுப்பும் கிடையாது மனிதநேயம் காப்போம் நாம் ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் இருப்போம்.
You May Also Like: