இந்த பதிவில் தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை தொகுப்பை காணலாம்.
உலகில் மிக தொன்மையான மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும். தமிழ் மொழி போல பல பெருமைகளை கொண்ட இனம் தமிழ் இனம்.
உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாடையும் கற்றுக்கொடுத்த பெருமை தமிழுக்கு உண்டு.
- தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்
- Tamilar Panpadu Katturai In Tamil
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பண்பாடு கலாச்சாரம்
- இன்றைய நிலை
- இளைய தலைமுறையினரின் கடமை
- முடிவுரை
முன்னுரை
சமூகவியல் அறிஞர்களின் கருத்தின்படி பண்பாடு என்பது வாழ்க்கை முறை என்பதாகும்.
ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும்.
ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் முதலியன அச்சமுதாயத்தின் பண்பாட்டுக்கூறுகள் எனப்படும்.
“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கோர் குணமுண்டு” என்று தமிழை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர்.
வேறு எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழவேண்டும் என்பதை விட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக்கொடுத்தது தமிழரின் பண்பாடு ஆகும்.
நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டைக் கட்டிக்காத்து பார்போற்ற வாழ்ந்த இனம் தமிழ் இனம் ஆகும்.
இக்கட்டுரையில் தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் பற்றி பார்க்கலாம்.
பண்பாடு
தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தோம்பல் வீட்டிற்கு வரும் உறவினர்களை மட்டுமல்ல முகம் தெரியாத யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு உபசரித்து முகம் மலர உணவளித்து உள்ளன்போடு வழியனுப்பும் வாழ்வியலை தருகிறது.
தமிழர்கள் பண்பாட்டை வீரத்திலும் விதைத்து சென்றுள்ளனர். இதற்கு புறநானூற்று நூல் சாட்சியாக உள்ளது. புறமுதுகிட்டு ஓடுவது, முதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ் பரம்பரை ஆகும்.
போரிலே இறந்த மகன் புற முதுகில் அம்பு பட்டு இறந்து இருந்தால் அவன் பால் குடித்த மார்பகங்களை அறுத்து எறிவேன் என்றாள் புறநானூற்று தமிழ் தாய்.
மேலும் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” எனும் உயரிய பண்பாட்டை உரக்கச் சொல்லியதும் தமிழ் இனமே. நாம் என்ன செய்கிறோமோ அதே தான் நம்மிடம் திரும்பி வருகின்றது.
எதை விதைக்கிறோமோ அதுதான் முளைத்து நமக்கு பலன் கொடுக்கிறது. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் கெட்டது நினைத்தால் கேட்டதே நடக்கும் என்ற வாழ்வியல் யதார்த்தமும் தமிழர் பண்பாடு ஆகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழன் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என ஒற்றுமை வாழ்க்கைக்கு தன் பண்பாட்டு அடிச்சுவட்டை பதிவு செய்திருக்கின்றான்.
கலாச்சாரம்
தமிழர் கலாச்சாரம் மொழி, இசை, பாரம்பரிய நடனம், கோவில்கள், கல்வெட்டுக்கள் உணவு பழக்கவழக்கங்கள், விருந்தினர் உபசரிப்பு, இலக்கியம், தத்துவம், பாரம்பரிய உடைகள் ஆகியவற்றால் மேலோங்கி நிற்கின்றது.
தமிழர் கலாச்சாரத்தை பற்றி அறிய தமிழக கோவில்களே முதன்மை இடமாக கருதப்படுகின்றது. இக்கோவில்களில் பெரும்பாலானவை தமிழரின் கட்டிடக்கலையை பறைசாற்றுகின்றன.
தஞ்சாவூர் கோவில் அதன் ஒற்றைக்கல் கட்டுமானத்திற்காக கட்டிடக்கலை ஆய்வில் முதலிடம் பிடிக்கிறது.
தமிழ் இசை, நடனம் போன்றவற்றை பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, காவடி ஆட்டம் என்பவை உலக அளவில் பிரதிபலிக்கின்றன.
மேலும் இயற்கையோடு ஒன்றிய சமையல் முறைகள் மற்றும் பரிமாறும் முறை என்பன தமிழர் கலாசாரத்தில் உணவு பழக்க வழக்கங்களின் பெருமையை கூறுகின்றன.
இன்றைய நிலை
இன்றைய சமுதாயமானது உலகமயமாதல், மேனாட்டு கலாச்சார மோகம், தொடர்பாடல் வலுப்பெற்றமை போன்றவற்றால் நமது பண்பாட்டு கலாச்சாரத்தின் உடை, உணவு, கலை என்பவற்றில் இருந்து விலகி செல்கின்ற தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.
தன் இனத்தினுடைய அடையாளங்களான பண்பாடு மற்றும் கலாசாரத்தை விட்டுக் கொடுப்பது தனது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு சமனான செயலாகும்.
வெளித்தோற்றத்தில் பிற பண்பாட்டை கலாச்சாரத்தை பிரதிபலித்து காட்டினாலும் தமிழரின் தனித்தன்மை கொண்ட பண்பாடு கலாச்சாரம் என்பன ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தப்படுவதாகவே இருக்கும்.
இளைய தலைமுறையினரின் கடமை
நம் முன்னோர் உருவாக்கி கடைப்பிடித்த பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டியது எம் தலையாய கடமையாகும்.
பிறதேச கலாச்சார மோகங்களை தவிர்த்தல், எமது கலாச்சார உடைகளை அணிதல், பண்டிகைகளை கொண்டாடுதல், அடுத்த தலைமுறைக்கு இவைபற்றி கற்பித்தல் என்பன நம் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும்.
முடிவுரை
உலகம் கண்ட மூத்த குடியின் சிறப்புமிக்க இந்த பண்பாடும் கலாச்சாரமும் தலைமுறை நூறு கடந்தாலும் தன் தனித் தன்மை காரணமாக தலைசிறந்த தாகவே உலக மக்களால் போற்றப்படும்.
எனவே தான் நாகரீகம் என்ற பெயரில் பலநூறு தலைமுறை கடந்து வந்தாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு காலத்திலும் பின்தொடர்ந்து வருகின்றன.
You May Also Like :