இந்த பதிவில் மொழிகளில் தொன்மையான மொழியான “தமிழின் இனிமை கட்டுரை” பதிவை காணலாம்.
தமிழ் மொழியானது இலக்கிய வளமும், இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாக திகழ்ந்து வருகின்றது.
தமிழின் இனிமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழ் இனிமையானது
- தமிழ்மொழியின் சிறப்புக்கள்
- செம்மொழிப் பண்புகள்
- பாரதிதாசன்
- முடிவுரை
முன்னுரை
நம் எண்ணங்களைப் பிறருக்குத் தெரிவிக்கவும், பிறருடைய உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளவும் உதவுவது மொழியேயாகும். நாகரீகம் வளர வளர பேச்சு வழக்கு மொழிகள் எல்லாம் எழுத்துவடிவம் பெற்றன.
காலத்தால் பழமையான சிறப்புமிக்க மொழியாக தமிழ்மொழி திகழ்கின்றது. தமிழுக்கு “இனிமை” என்றும் பெயருண்டு. தமிழின் இனிமை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழ் இனிமையானது
தமிழ்மொழியானது இனிமை வாய்ந்ததாகும். தமிழ் என்பதற்கு இனிமையென்று பொருளுண்டு. இதனை “இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்” என்பதன் மூலம் நன்கறியலாம். தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
பேராசிரியர் திருத்தக்கதேவர் “சீவகசிந்தாமணி” என்னும் பெருங்காப்பியத்தில் “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழீஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக்கூறி தமிழ்மொழிக்குப் பெரும் தொண்டு புரிந்துள்ளார்.
‘ஒண் தமிழ்’, ‘தேமதுரைத் தமிழோசை’, ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப் புலவர்கள் தமிழின் இனிமைப் பண்பைப் பாராட்டிப் பாடியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்புக்கள்
தமிழ்மொழியானது இலக்கிய வளமும், இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாக திகழ்ந்து வருகின்றது. முச்சங்கங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.
அவற்றை முதற்சற்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பகுத்து தமிழை வளர்த்தார்கள்.
தமிழுக்கு மெய்எழுத்து இனம் மூன்று அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவையாகும். நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள் அக்காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிப் பெயர் வைத்திருப்பது சிறப்பம்சமாகும். த – வல்லினம், மி – மெல்லினம், ழ் – இடையினம்.
செம்மொழிப் பண்புகள்
செம்மொழியாம் தமிழ் சிறப்புற்று விளங்குவது தமிழர்கள் செய்த பெரும் பேறாகும். தமிழின் தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, இலக்கிய வளமை, இலக்கணச் செழுமை, நடுவுநிலமை, உயர்ந்த விழுமியச் சிந்தனைகள், கலை இலக்கியத் தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை செம்மொழிக்குரிய பண்புகள் என மொழியாளர் கூறுகின்றனர்.
பாரதிதாசன்
தமிழ் மீது மிகவும் பற்றுக் கொண்டவரும், தமிழ் மொழியின் இனிமையை நன்கு உணர்ந்தவருமான பாவேந்தர் மொழிகளிலே தமிழ்மொழிதான் இனிமையானது என்கின்றார்.
பாகு என்றதாலே இனிப்பு. அந்த இனிப்பான பாகில் ஊறவைத்த பலகாரத்தின் சுவையையும், பசுவிலிருந்து கறந்த தூய்மையான பாலும், தென்னை மரத்திலிருந்து புதிதாக இறக்கப்பட்ட இளநீரும் பார்த்தாலே இனிமை தரக்கூடியவை என்றாலும் தமிழின் இனிமை இவற்றைவிட மேலானது என்கின்றார்.
முடிவுரை
காலங்கள் பல மாறினாலும், கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாகத் தமிழ்மொழி திகழ்கின்றது.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழாய் வளர்ந்து கன்னித் தமிழாய் செந்தமிழாய் பைந்தமிழாய் வலம் வரும் ஒரே மொழி தமிழ்மொழியாகும்.
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று பல பரிணாமங்களைக் கடந்து காலத்தைவென்று நிற்கின்றது என்றால் அது தமிழுக்கேயுரிய பெருமையாகும்.
எனவே தமிழர்களாகிய நாம் தமிழின் இனிமை மங்காது என்றென்றும் தமிழைப் பேணிக்காப்போம்.
You May Also Like : |
---|
தாய்மொழி பற்றிய கட்டுரை |
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் |