போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை

bothai porul katturai in tamil

இந்த பதிவில் ஆரோக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் “போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் ஏதேனுமொரு போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்பது கவலைக்குரியதாகும்.

போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை

போதை பழக்கத்தின் தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. போதைப் பழக்கம் ஏற்படக் காரணங்கள்
  3. உலக போதை மருந்துகள் ஒழிப்பு தினம்
  4. இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம்
  5. போதைப் பழக்கத்திலிருந்து மீளும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதை பழக்கம் ஆகும். வயது வித்தியாசமின்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றியுள்ளமை கவலைக்குரியதாகும்.

போதை பொருளை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை முற்றாக ஒழித்து விட முடியாதுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

போதைப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போதைப் பழக்கம் ஏற்படக் காரணங்கள்

பள்ளிப் பருவத்தில் நட்பு வட்டாரத்தினர் கொடுக்கும் அழுத்தம், வசிப்பிடச் சூழல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் போன்றவர்களைப் பார்த்துப் பழகுதல், சுயவிருப்பம், தற்காலிக மகிழ்ச்சிக்காக மற்றும் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதைப் பழக்கம் ஏற்படுகின்றது.

உலக போதை மருந்துகள் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் அனுஷ்டிக்கப்படுவதுடன், மனித சமூகத்திற்கு போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்

உலக அளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்சினையாக உள்ளது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும், போதை மருந்துகளின் நடமாட்டத்தால் அதிகரித்துள்ளது.

போதை பாவனையாளர்கள் அதிகமாக மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதய நோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கும் போதை வஸ்துக்களே பிரதான காரணமாகும்.

இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம்

இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கம் நாகரிகத்தின் உச்சம் என்று கருதுகிறார்கள். கையில் கிடைக்கிற பணம் முழுவதையும் கேளிக்கைக்காக செலவு செய்யும் மனோபாவம் வளர்ந்து வருகிறது.

வாழ்க்கையை வளப்படுத்தும் கல்லூரி காலங்களில் போதை வாழ்வின் பாதையையே மாற்றி விடுகிறது. சினிமா பிரபலங்கள் தரும் விளம்பரங்களைப் பார்த்தும், கேட்டும் அதிகமான இளையதலைமுறையினர் இதுதான் வாழ்க்கைமுறை என நினைத்து திசை மாறிப் போகிறார்கள்.

விளம்பரம் வேறு, சமூக வாழ்க்கைமுறை வேறு என்பதை இளையதலைமுறை நன்கு சிந்தித்து போதையின் பாதையில் செல்லாமல் கட்டுப்பாடான வாழ்வைப் பேண வேண்டும்.

போதைப் பழக்கத்திலிருந்து மீளும் வழிமுறைகள்

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயற்பட்டால் தானாகவே அதிலிருந்து மீண்டுவிடலாம்.

போதைப் பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும் போதெல்லாம் கவனத்தை திசைதிருப்பி நல்ல செயல்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக மருத்துவரை நாடி உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

குடிக்கும் மக்கள் திருந்தியிருந்தால் என்றோ மது ஒழிந்திருக்கும். ஆனால் இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் ஏதேனுமொரு போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்பது கவலைக்குரியதாகும்.

போதைப் பாவனை தனிமனிதனை மட்டுமன்றி சமுதாயத்தையும் சீரழித்து விடும் என்பதனை உணர்ந்து அனைவரும் பெறுப்புடன் செயற்பட வேண்டும்.

You May Also Like:
போதைப்பொருள் பாவனை கட்டுரை
மாணவர் ஒழுக்கம் கட்டுரை