மாணவர் ஒழுக்கம் கட்டுரை

manavar olukkam katturai in tamil

இந்த பதிவில் “மாணவர் ஒழுக்கம் கட்டுரை” பதிவை காணலாம்.

மாணவர் ஒழுக்க விழுமியங்களில் கல்வி துறையினர், சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஒழுக்கத்தின் இலக்கணம்
  • மாணவர் ஒழுக்கம்
  • தற்கால நிலை
  • ஒழுக்கத்தால் உயர்வு பெற்றோர்
  • முடிவுரை

முன்னுரை

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனிதனுடைய இன்ப வாழ்விற்கு அடிப்படையாக அமைவது நல்ல ஒழுக்கமே ஆகும்.

ஒழுக்கத்தினை மாணவர் பராயத்திலேயே அனைவரும் பழக்க வேண்டும். கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தோடு வளரும் குழந்தைகளே வாழ்க்கையில் வெற்றி பெறும் வாய்ப்புக்களை அதிகம் பெறுகின்றனர்.

இக்கட்டுரையானது மாணவர் வாழ்வியலிலுள்ள ஒழுக்கம் தொடர்பாக விளக்குவதாக அமைந்துள்ளது.

ஒழுக்கத்தின் இலக்கணம்

எமது முன்னோர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளனர். அதைக் கடைப்பிடித்து ஒழுகுதலே ஒழுக்கமாகும். ஒழுக்கம் என்பது நன்னெறிகளின் தெகுப்பு ஆகும்.

அடக்கமுடைமை, பண்புடைமை, பணிவுடைமை, பெரியோரைப் போற்றுதல், இன்சொல் கூறல், பிறருக்கு உதவி செய்தல், நல்லவர்களோடு நட்பு கொள்ளுதல், உண்மையை பேசுதல், பிறருக்கு தீது செய்யாதிருத்தல், மது அருந்தாமல் இருத்தல், புறங்கூறாதிருத்தல், பொறாமை கூறாதிருத்தல் போன்ற நற்பண்புகள் அனைத்தும் ஒழுக்கத்தின் பாற்படும்.

மாணவர் ஒழுக்கம்

பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கமானது மிக முக்கியமாகும். இதற்கு குடும்பங்களே அடித்தளமிட்டு ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களது தோற்றம், சீருடை நடத்தைக் கோலம் என்பவை ஒழுங்காக இருக்க வேண்டும்.

மேலும் சக மாணவர்களுடனான உறவு, ஆசிரியர்களுடனான ஒழுக்கம், ஒழுங்கான வரவு, கல்வியில் அதி கூடிய கவனம், சிறந்த அடைவு மட்டம், இணைபாட விதான செயற்பாடுகளில் கூடிய பங்களிப்பு, பணிவான நடத்தை என்பவையும் மாணவர்கள் பாடசாலைகளில் கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கப் பண்புகளாகும்.

தற்கால நிலை

பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கமானது தற்காலத்தில் மிகவும் மோசமடைந்த நிலையில் இருப்பதை அவதானிக்கலாம். திரைப்படங்களில் வரக்கூடிய கதாநாயகர்களை முன்ணுதாரனமாக கொண்டு உடை தொடங்கி தலைமுடி வரை அவர்களை பின்பற்றுகின்றனர்.

இது மிகப் பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது. அது மட்டுமல்லாது ஆசிரியர், அதிபரை மதிக்காமல் நடத்தல், போதைப் பொருள் பாவனை, தொலைபேசி பயன்பாடு போன்றவையும் ஒழுக்க சீர்கேட்டுக்கு காரணமாக அமைகின்றன.

மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதில் தற்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளும் கூட காரணமாக அமைகின்றன.

ஒழுக்கத்தால் உயர்வு பெற்றோர்

ஆசையே அழிவுக்கு காரணம் என்று உணர்த்திய புத்தர், இரக்கமே உருவான இயேசு பிரான், உண்மையை போற்றிய உலக உத்தமர் காந்தியடிகள் இவர்கள் அனைவரும் ஒழுக்கத்தால் உயர்வடைந்தவர்கள் ஆவர்.

இதிகாசத்தில் பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்ட ராமபிரான், தருமமே உருவாய் அமைந்த தருமர், அழுக்காறு படைத்த துரியோதனன் போன்ற பாத்திர படைப்புக்கள் இவ்வுலகிற்கு ஒழுக்கத்தின் உயர்வை உணர்த்தியுள்ளன.

முடிவுரை

குழந்தைகள் நல்லவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வளர வேண்டுமானால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தருவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது.

மேலும் மாணவர் ஒழுக்க விழுமியங்களில் கல்வி துறையினர், சமூக ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

வருங்கால சமுதாயத்தை தாங்க இருக்கும் தூண்களாகிய மாணவர்கள் ஒழுக்கமாக இருக்கும் போது தான் நாடு நலனுள்ளதாக அமையும்.

You May Also Like:
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
வாய்மையே வெல்லும் கட்டுரை