ஊடகம் பற்றிய கட்டுரை

oodagam katturai in tamil

இந்த பதிவில் இன்று மக்களுடன் இரண்டற கலந்துள்ள “ஊடகம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

எத்துறையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் முதலில் தகவல் தொழில்நுட்பத்துக்கு உடந்தையாக இருப்பது ஊடகங்களே ஆகும்.

ஊடகம் பற்றிய கட்டுரை

ஊடகம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஊடகத்தின் பரிணாம வளர்ச்சி
  3. ஊடகங்களின் நன்மைகள்
  4. ஊடகங்களின் தீமைகள்
  5. உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்கள்
  6. முடிவுரை

முன்னுரை

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகங்கள் உலகளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்களும் சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்து வருகின்றன.

ஊடகங்களே உலக நடப்பை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வழியாகச் செயல்படுகின்றன. சமூக முன்றலில் நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் ஊடகங்களுடன் பிணைக்கப்பட்டே இருக்கின்றோம்.

ஊடகத்தின் பரிணாம வளர்ச்சி

பண்டைய காலங்களில் மனித தகவல் தொடர்பு குகை ஓவியங்கள், வரையப்பட்ட படங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் இடம்பெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கவே படிப்படியாக ஊடக வளர்ச்சி பரிணாமமடையத் தொடங்கியது.

செய்திப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் தற்போதைய சமூக வலைத்தளங்கள் வரை ஊடகங்கள் மக்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து வளர்ச்சி கண்டுள்ளன.

ஊடகங்களின் நன்மைகள்

ஊடகங்கள் மனிதகுலத்திற்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. தொலை தூரங்களில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவும், தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் ஊடகங்கள் உதவுகின்றன.

வெகுஜன ஊடகங்கள் உலகமயமாக்கல் செயன்முறையை அதிகரித்துள்ளன. இதனால் கலாச்சார ரீதியில் நாடுகளை ஒன்றிணைக்கவும், புதிய கலாச்சாரங்கள், பண்பாடுகள், விழுமியங்களை அறிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்கு மகத்தானதாகும்.

சேவைகள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு முதன்மையானதாகும். நவீன உலகில் மின்னனு ஊடகங்களை மனிதன் எங்கிருந்தும் பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது.

ஊடகங்களின் தீமைகள்

ஊடகங்கள் நேரடியாக தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளன. இதனால் தொழில் நுட்பம் இல்லை எனில் ஊடகம் இல்லை என்ற நிலை காணப்படுகின்றது.

ஊடகங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டுள்ளான். குறிப்பாக தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றைக் கூறலாம்.

ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மைத் தன்மை வாய்ந்தவை எனக் கூறிவிட முடியாது. பொய்யான தகவல்கள் பரப்பப்படும் போது சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்கள்

ஊடகங்கள் உலகின் முக்கிய வழிகாட்டிகளாக உள்ளன. இன்றைய நவீன உலகில் மனிதன் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளான்.

எத்துறையை உலகிற்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் முதலில் தகவல் தொழில்நுட்பத்துக்கு உடந்தையாக இருப்பது ஊடகங்களே ஆகும். எனவே தான் இன்று உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளன.

முடிவுரை

உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்முன்னே காட்டுவது ஊடகமே ஆகும். உலகிற்கு பல நன்மைகளை வழங்கும் ஊடகங்களை வழிநடத்தும் ஊடகவியலாளர்கள் நடுநிலையாக எவ்வித எதிர்பார்ப்புமின்றிச் செயற்பட வேண்டும்.

இன்று சில ஊடகங்கள் அதிகார வர்க்கத்தினருக்குச் சார்பாக இயங்குவதனை காணமுடிகின்றது. ஓர் ஐனநாயக நாட்டில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும்.

ஊடகங்கள் என்பது எப்போதும் ஆக்க சக்திக்காகவே பயன்பட வேண்டுமே தவிர அழிக்கும் சக்தியாகப் பயன்படக் கூடாது.

ஊடகங்களானவை அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் பாரிய மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன என்பதனால்தான் உலக வளர்ச்சியில் ஊடகங்களின் வளர்ச்சி இன்றியமையாதது எனக் கூறப்படுகின்றது.

You May Also Like:
ஆசிரியர் பற்றிய கட்டுரை
மாணவர் ஒழுக்கம் கட்டுரை