இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை

சிறுவர் பற்றிய கட்டுரை

இந்த பதிவில் “இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

சிறுவர்களின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கின்றது. அவர்களை சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வளர்க்க வேண்டியது ஒரு நாட்டின் பொறுப்பாகும்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சிறுவர் தினம்
  3. எதிர்கால தேசத்தின் தூண்கள்
  4. சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
  5. சிறுவர்களைப் பாதுகாப்போம்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய சிறுவர்களே நாளைய சமூகத்தின் அடிநாதம் ஆகும். சிறுவர்களே நாட்டின் சொத்துக்கள். அவர்களைப் பேணிக் காப்பதும் நல்வழியில் நடத்துவதும் தலையாய கடமையாகும்.

சிறுவர்களைப் பாதுகாக்கும் போது தான் நாட்டின் எதிர்காலம் சிறப்புப் பெறும். கடந்த காலங்களிலும் எதிர்காலங்களில் சமூகத்தைக் கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பினை சிறுவர்கள் கொண்டுள்ளனர்.

சிறுவர்கள் சிறந்த அறிவுடனும்⸴ திறமையுடனும் வளரும் போது தான் நாட்டின் எதிர்காலம் சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை. இதனால் தான் “இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்ˮ எனக் கூறுகின்றனர். இது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிறுவர் தினம்

சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்குடனும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஓர் தினமாக சிறுவர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் அச்சாணியாக இருக்கும் சிறுவர்களுக்கு என ஓர் தினம் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்.

எதிர்கால தேசத்தின் தூண்கள்

“இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களேˮ என டாக்டர் அப்துல்கலாம் கூறுகின்றார். எதிர்கால தூண்களாக விளங்கும் சிறுவர்களைச் சிறந்த வகையில் பேணிக்காப்பது பெற்றோர்களினதும்⸴ மற்றோர்களினதும் கடமையாகும்.

உலகில் சிறந்த நாடுகள் அனைத்தும் அவர்களது பெருமையை நன்கு உணர்ந்ததால் தான் அவர்களைப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளிலும் அதிக கவனம் செலுத்துகின்றது.

பாதுகாப்பான சூழல்⸴ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு⸴ தரமான கல்வி⸴ மகிழ்வான சூழல் என்பவற்றை சிறுவர்களுக்கு வழங்குவதில் நாடுகள் கவனம் செலுத்துகின்றன. எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் தலைவர்களாக இன்றைய சிறுவர்களே உள்ளனர்.

சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

சிறுவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக சிறுவர் உரிமை மீறல்கள் காணப்படுகின்றன. ஊனமுற்ற சிறுவர்கள்⸴ அனாதைச் சிறுவர்கள் சமூகத்தில் பெரிதும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றனர்.

அவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படும் நிலை இந்தியாவில் அதிகம் காணமுடிகின்றது. அதுமட்டுமன்றி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் வன்முறைகளும் இடம்பெறுகின்றன. வறுமை காரணமாகக் கட்டாயக் கல்வி மறுக்கப்படுகிறது.

குடும்பங்களிலும்⸴ வெளியிடங்களிலும் மோசமான வார்த்தைப் பிரையோகங்களும் புறக்கணிப்புகளும் அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன.

சிறுவர்கள் எதிர்நோக்கும் மற்றுமோர் பாரிய பிரச்சினையாக சிறுவயதுத் திருமணம் காணப்படுகின்றது. போதைப்பொருட்கள் கடத்தலில் சிறுவர்கள் அதிகம் உபயோகிக்கப்படுகின்றமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.

சிறுவர்களைப் பாதுகாப்போம்

சிறுவர்கள் விலைமதிப்பற்ற செல்வங்களாகும். சிறுவர் பராயமானது கள்ளங்கபடமற்ற⸴ மகிழ்ச்சியான⸴ கற்றறிந்து தெரிந்து கொள்ளும் பருவமாகும். மகிழ்ச்சியாக இவர்களைப் பார்த்துக் கொள்ளும் போதுதான் எதிர்காலத்தில் திறமை மிக்கவர்களாகவும்⸴ நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களாகவும் வளர்வார்கள்.

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் கடமை உண்டு. பிள்ளைகளது பாதுகாப்பில் பெற்றோரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அடுத்து ஆசிரியர்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே நாளைய தலைவர்களை நாம் ஒவ்வொருவரும் பேணிப்பாதுகாக்க வேண்டும்.

முடிவுரை

எனவே நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களைச் சுற்றியுள்ள பொறுப்புதாரர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தைச் சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களாயின் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை எதிர்பார்க்கலாம்!

You May Also Like:

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை