குடி குடியை கெடுக்கும் கட்டுரை

Kudi Kudiyai Kedukkum Katturai In Tamil

இந்த பதிவில் “குடி குடியை கெடுக்கும் கட்டுரை” பதிவை காணலாம்.

குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்க்களின் வாழ்க்கை இருள் நிறைந்ததாகவும் அவரை சார்ந்து இருப்பவர்களின் வாழ்க்கையும் கேள்வி குறியாக மாறி விடுகின்றது.

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. குடிப் பழக்கம் ஏற்படக் காரணங்கள்
  3. மது பழக்கமும் சமூக சீர்கேடுகளும்
  4. குடிப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்
  5. குடிப் பழக்கத்தை தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

மதுப் பழக்கமானது அவர்களை மட்டுமல்லாது அவர்களைச் சார்ந்த உறவுகளது வாழ்க்கையையும் கெடுக்கின்றது. இதனாலே தான் “குடி குடியைக் கெடுக்கும்⸴ குடிப் பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்ˮ என்பர்.

உழைக்கும் பணத்தை குடித்து அழிக்கின்ற பலரையே நம் சமூகத்தில் காணக் கூடியதாக இருக்கின்றது.

குடிப்பழக்கம் என்பது ஒருவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் மற்றும் உளப் பிரச்சினைகளுக்கு ஆளான பின்னும் தொடர்ந்து மது அருந்தி வருவதே குடிப்பழக்கம் என்று அழைக்கப்படுகின்றது.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்⸴ தடுக்கும் வழிமுறைகள் பற்றி இக் கட்டுரையில் காண்போம்.

குடிப் பழக்கம் ஏற்படக் காரணங்கள்

குடிப் பழக்கம் ஏற்பட அவர்கள் வாழும் சூழல் ஒரு காரணமாகலாம். மனதில் எழுகின்ற கவலைகளை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள்.

குடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் குடி பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். தீய நண்பர்களின் சேர்க்கை⸴ சினிமாப் படங்களில் சித்தரிக்கப்படும் காட்சிகள் போன்றன பழக்கம் ஏற்பட காரணமாகின்றன.

மது பழக்கமும் சமூக சீர்கேடுகளும்

நாம் வாழும் வாழ்க்கை ஒழுக்கம் உடையதாக இருக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் மிகக் கவனமாக கடைபிடித்து ஒழுக்க நெறி தவறாமல் வாழ்ந்து வந்தனர். இதனால் தான் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக மதுவைப் பார்த்தார்கள்.

சமூகத்தின் பின்னடைவிற்கு மதுப்பழக்கம் முக்கிய காரணமாகின்றது. இன்று மதுக்கடை இல்லாத ஊரே இல்லை என்று கூறுமளவிற்கு சமூகத்தில் மதுப்பாவனைகள் மலிந்து கிடக்கின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை மது பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

சமூகத்தின் அவமான சின்னமாக மதுபாவனை காணப்படுகின்றது. கொலை⸴ கொள்ளை⸴ வன்புணர்வு போன்ற பல சமூகச் சீர்கேடுகள் சமூகத்தில் ஏற்பட குடிப்பழக்கமே முதன்மைக் காரணமாகின்றது.

குடிப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

பல உடல் நலக் கேடுகள் உருவாகின்றன. கல்லீரல் பாதிப்பு⸴ நரம்புத் தளர்ச்சி⸴ இதய நோய்⸴ வயிற்றுப் புண்⸴ மறதி போன்ற பல உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நீண்ட காலத்திற்கு மதுவைத் தவறாகப் பயன்படுத்தினால் மனநிலை பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மிகையாக ஏற்படுகின்றது.

சமூகத்தில் அந்தஸ்து⸴ மதிப்பு⸴ மரியாதைக் குறைவு ஏற்படும். குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நேரிடலாம்.

குடிப் பழக்கத்தை தடுக்கும் வழிமுறைகள்

இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மதுப்பாவனை குறைவடைவதாக இல்லை.

சட்டவிரோத மதுப் பாவனை மற்றும் மதுக்கடைகள் போன்றவற்றினை ஒழிக்க வேண்டும், சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்⸴

தண்டனைகள் அதிகப்படுத்த வேண்டும்⸴ சிகிச்சை மற்றும் ஆயுர்வேத மருந்துகள்⸴ மருத்துவ ஆலோசனைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சமூகத்தில் மதுப் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

மதுப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடாகும். இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மதுப் பாவனையின் தவறு பற்றிய சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுத்து வளர்ப்பது அவசியமாகும். குடிப்பழக்கத்தை ஒழிப்போம் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

You May Also Like:

கருணை பற்றிய கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை