இந்த பதிவில் “கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 1
நான் சுற்றிலும் புதர்கள் நிறைந்த ஒரு பாழடைந்த அறைக்குள் இருந்து கொண்டு பேசுகின்றேன். நான் ஒரு கைவிடப்பட்ட கிழிந்த நிலையிலுள்ள ஒரு புத்தகம்.
என்னுடைய கடந்த கால நினைவுகள் என் மனதை கலங்க செய்கின்றது. அவற்றை என் மனதுக்குள் மீட்டி கொண்டு எனது காலத்தை நான் இங்கே கழித்து கொண்டிருக்கின்றேன். வெய்யிலும் மழையும் எனது அழகான உடலை மேலும் பழுதடைய செய்திருக்கின்றது.
அத்தோடு கறையான்களும் என்னை பதம் பார்க்கின்றது. இத்தகைய துயரங்கள் நிறைந்த வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். முன்பு சில வருடங்களுக்கு முன் நான் ஒரு சிறந்த பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு நாவல் புத்தகம் ஆவேன்.
என்னுடைய வெளி அட்டையின் நிறம் பச்சை நிறத்தினால் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். என்னை எழுதிய ஆசிரியர் ஒரு பிரபல்யமான நாவலாசிரியர் ஆவார். என் போன்ற பல புத்தகங்களை ஒரு புத்தக கண்காட்சியில் பார்த்த எனது உரிமையாளர் என்னை ஆர்வத்தோடு தனது வீட்டுக்கு எடுத்து சென்றார்.
வாசிப்பின் மீது அதிக அக்கறை கொண்ட அவருக்கு புத்தகங்கள் என்றால் உயிர். அவர் தனது வீட்டில் உள்ள கண்ணாடி அலுமாரியில் என்னை வைத்து அழகு பார்த்தார். தனது ஓய்வு நேரங்களில் என்னை ஆர்வத்தோடு படிப்பார்.
பின்பு பாதுகாப்பாக எங்களை வைத்திருப்பார். இவ்வாறு மகிழ்ச்சியாக எனது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. திடிரென ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்திருந்தார். அவர் என்னை வாசிக்க ஆர்வப்பட்டு என்னை அவரிடம் இரவலாக பெற்று சென்றார்.
அவர் கொண்டு சென்று என்னை வாசித்து முடித்து விட்டு தவறுதலாக என்னை அவரது மகனிடம் தந்து விட்டு வெளியே சென்று விட்டார். சிறுவனான அவன் சற்று விளையாட்டு தனமாக என்னை கிழித்து விட்டான்.
எனது வாழ்வே முடிந்தது போல நான் அன்று உணர்ந்தேன். தந்தைக்கு தெரியாமல் எங்கோ ஓர் பழைய அறையில் போட்டு விட்டு அவன் சென்று விட்டான். அன்றிலிருந்து எனது நிலை இவ்வாறு கவலையோடு கழிந்து செல்கின்றது.
கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை – 2
அன்றொரு நாள் பாடசாலையின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் பாடசாலை ஆரம்பிக்கின்றது. சிறுவன் கண்ணன் தனது புதிய வகுப்பை நோக்கி மகிழ்ச்சியோடு வருகின்றான்.
அன்றைய தினம் அந்த மாணவர்களுக்கு புதிய பாடநூல் வழங்கும் நிகழ்வானது வகுப்பாசிரியரினால் இடம் பெறுகின்றது. அன்றைய தினமே என்னை கண்ணன் என்ற மாணவனுக்கு வழங்கினார்கள்.
நான் ஒரு ஆங்கில பாட புத்தகம். எங்களை மகிழ்ச்சியோடு வீட்டுக்கு எடுத்து சென்ற அவன் எனக்கு அழகான உறை இட்டு அழகாக தனது புத்தக பையினுள் வைத்து எடுத்து கொண்டு தினமும் பாடசாலைக்கு சென்று வந்தான்.
நான் அழகான வெளிப்புற தோற்றம் உடையவன். எனக்குள்ளே பல வண்ணப்படங்களுடன் கூடிய கதைகள், கவிதைகள் போன்றன காணப்படுகின்றன. அதனால் கண்ணனுக்க என் மீது ஒரு அலாதி பிரியம்.
இவ்வாறு எனக்கும் அவனுக்குமான நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. இவ்வாறு காலம் நகர்ந்து செல்கின்றது. ஒரு நாள் கண்ணன் தனது நண்பர்களோடு இடைவேளை நேரம் விளையாடுவதற்காக மைதானத்திற்கு சென்று விட்டான்.
அந்த நேரம் வகுப்பில் யாரும் இல்லாத சமயம் வகுப்பில் இருந்த ஒரு பொல்லாத பையன் கண்ணனுக்கு தெரியாமல் என்னை திருடி சென்று ஒரு மறைவிடத்தில் ஒழித்து விட்டான். அவனுக்கும் கண்ணனுக்கும் இருந்த ஒரு கோபத்தினால் அவன் அவ்வாறு செய்து விட்டான்.
இந்த செயலினால் கண்ணன் மனம் கலங்கி என்னை எல்லா இடங்களிலும் தேடி தேடி களைத்து விட்டான். இதனால் கவலையோடு அன்று வீடு சென்று விட்டான்.
என்னை கவனிக்க யாருமே இல்லை எனும் நிலையில் என்னை எலிகளும் கறையான்களும் பதம் பார்க்க துவங்கின இதனால் இன்று கிழிந்த நிலையில் கவலையோடு எனது வாழ்வை நான் போக்கி கொண்டிருக்கின்றேன்.
You May Also Like: