இந்த பதிவில் “நேர்மை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
நற்பண்புகளில் உயர்வான நற்பண்பான நேர்மை எனும் பண்பினை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் உயர்வான வாழ்வை வாழ முடியும்.
நேர்மை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நேர்மையின் அவசியம்
- நேர்மையின் பயன்கள்
- நேர்மை உள்ளவர்களின் வாழ்க்கை
- நேர்மையற்றவர்கள் வாழ்க்கை
- முடிவுரை
முன்னுரை
“நேர்மை என்பது ஞானம் என்ற புத்தகத்தின் முதல் அத்தியாயம்ˮ என்றார் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்சன். நேர்மையே மனித வாழ்வின் உன்னதம். உயரிய வாழ்க்கை குறியீடு ஆகும்.
நேர்மை சுயமரியாதையைப் பெற்றுத்தர வல்லது. சந்தேகத்துக்கிடமின்றி நல்லொழுக்கமாக இருப்பதால் நேர்மை சிறந்த பண்புகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக மாறுகின்றது. மனித வாழ்வின் மாபெரும் வலிமையும் அர்த்தமும் நேர்மை ஆகும்.
மனிதனாகப் பிறந்த நாம் செய்கின்ற தொழில்⸴ வாழ்கின்ற வாழ்க்கை நம்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு என அனைத்திற்கும் நேர்மையாக இருப்பதே உயரிய பண்பாகும். நேர்மை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நேர்மையின் அவசியம்
வாழ்வில் வளம் பெற்று உயர்வடைய வேண்டும் எனில் நேர்மை அவசியமாகும். பிறர் எம்மீது நம்பிக்கையையும் மதிப்பும் மரியாதையையும் கொள்ள நேர்மை அவசியமாகும். வாழ்வில் மனநிறைவு கிடைப்பதற்கு நேர்மை அவசியம்.
மனசாட்சிக்கு துரோகம் செய்யாது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க நேர்மை தேவைப்பாடான ஒன்றாகும். மகிழ்வான வாழ்க்கையின் அர்த்தமே நேர்மை தான். வெற்றியினைப் பெற்றுத்தர⸴ சமூகத்தில் நற்பிரஜையாக வாழ⸴ எதிர்காலத்தில் உயர்ந்த இடத்தை அடைய நேர்மை அவசியமாகும்.
நேர்மையின் பயன்கள்
சீரான வாழ்வினை நேர்மை நமக்களிக்கும். பிறரை நம்மீது நம்பிக்கை கொள்ள வைக்கும். நேர்மை நல்ல மனிதர்களுடன் வாழ உதவும். ஏழையாக இருந்தாலும் நேர்மையாய் இருப்பின் அவர்களது வாழ்க்கை வளம் பெறும்.
உயரிய சிந்தனை⸴ நல்லொழுக்கம்⸴ சுயநலமற்ற எண்ணம்⸴ போன்றவற்றை நேர்மை நமக்களிக்கும். நேர்மையானது மனிதர்களிடையே இயல்பான கம்பீரத்தை உருவாக்கும். நேர்மையானவர்கள் முன்னுரிமை கொடுத்து நடத்தப்படுவார்கள்.
நேர்மை உள்ளவர்களின் வாழ்க்கை
நேர்மையுள்ளவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்வர். வையம் போற்றும் மகான்களாகத் திகழ்வார்கள். பாரினில் அவர்கள் பெருமை என்றும் நிலைத்திருக்கும். நேர்மையுள்ளவர்களே நம்பிக்கையின் சின்னமாக விளங்குவர்.
காந்தியடிகள் நேர்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது மனதிற்கு எது சரயெனப்பட்டதோ அதை நேர்மையான வழியில் செயல்படுத்தினார். நேர்மையும் உண்மையுமால் தான் மகாத்மா ஆனார். பொது வாழ்விலும் காந்தியடிகள் நேர்மையாக வாழ்ந்தால் தான் பாரத தேசத்தின் தந்தையானார்.
நேர்மையற்றவர்களின் வாழ்க்கை
நேர் வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வளவு உயரமான இடத்திற்கு சென்றாலும் விரைவில் வீழ்ந்து விடுவர். நேர்மையற்ற வழியில் வாழ்வில் தேடிக்கொள்ளும் செல்வங்கள் நிலைத்திருக்காது.
குறுக்கு வழியில் பெறும் வெற்றி என்பது உண்மையில் தோல்வியாகும். சிறு சிறு செயல்களில் நேர்மைக்கு மாறாகவும்⸴ உண்மைக்குப் புறம்பாகவும் இருப்பவர்கள் பெரும் செயல்களிலும் நேர்மையாக இருக்க முடியாது.
முடிவுரை
நேர்மையே அழகிய⸴ மகிழ்வான⸴ உயர்வான வாழ்விற்கு அடித்தளமாகும். மனித வாழ்வின் உன்னதம். சிறந்த பண்புகளில் நேர்மையே மகத்தானது. வாழ்வில் உச்சம் தொட நினைப்பவர்களின் கலங்கரை விளக்கு நேர்மையாகும்.
இன்று நேர்மையான மனிதர்களைக் காண்பது அரிது என்பது வருத்தமளிக்கவே செய்கின்றது. நேர்மையற்ற வாழ்க்கை நிலையற்றது⸴ நேர்மையான வாழ்க்கையே நிரந்தரமானது என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நேர்மையுடன் வாழ்ந்து வாழ்வில் முன்னேறுவோமாக.
You May Also Like: