நீர் மேலாண்மை கட்டுரை

Neer Melanmai Katturai In Tamil

இந்த பதிவில் நீர் மேலாண்மை கட்டுரை பதிவை காணலாம்.

இனி ஒரு உலக போர் உருவாகுமானால் அது நீருக்கானதாக தான் இருக்கும் என சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைய காலநிலை மாற்றங்கள் நீர் மேலாண்மையை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

  • நீர் மேலாண்மை
  • Neer Melanmai Katturai In Tamil
நீரின்றி அமையாது உலகு கட்டுரை

நீர் மேலாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நீர்மேலாண்மையின் அவசியம்
  3. நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை
  4. இன்றைய தவறான நீர்மேலாண்மையும் பிரச்சனைகளும்
  5. முடிவுரை

முன்னுரை

“நீரின்றி அமையாது உலகு” என்கின்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க இப்பூமியில் அத்தனை ஜீவராசிகளும் பிழைத்திருக்க நீரானது அவசியமானதாகும்.

நீரானது பூமிக்கு இயற்கையின் கொடையால் கிடைக்கிறது இந்நீரை பாதுகாத்து மக்கள் தம் தேவைக்கு பயன்படுத்தி கொள்வதும் சேர்த்து வைக்கும் முறைகளையே நீர் மேலாண்மை என்று கூறுகிறார்கள்.

இந்நீர்மேலாண்மையில் தமிழர்கள் மிகச்சிறப்பான முறையில் நீர் மேலாண்மையினை மேற்கொண்டிருந்தனர்.

இக்கட்டுரையில் நீர் மேலாண்மையின் அவசியம், நம் முன்னோர்களின் நீர்மேலாண்மை மற்றும் இன்றைய தவறான நீர் மேலாண்மையும் பிரச்சனைகளும் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

நீர்மேலாண்மையின் அவசியம்

குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து உழம்தொட்டு
உழுவயல் ஆக்கி வளம்தொட்டு பாகுபடும் கிணற்றோடு
என்று இவை பார்படுத்தால் சொர்கக்ம் இனிது

என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது. அதாவது குளங்கள், கிணறுகள் போன்ற நீர் நிலைகளை உருவாக்கும் செயல்களை செய்பவர்கள் சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்கிறது.

அதாவது ஆறுகள், குளங்கள், ஏரிகள் இவை போன்ற நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டாலே இப்பூமி சொர்க்கமாக இருக்கும். நீரை தேக்கி வைக்கும் நீர் மூலாதாரங்கள் பாதுகாக்கபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பெய்கின்ற மழைநீரானது வீணாக கடலில் கலந்துவிடாது அவற்றினை தேக்கி வைப்பதனால் தான் மழை பெய்யாத காலங்களில் வறட்சியை தடுத்து பயிர்ச்செய்கை, குடிநீர் போன்றவற்றை பெற்றுகொள்ள முடியும் என்பதனால் தான் நம் முன்னோர்கள் குளங்கள் அணைகளை உருவாக்கினர்.

இவற்றின் மூலமாக தரைக்கீழ் நீரும் குறையாது பாதுகாக்கப்படும். ஆகவே நீர் மேலாண்மை இருப்பதனால் தான் நீரை சரியாக பயன்படுத்த முடிகிறது.

நம் முன்னோர்களின் நீர்மேலாண்மை

நீர் தான் விவசாயத்துக்கு ஆதாரம் எனவே நீர் வளத்தை பாதுகாப்பதன் மூலம்தான் உணவு உற்பத்தியை உயர்த்த முடியும்.

எனவே தான் மக்களும் பசி பட்டினி இன்றி மகிழ்வாக வாழ்வார்கள் நாடும் செழிப்பாக இருக்கும் என்பதால் நம் முன்னோர்கள் நீரை பாதுகாக்க குளங்களை அதிகமாக உருவாக்கினார்கள்.

வரலாற்று காலங்களில் மன்னர்கள் சிறந்த தொழில்நுட்பங்களோடு பொருத்தமான இடங்களில் ஆறுகளை மறித்து பாரிய குளங்களை உருவாக்கினர். இவற்றுக்கு அதிக நிதியை செலவழித்து குளங்கள், கால்வாய்களை உருவாக்கினார்கள்.

ஒரு ஆறு அதில் இருந்து ஒரு ஏரி அவ்வாறே ஆறு முடியும் வரையில் சங்கிலி தொடராக பல ஏரிகளை உருவாக்கினர். கோயில்களோடு சேர்த்து குளங்களையும் அமைத்தமை தமிழர்களின் மிகச்சிறந்த விடயம் ஆகும்.

வைகையாற்றுக்கு குறுக்காக கரிகால சோழனால் உருவாக்கப்பட்ட கல்லணை அனைவராலும் வியக்கப்படும் நீர்ப்பாசன தொழில்நுட்பமாகும்.

இவ்வாறு நமது முன்னோர்கள் நீரின் அவசியம் அறிந்து நீரை பாதுகாத்தனர்.

இன்றைய தவறான நீர் மேலாண்மையும் பிரச்சனைகளும்

இன்றைக்கு ஒரு நீர்நிலைகளையோ ஏரிகளையோ உருவாக்குதல் என்பது இயலாத காரியமாகும். ஆகவே ஏற்கனவே உருவாக்கப்பட்டவற்றையாவது பாதுகாக்க வேண்டும்.

இன்றைய மக்களும் அரசாங்கமும் நீர்மேலாண்மையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அபிவருத்தி திட்டங்களால் ஏரிகள் குளங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டுவதனால் நீர் நிலைகள் தூர்ந்து போகின்றன.

அத்துடன் ஆறுகள் நீர் நிலைகளை மாசுபடுத்தும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் குப்பைகள் போன்றவற்றால் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றனர். குழாய்கிணறுகளை அதிகம் உருவாக்கி நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர்.

மழைநீர் வீணாக கடலில் சேரவும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்வகையில் கால்வாய்களை மூடி அபிவருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வகையான செயற்பாடுகளால் மழைகாலங்களில் வெள்ள அனர்த்தமும் கோடைகாலத்தில் வறட்சியும் ஏற்படுகிறது.

முடிவுரை

வரப்புயர நீருயரும் நீர் உயர்ந்தால் நெல் உயரும் நெல் உணர்ந்தால் குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான்” என்று ஒளவையார் கூறியுள்ளார்.

எனவே நீர் மேலாண்மையை நாம் சரியாக பேணுகின்ற போது தான் எமது வாழ்வும் விவசாயமும் சிறப்பாக அமையும் இல்லாவிடின் வறட்சியால் விவசாயம் மனித வாழ்க்கை என்பன கேள்விக் குறியாகிவிடும்.

இனி ஒரு உலக போர் உருவாகுமானால் அது நீருக்கானதாக தான் இருக்கும் என சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே நீர்மேலாண்மை தொடர்பாக கவனம் செலுத்துவோம்.

You May Also Like :

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை

மழைநீர் சேகரிப்பு கட்டுரை