இந்த பதிவில் “நான் கண்ட வீதி விபத்து கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
நான் கண்ட வீதி விபத்து கட்டுரை -1
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நானும் எனது அண்ணாவும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க நகரத்தின் மத்தியில் இருக்கும் சந்தைக்கு சென்றோம். ஓய்வு நாள் என்பதால் அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக சந்தைப்பகுதி மிகுந்த பரபரப்பாக இருந்தது.
அதற்கு ஏற்றாற் போல் வாகனங்களும் சாலையில் அதிகமாக சென்றன. நானும் அண்ணாவும் அவரது மோட்டார் சைக்கிளில் சென்றமையினால் வாகன நெரிசல் எங்களுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
நகரத்தின் மத்தியில் இருக்கும் பல சாலைகள் ஒன்றினையும் சந்தியில் உள்ள சுற்று வளைவில் பொலிஸ் உத்தியோகஸ்தர் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிளினை சந்தையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு திரும்பிய போது திடீரென்று பாரிய சத்தம் ஒன்று கேட்டது.
என்ன சத்தம் என்று நானும் அண்ணாவும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்த போது பொருட்களை ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றுடன் கார் ஒன்று மோதியிருப்பதைக் கண்டேன்.
விபத்தை கண்டு நான் அதிர்ச்சியடைந்து அவ்விடத்திலேயே உறைந்து போயிருந்தேன். அவ்விடத்தில் வேகமாக மக்கள் கூடினர். காரின் சாரதி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதிலிருந்த ஏனைய மூவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது.
அங்கிருந்த பொலிஸார் விரைந்து வந்து மக்களை அப்புறப்படுத்தி அம்புலன்ஸ் வண்டியினை வரச்செய்தனர்.
அதன் பின்னர் காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் வண்டியினுள் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பினர். அன்று கண்ட காட்சியை என்னால் இன்று வரை மறக்க முடியாமல் உள்ளது.
நான் கண்ட வீதி விபத்து கட்டுரை – 2
பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது வீதியோரத்தில் வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று மோதியது. அந்த முதியவர் வீதியில் தூக்கி வீசப்பட்டார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவரது கைகளில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்த வயோதிபர் சுய நினைவை இழந்து உயிரற்றவர் போல வீதியில் கிடந்தார்.
அங்கு இருந்தவர்கள் இன்னுமொரு முச்சக்கர வண்டியை அழைத்து வந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகிய போது அவ்விடத்திற்கு பொலிஸார் வந்தனர்.
விபத்தை நேரில் நான் கண்டதனால் எவ்வாறு நடந்தது என என்னிடம் கேட்டு குறிப்புகளை எழுதிக் கொண்டனர். பின்னர் முதியவருடன் நானும் வைத்தியசாலைக்கு சென்றேன். வயோதிபருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிக நேரத்திற்கு அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை. இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியர் கூறிய போது சற்று ஆறுதலாக இருந்தது. முதியவரின் உறவினர்கள் பதற்றத்துடன் வைத்தியசாலைக்கு வந்தனர்.
அவர்களிடம் நடந்தவற்றை கூறி ஆறுதல் சொல்ல பொலிஸார் முயற்சித்தனர். அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு தக்க தண்டணை அளிப்பதாகவும் கூறினர்.
நேரம் சென்றமையினால் நான் முதியவரின் உறவினர்களிடம் கூறிவிட்டு வீட்டிற்கு திரும்பினேன்.
வீட்டிற்கு செல்லும் போது அவரின் நினைவும் நடந்த விபத்தும் என் மனதை விட்டு மறையவில்லை. வீட்டில் உள்ளவர்களிடமும் கூட நான் கண்ட அந்த விபத்தினை பற்றி கூறினேன்.
You May Also Like: |
---|
ஆசிரியரை மதிப்போம் சிறுவர் கட்டுரை |
என் வாழ்வின் லட்சியம் கட்டுரை |