தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

therthal vizhipunarvu katturai in tamil

இந்த பதிவில் “தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

தேர்தல் ஊடக சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் நாட்டினை வளம் பெறச் செய்ய முடியும்.

தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. ஜனநாயகமும் தேர்தலும்
  3. தேர்தல்களின் அவசியம்
  4. தேர்தல் முறைகேடுகள்
  5. சரியான தேர்வு
  6. முடிவுரை

முன்னுரை

தேர்தல் என்பது ஒரு நாட்டின் பொது மக்கள் தங்களை நிர்வகிப்பதற்காகத் ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் முறையாகும். தேர்தல்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பவையாகும்.

தேர்தல்கள் சரித்திரத்தில் மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே அமுலில் இருந்து வந்துள்ளது. அதாவது தேர்தல் என்ற எண்ணக்கரு முற்காலத்திலேயே தோன்றியது.

மத்திய காலப்பகுதியில் உரோமானியப் பேரரசர் மற்றும் போப்பாண்டவர் போன்றவர்களைத் தெரிவு செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்கள் தமது நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலானது ஜனநாயகமாக நடைபெற வேண்டும்.

வாக்களிப்பவர்கள் தேர்தல் விழிப்புணர்வு உடையவர்களாகவும் இருத்தல் அவசியமாகும். தேர்தல் விழிப்புணர்வு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஜனநாயகமும் தேர்தல்களும்

ஜனநாயக ஆட்சி முறையே உலகின் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்கிறது. ஜனநாயக பண்புகளில் ஒன்றாகவும், முக்கியமானதாகவும் தேர்தல்கள் காணப்படுகின்றன.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வன்முறை இன்றித் தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உரித்துடையவர்களாவர். வன்முறையற்ற தேர்தல் ஜனநாயக நாடுகளில் விரும்பத்தக்கதாகவுள்ளது.

தேர்தலின் அவசியம்

தேர்தல் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் முக்கியமானவையாகும். மக்கள் தமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு தேர்தல்கள் அவசியமாகும்.

அரசாங்கத்தினை மாற்றியமைக்கவும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினைத் தொடர்ந்து ஆட்சிபீடத்தில் தக்க வைப்பதற்கும் தேர்தல்கள் அவசியமாகும்.

தேர்தல்கள் மக்களின் ஜனநாயக ஆயுதங்களாகும். தேர்தல் இல்லையெனில் குடும்ப ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, பொறுப்பற்ற ஆட்சி என்பன இடம் பெறுவதற்கு காரணமாகி விடும். இதனால் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படும். எனவே இதனைத் தடுப்பதற்கு தேர்தல்கள் அவசியமாகும்.

தேர்தல் முறைகேடுகள்

தேர்தலில் முறைகேடுகளை பல சந்தர்ப்பங்களில் நாம் காணக் கூடியதாக உள்ளது. எமக்குக் கிடைத்த மிகப்பெரிய ஜனநாயக உரிமையான தேர்தல் வாக்களிப்பினைச் சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்.

இதனைத் துஷ்பிரயோகம் செய்வது தேர்தல் முறைகேடாகும். சலுகைகளுக்காகத் தவறான வாக்களிப்பினைச் செய்வது நாட்டுக்கு நாம் இழைக்கும் துரோகச் செயலாகும்.

நாம் தவறாக வாக்களித்தால் தவறான மற்றும் திறமையற்றவர்கள் ஆட்சி பீடம் வருவார்கள். இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். இவற்றினை நாம் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

சரியான தேர்வு

நாம் சரியான ஆட்சியாளர்களை தெரிவு செய்வது அவசியமானதாகும். சரியான தேர்வின் மூலம் நாட்டினை வளம் பெறச் செய்ய முடியும். மாறாகத் தவறான ஆட்சியாளர்களை தெரிவு செய்தல் நாட்டினைப் படுகுழிக்குள் தள்ளுவதற்குச் சமமாகி விடுகின்றது.

சலுகைகள், பணத்திற்காகப் பிழையான வழியில் தேர்வினை மேற்கொள்ளும் போது அது நாட்டு மக்களை பல வகையிலும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடும்.

முன்னோர்கள் விட்ட தவறை நாமும் செய்யாமல் அதிலிருந்து பாடத்தைக் கற்று எமக்கு கிடைக்கப் பெற்ற ஜனநாயக உரிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

ஓர் நாட்டினுடைய சுபீட்சமான எதிர்காலத்தைத் தீர்மானிப்பது சிறந்த அரசாங்கமாகும். இத்தகைய அரசாங்கத்தினை தீர்மானிக்கும் பாரிய சக்தியான தேர்தலினைச் சரியான வகையில் மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு, மக்கள் நலன் போன்றன தேர்தல்களின் தெரிவில் தங்கியுள்ளது. எனவே சிறந்த தேர்வினை மேற்கொள்ள மக்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு அவசியமாகின்றது.

மக்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு காணப்படும் போதே சிறந்த அரசாங்கத்தினை தெரிவு செய்து நாட்டின் அபிவிருத்தியையும், முன்னேற்றத்தையும் வளம் பெறச் செய்யமுடியும்.

You May Also Like:

மத நல்லிணக்கம் கட்டுரை

வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை