நட்பு கட்டுரை – Natpu Katturai

Natpu Katturai In Tamil

எதையும் எதிர்பார்க்காது வாழ்வின் இறுதிவரை நம்மோடு உறுதுணையாக இருக்கும் “நட்பு கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

இன்றைய உலகில் உறவுகளை விட உண்மையான நட்பு வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் நம்முடன் உறுதுணையாக நின்று வாழ்வின் இறுதிவரை உண்மையுடன் இருக்கும்.

நட்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உண்மையான நட்பின் அடையாளம்
  3. உலக நட்பு தினம்
  4. நட்பு பற்றி திருக்குறள் கூறுவது
  5. நட்பின் சிறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

நாட்டிற்கு எல்லை உண்டு ஆனால் நட்புக்கு எல்லை இல்லை. நட்பு வயது⸴ பால்⸴ கலாச்சாரம்⸴ மொழி⸴ அனைத்தையும் கடந்ததாகும். நட்புக் கொண்ட ஒருவருக்கு எப்போதும் வாழ்க்கையில் பெரும் துன்பம் நேர்வதில்லை.

வாழ்வில் எத்தனையோ நண்பர்களுடன் பழக நேரிடும். ஆனால் சில உன்னத மனிதர்களிடம் மட்டுமே நட்பு முளைக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் உறவினர்களை விட நண்பர்களே அதிகம் புரிந்து வைத்திருப்பவர்களாகவும் உறுதுணையுடையவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய உன்னத நட்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உண்மையான நட்பின் அடையாளம்

உண்மையான நட்பானது எதையும் எதிர்பார்க்காது துன்பம் வரும் போது முதலில் உதவக்கூடியது உண்மை நட்பு. ஜாதி⸴ மத பேதமின்றி பழக கூடியதே உண்மை நட்பின் அடையாளம் ஆகும்.

நட்பானது ஆறுதல் கூறவும் துன்பத்தின் போது கூடவே துணையாக இருக்கும். உண்மை நட்பு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ எதிர்பார்ப்புடன் உதவி செய்வதோ உண்மை நட்பில் என்றும் கிடையாது.

உலக நட்பு தினம்

உலகின் உன்னத உறவு நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நட்பின் மகத்துவத்தை அறிந்ததன் விளைவே உலக நட்பு தினம் கொண்டாடப்படுகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

ஏனைய தினங்களுடன் ஒப்பிடும்போது மனித விழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாக இந்த உலக நட்பு தினம் காணப்படுகின்றது.

நட்பு பற்றி திருக்குறள் கூறுவது

திருக்குறளை விட நட்பை பற்றிய புரிதல் மற்றும் விளக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவ்வுலகில் எந்த நூலிலும் இல்லை என்று கூறினால் அது மிகையாகாது.

“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள” என வள்ளுவர் கூறுகின்றார்.

அதாவது நட்பை போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமில்லை. நட்பைப் போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை என்பது பொருளாகும்.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

அதாவது நமது உடலில் உள்ள உடையானது நம்மிடமிருந்து நழுவும் போது எம்மை அறியாமல் நம் கையானது அந்த உடையை சரி செய்யும். அதுபோல் நண்பனுக்குத் துன்பம் ஏற்படும்போது நாம் விரைந்து சென்று அந்தத் துன்பத்திலிருந்து அவரை நீக்க வேண்டும்.

இதுவே உண்மையான நட்பின் அடையாளம் என்கின்றார்.

நட்பின் சிறப்பு

வளர்பிறை சந்திரனைப் போல் நட்பு நாளுக்கு நாள் வளர வல்லது. இன்பத்தையும்⸴ அன்பையும் அள்ளித் தந்து அதனை வாழ்நாள் முழுவதும் தொடர செய்யக் கூடியது. குற்றம் செய்யும் ஒருவனை திருத்தி நல்வழிப்படுத்த கூடியது உண்மை நட்பின் சிறப்பம்சமாகும்.

எந்த விதமான பேதமும் வேற்றுமையும் அறிய முடியாது. துன்பம் வரும்போது ஆறுதலையும்⸴ அரவணைப்பையும் கொடுப்பது நட்பின் சிறப்பம்சமாகும்.

முடிவுரை

முகம் மட்டும் மலர நட்புக் கொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்புக் கொள்வதே உண்மையான நட்பாகும். தீய நட்புக் கொள்ளாது நல்ல நண்பர்களைப் பெற்று இன்பத்திலும் துன்பத்திலம் பங்க கொண்டு உறுதுணையாக இருந்து நாமும் வாழ்வில் உயர்வோம்.

You May Also Like:

நட்பு பொன்மொழிகள்
அறம் செய்ய விரும்பு கட்டுரை