கல்வி கண் திறந்தவர் கட்டுரை

kalvi kan thirantha kamarajar katturai in tamil

இந்த பதிவில் “கல்வி கண் திறந்தவர் கட்டுரை” பதிவை காணலாம்.

நாட்டுப்பற்றினால் காங்கிரஸ் கட்சியில் தொண்டராக இணைந்து பின் தமிழக முதல்வர் பதவியினையும் அடைந்தார்.

கல்வி கண் திறந்தவர் கட்டுரை

கல்வி கண் திறந்தவர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வாழ்க்கை
  • கல்விப் பணி
  • நாட்டுப்பணி
  • ஆளுமை
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் நாட்டில் பிறந்து தன்னலம் துறந்து தேசப்பணிக்கும் மக்கள் பணிக்கும் உயிர் உடமைகளை அர்பணித்தவர். தமிழ் நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் முதன்மையானவர்.

ஏழையின் வீட்டை நாடி கல்வியை செல்ல வைத்தவர். தலைநிமிர்ந்த தமிழகத்தை காணவிரும்பி அயராது உழைத்த தன்னலமற்ற நேர்மையே வடிவான தலைவர் கல்வி கண் திறந்த காமராஜர் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

வாழ்க்கை

காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ம் திகதி விருதுநகரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் குமாரசாமி தாயார் சிவகாமியும் ஆவார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த பின் தனது மாமாவின் கடையில் வேலை செய்தார்.

செய்தித்தாள்களை படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டும் அரசியலறிவையும் நாட்டுப்பற்றையும் வளர்த்தார்.

இவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின. பின் நாட்டுப்பற்றினால் காங்கிரஸ் கட்சியில் தொண்டராக இணைந்து பின் தமிழக முதல்வர் பதவியினையும் அடைந்தார்.

கல்விப் பணி

ஏழ்மை காரணமாக சிறுவயதிலேயே தம் படிப்பை தொடர முடியாத காமராஜர் தனது இந்த நிலை மற்ற சிறுவர்களுக்கும் வரக்கூடாது எனவும் கல்வியறிவற்ற சமூகம் வேறு எத்துறையிலும் வளர்ச்சியடைய முடியாது எனவும் உணர்ந்து இலவச கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஏழை பணக்காரன் வேறுபாடு இருக்க கூடாது என்பதற்காக பள்ளியில் சீருடையை கட்டாயமாக்கினார்.

கட்டாய கல்வி, இலவசக்கல்வி, இலவச மதிய உணவு திட்டம் எனப் பல திட்டங்களை உருவாக்கி ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தியமையால் கல்வி கண் திறந்தவர் என அழைக்கப்படுகிறார்.

நாட்டுப்பணி

காமராஜர் கல்வித்துறையில் மட்டுமன்றி தொழிற்துறை, நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள், போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகமெங்கும் பல்வேறு அணைகளை கட்டி நீர்வளத்தை பெருக்கினார்.

நில வளத்தை உயர்த்தினார், பல தொழிற்சாலைகளை நிறுவினார். மின் உற்பத்தியை பெருக்கி தொழிற்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய செய்தார்.

விவசாயத்தை போல தொழில் வளர்ச்சிக்கான அளவு கோலும் காமராஜர் ஆட்சியில் மேல் நோக்கியே சென்றது. இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள்தான் காமராஜரின் ஆட்சிகாலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று பறை சாற்றுகின்றன.

ஆளுமை

1963ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரே நியமிக்கப்படும் அளவிற்கு அவரின் செல்வாக்கு கட்சியின் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியை பிரதமராய் அரியணை ஏற்றியமை இவரது ஆளுமையின் வெளிப்பாடாகும்.

தனது ஆளுமைகளினால் கருப்பு காந்தி, படிக்காத மேதை, ஏழைப்பங்காளர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, அரசரை உருவாக்குபவர் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றுக் கொண்டார்.

முடிவுரை

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத் தொண்டு செய்வதிலேயே அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.

1976 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இப்பெருந்தலைவர் போல இன்னொரு தலைவரை காணுதல் அரிதாகும்.

You May Also Like:
கக்கன் வாழ்க்கை வரலாறு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு