தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

Tamil Mozhi Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை தொகுப்பை காணலாம்.

உலகின் மூத்த மொழியான தமிழ் மற்ற மொழிகளுக்கு இல்லாத பல சிறப்பும் பெருமைகளும் தன்னகத்தே கொண்டது.

இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளை உருவாக்கிய பெருமையும் தமிழுக்கு உண்டு.

  • தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்
  • Tamil Mozhi Sirappu Katturai In Tamil
நீரின்றி அமையாது உலகு கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தொன்மை
  • சிறப்பு
  • தமிழ் வளர்த்த புலவர்கள்
  • தனித்தன்மை
  • முடிவுரை

முன்னுரை

உலகின் முதல் மொழி என்று வரலாற்றாளர்களால் போற்றப்படும் மொழி எம்முடைய தமிழ் மொழியாகும்.

சுப்பிரமணிய பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று கூறி தமிழ் மொழியினை சிறப்பித்துள்ளார்.

இதற்கு காரணம் பாரதியார் ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தமையினால் ஏனைய மொழிகளைக் காட்டிலும் சிறந்த மொழி தமிழ் என சிறப்பித்துக் கூறியுள்ளார்.

தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து என நான்கு வகையான எழுத்துக்களைக் கொண்டுள்ளதுடன் ஒட்டு மொத்தமாக 247 எழுத்துகளைக் கொண்டது.

அத்துடன் இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. திராவிட மொழிகளில் மூத்த மொழியாக விளங்குவது தமிழ் மொழியாகும்.

எத்தகைய காலமாற்றத்திலும் எல்லா புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தொன்மை

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி.” தமிழானது உலகில் காலம் பிறக்கும் முன் பிறந்தது. எக்காலத்திலும் நிலையாய் இருப்பது.

நீதி நூல் ஆகிய திருக்குறள், சமய நூல்கள், சித்தர்களின் பாடல்கள், சங்க கால இலக்கியங்கள், இலக்கணங்கள் இதன் தொன்மைக்குச் சான்றாக உள்ளன.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷியன் போன்ற மொழிகள் தோன்றுவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கணத்துக்கு ஒரு தொல்காப்பியம், இலக்கியத்திற்கு சங்க இலக்கியம், நீதி இலக்கியங்கள் என பல இலக்கியங்களை கண்டு விட்ட ஒரு பழமையான மொழி தமிழ் மொழியாகும்.

இது கிட்டத்தட்ட இருபதாயிரம் வருடங்கள் பழமையான மொழியாகும். உலகில் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி தமிழாகும்.

குறிப்பாக முதல் தமிழ்ச் சங்கம், இரண்டாம் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தமிழ்ச்சங்கம் என மூன்று சங்கங்கள் மூலம் வளர்க்கப்பட்ட மொழியாகும்.

பிரான்சை தலைமையாகக் கொண்ட யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக நினைவு பதிவுகளில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு

தமிழர்கள் தமிழினை மொழியாக மட்டும் இல்லாமல் கடவுளாகவும் வழிபடுகின்றனர். தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு அருகில் தமிழ் மொழிக்கு தமிழ்த்தாய் எனும் பெயரில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் பேசப்படுகின்ற மொழிகளுக்கு அடிப்படை தமிழ்மொழியே ஆகும்.

சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்துகின்றன. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

இந்த இலக்கியங்கள் தோன்றிய சமகாலத்தில் உலகில் இருந்த வேறு எந்த மொழியிலும் இவை போல் விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தோன்றவில்லை.

மக்களின் அக வாழ்க்கையை அகத்தினை என்றும் புற வாழ்க்கையை புறத்திணை என்றும் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்து கூறுகின்றார். ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் தமிழின் பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாக உள்ளன.

தமிழ்மொழியின் மற்றுமொரு சிறப்பு அதனுடைய சொல்வளம் ஆகும். ஒரு பொருளை குறிக்கும் பல சொற்களை அதிகளவில் கொண்ட மொழியாக இருப்பதனால் சொல்வளம் மிக்க மொழியாக காணப்படுகின்றது.

தமிழ் வளர்த்த புலவர்கள்

தமிழ் வளர்த்த புலவர்களாக தொல்காப்பியம் அமைத்த தொல்காப்பியர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர், ஒளவையார் போன்ற ஆதி புலவர்களைக் குறிப்பிடலாம்.

அத்துடன் தங்கள் ஆட்சியில் தமிழ் வளர்த்த தமிழ் மன்னர்களாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடலாம்.

தனித்தன்மை

தமிழ் மொழி தொன்மையான இலக்கிய இலக்கண வளம் உடையதாகும். தனக்கென தனித்த இலக்கண வளத்தை பெற்று தனித்தியங்கும் மொழியாகும்.

திராவிட மொழிகளின் தாய் மொழியாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகவும் தொன்மையான கல்வெட்டுகளை பெற்ற மொழியாகவும் உள்ளது.

முடிவுரை

தமிழ் மொழி தனித்து நிற்கும் வலிமையுடையது. காலத்தால் அழியாத கன்னித் தமிழானது இளமையுடன் இருக்க கூடியது.

பிறமொழி கலப்பில்லாமல் வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும்.

இத்தகைய வளம் பொருந்திய தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.

You May Also Like :

பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை