எனது கனவு நூலகம் கட்டுரை

Enathu Kanavu Noolagam Katturai In Tamil

இந்த பதிவில் எனது கனவு நூலகம் கட்டுரை தொகுப்பை காணலாம்.

“வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகிறான்” என்ற கூற்று நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுவதும் நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் மிக அவசியம்.

  • எனது கனவு நூலகம்
  • Enathu Kanavu Noolagam Katturai In Tamil
நூலகத்தின் சிறப்பு கட்டுரை

எனது கனவு நூலகம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நூலகத்தின் சூழல்
  • நூலகத்தின் அமைப்பு
  • நூல்களின் வகைகள்
  • நூலகத்தின் விதிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

“கனவு காண வேண்டும். அக்கனவு நாம் தூங்கும் போது வருவதல்ல. நம்மை தூங்க விடாமல் செய்வதாக இருக்க வேண்டும்.” என்ற ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு தொடர்பான கூற்றுக்கு ஏற்றவாறு எனது கனவு நூலகம் ஒன்றை அமைப்பதாக உள்ளேன்.

“நீரின்றி அமையாது உலகு நல் நூல்கள் இன்றி அமையாது அறிவார்ந்த உலகு” என்ற சான்றோரின் கருத்துக்கு அமைவாக சிறந்த நூலகமானது உலகினை அறிவார்ந்ததாக மாற்ற வல்லதாகும்.

நம் அறிவிற்கான மிகப்பெரிய தேடல் வெளியாக நூலகங்கள் காணப்படுகின்றன. நல்ல நிலத்தில் பயிர்கள் செழித்து வளர்வது போல நல்ல நூல்களை நாம் தேடிப் படிக்கும் போது நம் அறிவு வளரும்.

தனி மனித அறிவு வளரும் போது சமூகமானது தானாகவே வளமானதாக மாற்றம் பெறும். நல்ல நூல்களை வாசிப்பது தியானம் செய்வதற்கு ஈடாகும்.

இவ்வாறான காரணங்களினாலேயே நம் முன்னோர் “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்” என்ற நல் வாசகத்தை கூறி சென்றுள்ளனர். இக்கட்டுரையில் எனது கனவு நூலகம் பற்றி பார்க்கலாம்.

நூலகத்தின் சூழல்

நூலகத்தின் உள் நுழையும் போது ஒரு பூந்தோட்டம் போல காட்சியளிக்க வேண்டும். பூங்காக்கள் எப்படி சிறுவர்களை அவற்றின் அழகு காரணமாக கவர்கின்றனவோ அதேபோல் நூலகமும் அதன் சூழலின் கவர்ச்சியினால் வாசகர்களை ஈர்க்க வேண்டும்.

குறிப்பாக அமைதியான ஒரு சூழலினை உடையதாக இருப்பதுடன் நல்ல வெளிச்சம் கிடைக்கின்ற இடமாகவும் காற்றோட்டமுள்ள இடமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் சுவர்களில் சிறந்த சிந்தனை துளிகள், வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்கள், அறிவுசார்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான பகுதியில் அமைதியை பேணுதல் தொடர்பான பதாகைகள், சிறுவர் சுவரோவியங்கள், சிறுகதைகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள் என்பன காட்சிப்படுத்த வேண்டும்.

நூலகத்தின் அமைப்பு

நூலகத்தின் அமைப்பானது வாசகர்களின் வயதிற்கு ஏற்றாற் போல பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் துறைகளுக்கு ஏற்றாற்போல் நூல்களும் பிரித்து காட்சிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பாக கண்ணாடி கதவு உள்ள அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கி காட்சிப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். நூல்களின் அட்டையில் நூலாசிரியரின் பெயர், தலைப்பு, தொடர் எண் என்பன தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகவல்களை ஒவ்வொரு பிரிவிலும் பெரிய பதாகைகளில் எழுதி காட்சிப்படுத்தி வாசகர்களின் தேடுதலை இலகுவானதாக்க வேண்டும். அத்துடன் நுண்படலம், நுண் தகடு, நுண்சுருள், ஒளிநாடாக்கள், தொலைக்காட்சி போன்றவற்றிற்கான பிரத்தியேகமான இடத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

நூல்களின் வகைகள்

எனது கனவு நூலகத்தில் நாளிதழ்கள், வார இதழ்கள், செய்தித்தாள்கள், அனைத்து மொழி நூல்கள், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள், கதை நூல்கள், நாவல்கள், ஓலைச்சுவடிகள்,

பல்வேறு துறைசார்ந்த நூல்கள், போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்கள் என்பனவும் சிறுவர்களுக்கான சித்திர கதை நூல்கள் மற்றும் கணினி வசதி, மின் நூல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

நூலகத்தின் விதிமுறைகள்

எனது கனவு நூலகமானது நூலக விதிமுறைகளுக்கு உட்பட்டதாக செயற்பட வேண்டும். இந்த விதிமுறைகள் தொடர்பாக வரவேற்பு அறையில் பெரிய பதாகை ஒன்றில் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்.

இவ் விதிமுறைகள் அடங்கிய பதாகையில் நூலக செயற்பாட்டு நேரம். அமைதி பேணுதல் தொடர்பான விடயங்களும் உரிய முறையில் நூல்களை தேடுதல், உரிய இடத்தில் இருந்து வாசித்தல், வாசித்த நூல்களை உரிய இடத்தில் வைத்தல்,

நூல்களில் எழுதுதல், கிறுக்குதல் கூடாது, பயன்படுத்திய நாற்காலிகளை உரிய இடத்தில் வைத்தல், நூல்களை இரவல் பெறும் முறைகள் என்பன தொடர்பாகவும் காட்சிபடுத்தியிருக்க வேண்டும்.

முடிவுரை

“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.”

என்ற பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எனது கனவு நூலகம் அமைய வேண்டி இருப்பதுடன் மக்களும் தங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் மாற்றவும் வசதியற்றவர்கள் படிக்க வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்கும்.

எனவே தேன் இருக்கும் இடத்தை தேடி மொய்க்கும் வண்டுகள் போல் அறிவு தாகம் கொண்டோரின் தாகம் தீர்க்கும் இடமாக எனது நூலகம் அமைந்து பயன் அளிப்பதாக காணப்படும்.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை