இந்த பதிவில் “என் வாழ்வின் லட்சியம் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
ஒவ்வொருவரினதும் வாழ்விலும் ஒவ்வொரு உயர்ந்த லட்சியம் ஒன்று காணப்படும்.
என் வாழ்வின் லட்சியம் கட்டுரை – 1
மனிதனாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வினை எப்படியானதாக வாழ வேண்டும் என்பதற்காக இலட்சியம் ஒன்றினை கொண்டிருப்பர். அந்த வகையிலே எனக்கும் ஒரு இலட்சியம் உண்டு.
சிறந்த முறையில் கல்வி கற்று இளைஞனாகிய பின் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வர வேண்டும் என்பதே நான் கொண்டுள்ள வாழ்நாள் இலட்சியமாகும். அதற்கான காரணம் நமது நாட்டையும் உலகில் உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளின் வரிசையில் கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.
நான் அரசியல்வாதி ஆகிய பின்னர் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் தரும் வகையில் பல திட்டங்களை கொண்டு வருவேன். அத்துடன் நின்று விடாது அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்தியும் காட்டுவேன்.
நமது நாடு முகம் கொடுத்து வரும் மிகப்பெரிய பிரச்சினையான ஊழல் மிக்க அரசியலை இல்லாது செய்வேன். ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுப்பேன்.
மற்றும் நான் நேர்மையான அரசியல்வாதியாக இருந்து மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பேன். நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்றவற்றை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் பொலிஸாருக்கு அறிவுருத்துவேன்.
ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்வேன். பல மதங்கள், இனங்கள் வாழும் இந்நாட்டில் அமைதியான சூழலில் அனைத்து மத, இன மக்களும் சுதந்திரமாக வாழ வழி செய்வேன். இவ்வாறான இலட்சியத்தை அடைவதில் இன்று போல் என்றும் மன உறுதியுடன் இருப்பேன்.
எனது எதிர்கால லட்சியம் கட்டுரை – 2
உலகில் பல தொழில்கள் உள்ளன. அவற்றில் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றும் தொழிலாக ஆசியர் தொழில் காணப்படுகின்றது. எனவே தான் ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்பது எனது வாழ்வின் இலட்சியமாகும்.
அன்னை, தந்தை நமக்கு தரும் அன்பும் பொருட் செல்வங்களும் நாளடைவில் அழிந்து போகும். ஆனால் ஆசிரியர் தரும் அறிவுச் செல்வம் என்றுமே அழியாது நம்மை தொடர்கிறது. இத்தகைய தொழிலுக்கு நிகரான தொழில் வேறேதும் இல்லை.
ஆசிரிய தொழிலுக்கு போதிய சம்பளம் கிடைப்பதோடு அதிக விடுமுறை நாட்களும் கிடைக்கின்றது. இவ்விடுமுறை நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வித்துறையில் எனது தகமைகளை வளர்த்துக் கொள்வேன்.
அறிவுக்கு அளவில்லை. வயது கட்டுப்பாடும் இல்லை எனவே வாழ்நாள் முழுவதும் அறிவைத்தேடிட நான் விரும்புகின்றேன். அதற்கு ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற என் இலட்சியம் எனக்கு பெரிதும் உதவும் என நான் நம்புகின்றேன்.
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதமின்றி அனைவருக்கும் உதவக்கூடிய தொழில் இந்த ஆசிரிய தொழில் அதனாலேயே இத்தொழிலை செய்ய நான் விரும்புகின்றேன்.
நான் கற்றவற்றை பிறருக்கு வழங்கிட இந்த ஆசிரியத் தொழில் பயன்படும். இதன் மூலம் சமூகத்தில் பல ஒழுக்கமுள்ள புத்திவான்களை உருவாக்குவதன் மூலம் என்னுடைய சமூகத்திற்கு என்னால் இயன்ற பணிகளை செய்திட முடியும்.
இவ்வாறான பெறுமதி மிக்க தொழிலான ஆசிரிய தொழிலை செய்வதை என் வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளதை நினைத்து நானும் என்னை சார்ந்தோரும் பெருமை கொள்கின்றோம்.
You May Also Like: |
---|
வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை |
எரிபொருள் சிக்கனம் கட்டுரை |