நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

Nethaji Subash Chandra Bose Katturai In Tamil

இந்த பதிவில் இந்தியாவின் ஒப்பற்ற வீரன் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் அதற்கு போர் தான் ஒரே வழி என திடமாக நம்பி ஆயுதம் ஏந்திய மாவீரன் நேதாஜி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரம்ப வாழ்க்கை
  3. சுதந்திரப் போரில் ஈடுபாடு
  4. சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகள்
  5. சுபாஷ் சந்திரபோஸின் பொன்மொழிகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பலர் முக்கிய இடத்தினை வகிக்கிறார்கள் இவர்களுள் சுபாஸ் சந்திர போஸ் அவர்களும் ஒருவராவார். நேதாஜி என்றும் இவர் அழைக்கப்படுகின்றார்.

ஆங்கிலேயர்களுக்கு இவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவர்களும் கூறிவரும் “ஜெய்ஹிந்த்” ஸ்லோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் நேதாஜி ஆவார்.

இந்தியாவின் ஒப்பற்ற வீரரான நேதாஜி என்று இந்தியர்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆரம்ப வாழ்க்கை

இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் கட்டாக் என்னும் இடத்தில் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் வங்காள இந்துக் குடும்பத்தில் பிறந்தார். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.

கட்டாக்கில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்து ஏழு ஆண்டுகள் பயின்றார். கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.

தனது சிறு வயதிலிருந்தே விவேகானந்தர் போன்ற ஆன்மீகவாதிகளால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக பற்றுடையவராகவே இருந்தார்.

சுதந்திரப் போரில் ஈடுபாடு

இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற வேண்டும் என்றும் அதற்கு போர் தான் ஒரே வழி எனவும் இவர் கருதினார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இணைத்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய மாவீரன் ஆவார்.

சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகள்

சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழு விடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் தனது செயற்பாட்டை மேற்கொண்டார்.

பிரித்தானியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி எனக் கருதினார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ் பெற்ற சூளுரையாகும்.

சுபாஷ் சந்திரபோஸின் பொன்மொழிகள்

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பொன்மொழிகளாகப் பல காணப்படுகின்றன.

“பிறந்த குழந்தைகள் கூட அழுகை எண்ணும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றது”

“முதலில் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்ற தகுதியுடையவன்.”

“உண்மையான நண்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு துரோகியாக அல்லது பாதி நம்பிக்கைக்குரியவராக இருக்காதே”

“உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்”

“பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது”

“சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை எடுக்கப்படுகின்றது”

போன்ற பொன்மொழிகள் புகழ் பெற்றவையாகும்.

முடிவுரை

இவரது மரணத்தில் இன்று வரை மர்மம் நீடிக்கிறது இவரின் இறப்பு இன்றுவரை இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

1992ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தை நினைத்துக் கொண்டிருந்த மாமனிதனை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது அதுவே நாம் அவருக்கு வழங்கும் மிகப்பெரும் மரியாதையாகும்.

You May Also Like:

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு

விடுதலைப் போரில் பகத்சிங்