இந்த பதிவில் “ஆசிரியரை மதிப்போம் சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்க இருக்கும் மாணவ தூண்களை திறம்படவும் சிறப்புடனும் கட்டி எழுப்புபவர்கள் ஆசிரியர்களே ஆவர்.
ஆசிரியரை மதிப்போம் சிறுவர் கட்டுரை – 1
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’, ‘ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்பன வெறும் மொழிகள் இல்லை. இவை பொன் மொழிகள். இவ்வாறான பொன்மொழிகள் மூலம் ஆசிரிய தொழிலின் உன்னத தன்மையை நாம் அறிய முடியும்.
சமூகத்தின் ஆலவிருட்சமாய் இருந்து பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆசிரியர்களை மதித்து அவர்களின் சேவையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்ந ஆசிரியர்களை மதித்து நாம் அனைவரும் அவர்களை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே உலகம் எங்கும் ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஞானத்தின் சுடரை ஏற்றுகின்ற பணி ஆசிரியருடையது ஆகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும் அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
மனிதர்களை மனிதர்களாக உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்களே என்று அனைவரும் கூறுவதுண்டு. ஒரு மாணவன் ஆசிரியரிடம் சேரும் தருணத்தில் வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவத்தில் வளர்ப்பது ஒரு ஆசிரியரின் பணியாக உள்ளது.
தெளிவான சிறப்பான மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை நாம் அதிகம் பாராட்ட வேண்டும்.
ஆசிரியப்பணி ஊதியத்துக்காக செய்யப்படும் தொழில் அல்ல. மாறாக அது ஒரு உன்னதமான சேவை என்பதால் அவர்களை மதித்து போற்றுவோம்.
ஆசிரியரை மதிப்போம் சிறுவர் கட்டுரை – 2
சமூகத்தின் ஏணிகளாகவும் தோணிகளாகவும் இருந்து வழியேற்பட பாலங்களாய் அமைந்துள்ளவர்கள் தான் பெருமைக்கும் பெரு மதிப்புற்கும் உரிய ஆசிரியர்களாவர்.
சிறு குழந்தையாக நாம் பாலர் பாடசாலை சென்றது முதல் இன்று வரை நாம் கொண்டுள்ள அறிவு ஞானம் முதலியவை ஆசிரிய பெருந்தகைகளிடம் இருந்து பெற்றுக் கொண்டவையாகும்.
மனித வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியர்களை நாம் மதிக்க வேண்டியது எமது முதற் கடமைகளில் ஒன்றாகும்.
பழங்காலத்தில் இருந்த குருகுல கல்வி முறையின் போது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கணம் பண்ணியது போல நாம் தற்காலத்தில் ஆசிரியர்களை கணம் பண்ண தவறுகின்றோம்.
இது மாற்றப்பட வேண்டிய விடயமாகும். நவீன காலத்தில் மேற்கத்தேய கலாசாரத்திற்கும் புதிய தகவல் தொழில் நுட்ப சாதனங்களுக்கும் அடிமையாகி நமது தலையாய கடமைகளிலிருந்து விலகிச் செல்கின்றோம்.
ஒரு சமூகம் உயர்ந்த நிலையிலிருந்தால் அதன் பின்னால் சிறந்த ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தமாகும். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் அங்கு ஆசிரியர் சமூகம் தனது கடமையை சரிவர செய்யவில்லை என்பது அர்த்தமாகும்.
வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புக்களும் அதிக முக்கியத்துவமும் நிறைந்தது இந்த ஆசிரியப் பணியாகும்.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்க இருக்கும் மாணவ தூண்களை திறம்படவும் சிறப்புடனும் கட்டி எழுப்புபவர்கள் ஆசிரியர்களே ஆவர்.
நமக்காக தம்மை அர்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும் செயலளவு மரியாதைக்கும் உரித்துடையவர்களாக இருக்கின்றனர்.
You May Also Like: |
---|
என் வாழ்வின் லட்சியம் கட்டுரை |
கடற்கரை காட்சி சிறுவர் கட்டுரை |