இந்த பதிவில் பெண்கள் பாதுகாப்பு கட்டுரை பதிவை காணலாம்.
பல அடக்கு முறைகளையும் வன்முறைகளையும் கடந்து இன்று பெண்கள் பல துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூகத்தில் பெண்கள் பாதுகாப்புச் சீர்கேடுகள்
- பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
- பெண்கள் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்
- இன்றைய சூழலில் பெண்களின் நிலை
- முடிவுரை
முன்னுரை
பொறுமைக்கும் அன்புக்கும்⸴ இலக்கணம் பெண்களாகும். பெண்கள் நாட்டின் கண்களாவர். பெண்ணின் பெருமையை உணர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறியலாம்.
புராண கால காரைக்கால் அம்மையார்⸴ சாவித்திரி⸴ கண்ணகி போன்றோர்களும் நவீன காலத்தில் கல்பனா சாவ்லா⸴ இந்திராகாந்தி போன்ற பல சாதனைகயாளர்களையும் குறிப்பிடலாம்.
வாழ்வில் எல்லா நிலைகளிலும் பெண்கள் சமூகத்திற்கு பங்காற்றுகின்றனர். இருப்பினும் சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சமூகத்தில் பெண்கள் பாதுகாப்புச் சீர்கேடுகள்
சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பெரும் பங்காற்றுகின்றனர் எனினும் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைவாகவே காணப்படுகின்றது.
பொதுவாகப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுகின்றனர். அல்லது கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்கின்ற வழக்கம் சமூகத்தில் இருந்தது உண்டு.
பெண்களுக்கென பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கல்வி⸴ திருமண வாழ்க்கை⸴ தொழில் என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனைக் கிராமப்புறங்களில் அதிகம் காணலாம்.
விரும்பியவரைத் திருமணம் செய்யவோ விரும்பிய தொழிலைச் செய்வதற்கோ விரும்பிய ஆடைகளை அணிவதற்கோ சுதந்திரமின்மையை பல இடங்களில் பரவலாக இருக்கத்தான் செய்கின்றது.
சிறு வயதில் திருமணம்⸴ பாலியல் வன்புணர்வு⸴ வரதட்சணைக் கொடுமை போன்றன பெண் பாதுகாப்பிற்கான கேள்விகளை எழுப்புகின்றன.
பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்பில் பிரிவு 14⸴ 15⸴ 21 ஆகிய பிரிவுகளில் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் எல்லா வகையான வேறுபாடுகளையும் கலைந்து சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்துகின்றது.
பிரிவு 21ல் பெண்கள் பொது இடங்களிலும்⸴ பணியிடங்களிலும் மதிப்பாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பது பெண்கள் பாதுகாப்பற்ற நிலையேயாகும்.
பெண்கள் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்
பெண்கள் கல்வியறிவு பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான உரிமைகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
சிறுவயதுத் திருமணம்⸴ பாலியல் தீண்டல்கள்⸴ வரதட்சணைக் கொடுமைகள் போன்ற பல பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து கல்வியறிவு அவர்களைப் பாதுகாக்கும்.
குறைந்தபட்சம் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். ஆபத்தான பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லும் போது விழிப்புடன் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவை தவிர பெண் பாதுகாப்பிற்கு முக்கிய வழி பெண்களுக்குத் தன்னம்பிக்கை அவசியம். பெண் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த ஆண்களுக்கு பெண்கள் பற்றிய நியதிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில் பெண்களின் நிலை
அன்று தொடக்கம் இன்று வரை பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இருப்பினும் இன்று பெண்கள் அதிகம் கல்வி⸴ தொழில் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளனர்.
பெரும்பாலான பெண்கள் சுதந்திரமாகவும் விரும்பிய படியும் வாழ்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்தும் கொண்டிருக்கின்றார்கள். பாரதி எதிர்பார்த்த பெண் சுதந்திரத்தை பெண்கள் ஓரளவேனும் அனுபவித்து வருகின்றனர்.
முடிவுரை
பெண்ணின் விடுதலைக்குப் பாரதியின் பெரும் பங்குண்டு. பெண்ணை விட ஆண் வலிமை கொண்டவனாய் படைக்கப்பட்டதன் அர்த்தம் பெண்களை ஆண்கள் பாதுகாப்பதற்கேயாகும்.
எனவே ஒவ்வொரு ஆணும் இதனை உணர்ந்து சமூகத்தில் பெண் பாதுகாப்பினைக் கட்டியெழுப்ப வேண்டும்.
You May Also Like:
பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை