முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

Muyarchi Thiruvinaiyakkum Katturai In Tamil

இந்த பதிவில் முயற்சி திருவினையாக்கும் கட்டுரை பதிவை காணலாம்.

முயன்றால் முடியாதது என்று இவ்வுலகில் எதுவுமில்லை. விடாமுயற்சியே மனிதனை மாமனிதன் ஆக்குகிறது.

  • முயற்சி திருவினையாக்கும்
  • Muyarchi Thiruvinaiyakkum Katturai In Tamil
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் கட்டுரை

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. முயற்சியின் இன்றியமையாமை
  3. முயற்சி தந்த வினைகள்
  4. முயற்சியின் சிறப்பு
  5. படிப்பினைகள்
  6. முடிவுரை

முன்னுரை

தளர்ச்சி இல்லா முயற்சி ஒரு பயிற்சி. முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஒன்றுமில்லை. வாழ்வில் சுவை கூட்டுவது இந்த முயற்சியே. பூமி சுழல்வது இந்த முயற்சியால் தான்.

தோல்வி எனும் தடையைத் தாண்டி வெற்றிக் கனியை பறிக்க முயற்சியே முதல் ஆயுதம் ஆகும். முயற்சி உடையவன் தன்னுடைய குறிக்கோளை நோக்கிய பாதையில் எவ்வாறான இடர்கள் வந்தாலும் அதிலிருந்து விலக மாட்டான்.

முயற்சிகள் தவறலாம் ஆனால் ஒருபோதும் முயற்சி செய்யத் தவறக் கூடாது. எனவே தான் எமது முன்னோர் முயற்சியின் அவசியம் பற்றி நாம் அறிவதற்காக

முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என பல பொன்மொழிகளை தந்து சென்றுள்ளனர்.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து முன்னேறி நாகரீகத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருப்பது வரை முயற்சியின் விளைவுகளே.

முயற்சியின்றி தேங்கிக் கிடக்கும் நீர் சாக்கடையாக மாறுகிறது. முயற்சி செய்து பல தடைகளை உடைத்து முன்னேறி பாயும் நதியே இறுதியில் கடலை சேர்ந்து தனக்கான நிரந்தர இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்கின்றது.

முயற்சி எவ்வாறு திருவினையாக்கும் என்பது தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

முயற்சியின் இன்றியமையாமை

முயற்சியினுடைய இன்றியமையாமை தொடர்பாக நம் பொய்யாமொழிப் புலவர் தனது உலகப்பொதுமறையில் “ஆள்வினையுடைமை” எனும் அதிகாரத்தில் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்.

விதியின் காரணமாக ஒருவன் தோல்வி கண்டாலும் விடா முயற்சியின் பலனாக விதியையும் மதியால் வெல்ல முடியும்.

இந்த கருத்துக்கு பலம் சேர்க்க உலகையே இருளில் இருந்து விடுவித்து ஒளி மிகுந்ததாய் மாற்றியமைத்த தாமஸ் அல்வா எடிசனுடைய வரலாற்றினை கூறலாம்.

ஏனெனில் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்காக ஆயிரம் தடவைக்கு மேலாக முயன்றும் தோல்வியை மட்டுமே கண்டிருந்தார்.

ஆனால் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்தும் முயற்சி செய்த காரணத்தினாலேயே இறுதியில் மின் விளக்கினை கண்டுபிடித்து உலகிற்கு ஒளியூட்டினார்.

அவர் செய்த முயற்சியினாலேயே இன்று வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்த விஞ்ஞானியாக திகழ்கின்றார் இதனாலேயே முயற்சி மனிதனின் உயிர் மூச்சு என கூறப்படுகின்றது.

முயற்சி தந்த வினைகள்

தங்களது தோல்விக்கு விதியை காரணம் காட்டி தங்கள் குறிக்கோளில் இருந்து விலகிச் செல்லாது முயற்சி செய்து மதியால் விதியை வென்றவர்களுக்கு உதாரணமாக பின்வருவோரினை குறிப்பிடலாம்.

போரில் ஆறு தடவை தோற்ற ராபர்ட் புரூஸ் எனும் மன்னன் குகையில் ஒளிந்திருக்கையில் சிலந்தியின் விடா முயற்சியினை கண்டு அதைப் போலவே தானும் முயற்சி செய்வதாக உறுதி பூண்டு ஏழாவது தடவையாக படை எடுத்த போது தனது நாட்டினை எதிரிகளிடமிருந்து மீட்டுக் கொண்டான்.

இதைப்போலவே கஜினி முகமது 16 முறை தொடர்ச்சியாக முயன்றதனாலேயே சோமநாதபுர ஆலயத்தை தன்வசப்படுத்த கூடியதாக இருந்தது.

தனது வறுமையை காரணம் காட்டாது தன் முயற்சியினால் தெரு விளக்கின் கீழ் உட்கார்ந்து படித்து உயர் கல்வியில் தேறினார் முத்துசாமி அய்யர்.

தாழ்ந்த குலத்தில் பிறந்து தனது விடாமுயற்சியால் சட்ட மேதையான டாக்டர் அண்ணல் அம்பேத்கர்.

செருப்பு தைப்பவரின் மகனாகப் பிறந்து தனது விடாமுயற்சியால் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியானார் ஆபிரகாம் லிங்கன்.

பல ஆண்டுகள் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்து ரேடியத்தை கண்டுபிடித்து சாதித்தார் கியூரி அம்மையார்.

முயற்சியின் சிறப்பு

உழவரின் முயற்சியால் உணவும், நெசவாளரின் முயற்சியால் சிலையும், புலவரின் முயற்சியால் காவியமும் உருவாகுகின்றன.

எறும்புகள் தம் முயற்சியினாலேயே மழைக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ உணவை சேமிக்கின்றன.

தேனீக்கள் தேன் கூடு கட்டுவது சிலந்தி வலை பின்னுவது குருவிகள் கூடு கட்டுவதும் முயற்சியின் சிறப்புக்களை மனிதராகிய நமக்கு கூறும் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகும்.

முயற்சி தரும் படிப்பினைகள்

முயற்சி தரும் படிப்பினைகள் பல உள்ளன. தொடங்குவது மட்டுமல்ல வாழ்க்கை தொடர்வதில் தான் இருக்கிறது வாழ்க்கை.

அச்சத்தை களைந்தால் தான் எமது குறிக்கோளின் உச்சத்தை தொடலாம். விசிறியை அசைக்காமல் காற்று வராது வியர்வையை சிந்தாமல் என்றும் உயர்வு வராது. முயற்சி செய்தால் மாத்திரமே உலகம் நம்மை உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கும்.

இதனால்தான் தாமஸ் அல்வா எடிசன் “முயற்சி என்னை கைவிட்டதுண்டு ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று கூறியுள்ளார்.

இவரைப்போலவே சாதனையாளர்களின் வாழ்க்கை நமக்கு கூறுகின்ற படிப்பினை முயற்சி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

முடிவுரை

மனிதன் தனது பெரும் முயற்சியினால் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விடயங்களை சாதித்து வருகின்றான்.

நாம் ஒவ்வொருவரும் நம் குறிக்கோள்களை அடைந்து கொள்ள விடாமுயற்சி செய்து நமது இலக்கினை அடைந்து வெற்றி பெறுவோம்.

You May Also Like:

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

வாய்மையே வெல்லும் கட்டுரை