மாலை நேர காட்சி கட்டுரை

Malai Katchi Katturai In Tamil

இந்த பதிவில் “மாலை நேர காட்சி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.

மாலை நேர காட்சி கட்டுரை – 1

மாலை பொழுது ஒரு நாளின் முடிவு பொழுதாகும். மாலை பொழுதின் வானம் மங்கல் நிறமாக ஒரு அழகிய ஓவியம் போன்று காட்சி அளிக்கும். மாலைகாட்சிகளை வர்ணிக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.

சூரியன் மேற்கு திசையில் மறையதுவங்குகையில் பறவைகள் அனைத்தும் இரைதேடி முடித்து தமது கூடுகளை நோக்கி பறக்க துவங்கும். அந்த மகிழ்ச்சி ஆரவாரம் மனதுக்கு இனிமையாக இருக்கும்.

பகல் முழுவதும் மேய்ந்து களைத்த ஆநிரைகள் கூட்டம் கூட்டமாக தமது பட்டிகளை நோக்கி நகர்கின்ற அழகே தனி.

தமது வேலைகளில் கடுமையாக உழைக்கின்ற தொழிலாளர்கள் ஓய்வெடுக்க தமது வீடுகளை நோக்கி நகர்ந்து செல்வார்கள் மெல்ல மெல்ல சூரியனின் ஒளி மறைய துவங்குகையில் கடலோடு சேர்ந்த தொடுவானம் அழகாக காட்சியளிக்கும்

அதனை தொடர்ந்து சந்திரன் மெல்ல மேலெழுந்து வரும் தென்னங்கீற்றினிடையே தென்றல் வந்து எம் மேனி வருடுகின்ற அந்த மாலை பொழுது அத்தனை அழகானதாகும்.

கோவில்கள் எங்கும் மணி ஓசை எழும் அது அந்த கிராமத்தையே ஒரு லயிப்பில் ஆழ்த்தும். வீடுகளில் விளக்குகள் ஒளிர துவங்குகையில் இரவு ஆரம்பிக்கின்றது. ஒரு நீண்ட உழைப்பு முடிந்து ஒய்வை நோக்கி செல்கின்ற இந்த பொழுது ஒரு அழகியலாகும்.

மாலைநேரத்து கடற்கரையோரம் சென்று உலாவி வரும் அனுபவம் அழகானது. அழுத்தங்கள் நிறைந்த இந்த வாழ்வில் மனதை அமைதிப்படுத்த மாலை பொழுதை போல ஒன்றும் இருக்கவே முடியாது.

அலைபாய்கின்ற மனது ஒரு நிம்மதியான ஓய்வை நோக்கி செல்கின்ற மாலை பொழுது அனைவராலும் இரசிக்க படவேண்டிய ஒரு பொழுதாக இருக்கின்றது.

மாலை நேர காட்சி கட்டுரை – 2

காலையில் துவங்கிய பரபரப்பான வாழ்க்கை சற்று ஓய்கின்ற அந்த அற்புதமான பொழுது தான் மாலைப்பொழுதாகும். பகலின் வெப்பம் சற்று தணிந்து மக்கள் மனமும் ஆறுதல் அடைகின்ற அந்தி சாய்கின்ற பொழுது எத்தனை அழகுடையது.

கடினமான வேலைகளில் ஈடுபடுகின்ற உழைப்பாளிகள் ஓய்வெடுக்க தமது வீடுகளை நோக்கி செல்வார்கள். இன்பமும் துன்பமும் வாழ்வில் மாறி மாறி வருவதனை போலவே பரபரப்பு நிறைந்த பகல் பொழுது முடிந்து மன அமைதி தருகின்ற மாலைபொழுதானது அமைகின்றது.

மாலை நேரத்தில் வீட்டு முற்றத்திலே கையில் தேநீர் கோப்பைகளுடன் உறவுகளுடன் இணைந்து பேசி கொள்ளும் ஆயிரம் கதைகளை விட அழகான வாழ்வு வேறு எங்கு இருந்து விடப்போகிறது.

மாலைநேரத்திலே மைதானங்களில் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடி கொண்டிருப்பார்கள் அந்த மகிழ்ச்சி மட்டற்றதாகும். இதனால் தான் பாரதியார் “மாலை முழுதும் விளையாட்டு பின்பு கனிவுகொடுக்கும் நல்ல பாட்டு” என்று குழந்தைகள் வாழ்வு பற்றி அழகாக கூறுகிறார்.

மாலைநேரத்தில் வீடுகளை கூட்டி பெருக்கி வழிபாட்டு அறையில் தீபம் ஏற்றி அங்கு இறைவனை வணங்குதலும். புத்தகங்களை எடுத்து புத்துணர்வோடு படிக்கின்ற குழந்தைகளும் பார்க்க அழகாகும்.

மேற்கு வானில் தோன்றும் அதிசயங்கள் இந்த இயற்கையின் அபூர்வங்களை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.

நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல வானில் தோன்றுகின்ற அழகும் பிறை நிலவு அழகிய வான் முகத்திலே பொட்டு இட்டதனை போல பொலிவாக காட்சியளிக்கும் இத்தனை அழகையும் நாம் இரசிக்க ஒரு அழகான கிராமத்து வாழ்க்கைக்கு செல்ல வேண்டும்.

ஓடி கொண்டே இருக்கின்ற இந்த வாழ்க்கையில் நாம் நின்று இரசிக்க வேண்டிய தருணம் இந்த மாலை பொழுது என்றால் மிகையல்ல.

You May Also Like:

காலை காட்சி பற்றிய கட்டுரை

எனது பொழுதுபோக்கு கட்டுரை