நூலகத்தின் சிறப்பு கட்டுரை

Noolagam Katturai In Tamil

இந்த பதிவில் நூலகத்தின் சிறப்பு கட்டுரை பதிவை காணலாம்.

ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. அன்றாட செய்தித்தாள்களை கூட வாங்க முடியாத நிலையிலும் பலர் உள்ளார்கள்.

எனவே இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகிறது.

  • நூலகத்தின் சிறப்பு கட்டுரை
  • Noolagam Katturai In Tamil
பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிஞர்களின் கருத்துக்கள்
  3. நூலகத்தின் தேவை
  4. நூலகத்தின் பயன்
  5. முடிவுரை

முன்னுரை

தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” இவ்வாறு குறிப்பிடுகின்றார் வள்ளுவர்.

அதாவது நிலத்தில் எவ்வளவு ஆழமாக குழி தோண்டுகின்றோமோ அந்தளவிற்கு நீரின் ஊற்று அதிகமாகக் காணப்படும். அதே போல் ஒரு மனிதன் எந்தளவிற்கு அதிகமாகக் கற்கின்றானோ அந்தளவிற்கு அவனால் அறிவினை விருத்தி செய்து கொள்ள முடியும்.

“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்கின்றார் ஒளவையார். எந்தளவிற்கு நூல்களை தேடிப்படிக்கின்றோமோ அந்தளவிற்கு நமது அறிவு விருத்தி அடையும்.

அத்தகையக அறிவை அளிக்கக்கூடிய நூல்கள் நிறைந்திருக்கும் இடத்தையே நூலகம் என்கின்றோம். நூலகங்களின் தேவை ஒவ்வொரு சமுதாயத்திற்கும், சமூகத்தில் உள்ள தனிநபரிற்கும் மிகவும் அவசியமாகும்.

இக்கட்டுரையில் நூலகத்தின் சிறப்பு பற்றி பார்க்கலாம்.

அறிஞர்களின் கருத்துக்கள்

“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது என்கின்றார் பேரறிஞர் விக்டர் கியூகோ.

நாட்டில் அதிகளவான நூலகங்கள் அமைக்கப்படும் போது அந்நாட்டில் குற்றங்கள் குறைகின்றன. மனிதனை சிறந்த முறையில் வழிநடத்துவதில் நூல்களிற்கு அளப்பரிய பங்கு உண்டு.

ஒரு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என பத்திரிகையாளர்கள் மகாத்மா காந்தியிடம் வினவிய போது ஒரு நூலகம் அமைப்பேன் என்றாராம் மகாத்மா. ஒவ்வொரு மனிதனும் சிறந்த மனிதனாக மாறுவதற்கு நூலகத்தின் பங்கு இன்றியமையாதது.

நூலகத்தின் தேவை

“வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்” இது அனைவரும் அறிந்த கூற்று நூல்கள் வாசிப்பது ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது.

ஒரு நாட்டில் பாடசாலைகள், சமயஸ்தலங்கள் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நூலகங்கள் அமைப்பதும் மிகவும் அவசியம்.

ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென நமது முன்னோர்கள் குறிப்பட்டுள்ளார்கள். ஆனால் நூலகம் இல்லா ஊரில் குடியிருப்பதனை தவிர்ப்பதே சிறந்ததாகும்.

நூல்கள் மனிதனிற்கு அறிவை வழங்குவதோடு, அவர்களிற்கு தாம் அறிந்த விடயங்களை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள உதவுகின்றன. தற்காலத்தில் அதிகமானோர் தமக்கு தேவையான நூல்களை கொள்வனவு செய்து தமது வீட்டிலேயே நூலகம் அமைத்து வருகின்றனர்.

ஆனால் அனைத்து வகையான நூல்களையும் வாங்கி சேமிப்பதென்பது அனைவராலும் இயலாத காரியம். அதற்கு பெரும் பணமும், அதிக நேரமும், இடவசதியும் தேவைப்படும்.

அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு கிராமம், பாடசாலை தோறும் நூலகங்கள் அமைப்பது அவர்களும் நூல்களை வாசித்து அறிவை விருத்தி செய்ய உதவியாக இருக்கும்.

நூலகத்தின் பயன்

ஒரு சமுதாயம் அறிவு வாய்ந்ததாக மாறும் போது அங்குள்ள தனிநபர் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தனிமனித வளர்ச்சி ஏற்படும் போது ஒரு நாடு அதன் பேண்தகு அபிவிருத்தியை எட்டி விடுகின்றது.

குழந்தைகளிற்கு சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். சிறுவர்களிற்கான நூலகத்தை அமைத்து சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை தூண்டும் போது அவர்களிற்கு அறிவு ரீதியான தேடல் அதிகரிக்கின்றது.

ஏனைய பெரியவர்களுக்கும், வீட்டிலுள்ள பெண்களும் உலகத்தைப்பற்றி பல விடயங்களை அறிந்து கொள்ள நூலகம் வழிவகுக்கின்றது. நூலகத்தை மிகவும் அமைதியான சூழலில் அமைத்தல் மிகவும் அவசியமாகின்றது.

அத்தோடு வயதை அடிப்படையாகக் கொண்டு நூல்களை வகைப்படுத்தி அடுக்குவது வாசிப்பவர்களை தமக்கு தேவையான நூல்களை எளிதாக தெரிவு செய்து வாசிக்க இலகுவாக அமையும்.

“கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்” என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நாம் குறிப்பிட்ட சில நூல்களை மட்டும் வாசித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையோடு இல்லாமல், அனைத்து விதமான புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் கையேடுகளை வாசிப்பது சிறந்தது.

ஆகவே சிறுவர்களிற்கு ஏற்ற படிப்பினை கதைகள், அறிவியல் அறிஞர்கள், கால் மார்க்ஸ் போன்ற பொதுவுடமை வாதிகள், பேச்சாளர்கள் போன்றவர்களின் நூல்களை நூலகத்தில் அதிகளவு சேமித்து வைப்பது மிகவும் பயனள்ளதாகும்.

முடிவுரை

இன்றைய நவீன உலகின் அதிகரித்த தொழில்நுட்ப பயன்பாட்டால் நூல்களை வாசிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

இணையத்திலேயே அனைத்து விடயங்களும் பரந்து காணப்படுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நூல்கள் ஊடாக அறிவை பெற முயலுவதில்லை.

இதனால் நூலகப்பாவனை வெகுவாக குறைந்து வருவதை அவதானிக்கலாம். இதற்கான ஒரே ஒரு தீர்வு நூலகங்களை அதிகளவில் அமைப்பதே. வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் போது பொது அறிவோடு மொழி அறிவையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

எனவே நூலகங்களை அதிகளவில் அமைத்து அறிவாய்ந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோமாக.

You May Also Like:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை