இந்த பதிவில் “நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை” பதிவை காணலாம்.
ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி இளைஞர்களுக்கு உண்டு. ஒவ்வொரு இளைஞர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இளைஞர்களின் உத்வேகம்.
- இளையோர் நாட்டின் முதுகெலும்பு
- சாதனைகள்
- அரசியலும் சமூக அக்கறையும்
- முடிவுரை
முன்னுரை
“என்னிடம் நூறு துடிப்புள்ள இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர் அந்தளவிற்கு துடிப்பும் வேகமும் நாட்டுபற்றும் உடைய இளைஞர்கள் ஒன்றிணைந்தால் எமது நாட்டில் பல மாற்றங்களும் வளர்ச்சிகளும் தானாகவே நடந்தேறும்.
உலகத்தில் அதிகளவான இளைஞர்கள் வாழ்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இக்கட்டுரையில் நாட்டினுடைய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு பற்றி நோக்கலாம்.
இளையோர்களின் உத்வேகம்
“குன்றென நிமிர்ந்துநில்” “ஏறுபோல் நட” என்ற ஒளவையின் வாக்கிற்கிணங்க இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்கள்.
இளமை பருவத்தில் எத்தனை அசாதாரணமான வேலைகளையும் இலகுவாக செய்துவிடக்கூடிய திறன் இளைஞர்களிடத்தில் இருக்கும் இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் அது போல நாட்டையும் முன்னேற்ற பங்களிப்பினை வழங்க வேண்டும்.
இளம் பராயத்தில் இருந்தே கடின உழைப்பும் அத்துடன் மிக உயர்ந்த கனவுகளையும் இளைஞர்கள் வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.
இளையோர்கள் நாட்டின் முதுகெலும்பு
ஒரு நாட்டினுடைய அடிப்படையான விடையமே பொருளாதாரமாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டுமாயின் அங்குள்ள உழைக்கும் வர்க்கம் மிக ஆர்வத்துடன் உழைக்க வேண்டும்.
கல்வி, அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல் என அனைத்து துறைகளிலும் இளைஞர்களே இன்று திறன் மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர்.
இவர்களுடைய தொழில்நுட்பம் மற்றும் கடினமான முயற்சிகள் தான் எமது நாட்டின் பொருளாதாரத்தை பல மடங்காக அதிகரிக்க உதவுகின்றது. இந்தியாவின் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் இன்று படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.
சாதனைகள்
இன்று உலக அரங்கில் இந்திய இளம் சமுதாயத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் சர்வதேச வணிகம் என்பவற்றில் இந்தியர்கள் தடம் பதிக்கின்றனர்.
உதாரணமாக அமெரிக்காவில் அமைந்துள்ள “கூகுள்” நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக “சுந்தர்பிச்சை” விளங்குகின்றார். இவ்வாறு பல லட்சம் இந்திய இளைஞர்கள் உலகமெங்கும் சென்று சாதித்து வருவது பாராட்டத்தக்கதாகும்.
அத்தோடு நின்றுவிடாது தமது தாய்நாட்டுக்கு அவர்கள் பங்களிக்க வேண்டும் என்பதே மிக முக்கிய விடயமாகும்.
அரசியலும் சமூக அக்கறையும்
இன்றைய இளைஞர்களை பொறுத்தவரையில் அதிகம் சினிமா மற்றும் நாகரீக வயப்பட்டு சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிகளவான நேரங்களை செலவழிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அவ்வாறு இருக்காமல் அரசியல் மற்றும் தேர்தல்கள் காலங்களில் இளைஞர்கள் தங்கள் ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளுதல் வேண்டும்.
இதன் வாயிலாக தான் நாட்டில் நிலுவுகின்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக கேள்வி கேட்க முடியும். மற்றும் எமது சமூகத்தவர்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும்.
முடிவுரை
இந்தியாவின் தலையெழுத்தானது இளைஞர்களால் தான் மாறும் என்று பல தலைவர்கள் நம்பினார்கள். அந்தவகையில் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சிறப்பாக குழந்தைகளை நாடி சென்று அவர்களுக்கு கற்பித்ததார்.
மற்றும் உலக அரங்கில் இந்தியாவை முன்னிறுத்தி வல்லரசாக உருவாக்க வேண்டும் என்ற கனவை இளைஞர்கள் மனதில் இவர் விதைத்தார். இவற்றுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பது இந்தியாவின் இளைஞர்களது கடமையாகும்.
You May Also Like : |
---|
மகளிர் தினம் கட்டுரை |
எனது வாக்கு எனது உரிமை கட்டுரை |