இந்த பதிவில் சாலை பாதுகாப்பு கட்டுரை பதிவை காணலாம்.
எண்ணற்ற மக்களை இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகள். சாலைகளில் விபத்துகளின்றி விழிப்புணர்வுடன் பயணம் செய்வது அவசியம்.
சாலை விதிகள், சட்டங்கள் என்பவற்றை கடைபிடித்து மற்றவர்களுக்கும் இடையூறு செய்யாமல் பயணிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
- சாலை பாதுகாப்பு கட்டுரை
- Salai Pathukappu Katturai In Tamil
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை
சாலை பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
- வீதி விபத்திற்கான காரணம்
- சாலை விதிமுறைகள்
- சாலை பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
சாலைகள் எமது வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக விளங்குகின்றன. அவை தூரத்தை குறைப்பதோடு பயணங்களை இலகுவாக்குகின்றன.
இந்நிலையில் அன்றாடம் சாலைகளில் நிகழும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது.
இதனால் சாலை பாதுகாப்பு என்பது மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகின்ற ஒன்றாக காணப்பட்டுகின்றது.
சாலைகளில் பயணிப்போர் பாதுகாப்பாக பயணிக்க சாலை பாதுகாப்பு அவசியமாகும். இந்த கட்டுரையில் சாலை பாதுகாப்பு பற்றி பார்க்கலாம்.
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம்
அன்றாடம் பேருந்து, மோட்டார் வண்டி போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீதியால் பயணிக்கின்றன.
அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அவசர வேலையை முடிப்பதற்காக சென்று கொண்டிருப்பர். இதனால் ஏதேனும் ஒரு வகையில் விபத்துக்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டவாறு உள்ளன.
விபத்துக்களுக்கான காரணங்களாக பல காணப்பட்ட போதும் விபத்துக்கள் உயிரிழப்பு, படுகாயம், உடமைகளுக்கு சேதம் போன்ற பேரிழப்புக்களை ஏற்படுத்துகின்றன.
ஆகவே மனிதர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. நாம் காலையில் வீட்டிலிருந்து பயணப்பட்டு திரும்பவும் வீட்டை சென்றடைய வேண்டுமாயின் பயணிக்கின்ற சாலைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
இக்காரணங்களால் சாலை பாதுகாப்பு முக்கியமாக விளங்குகின்றது.
வீதி விபத்திற்கான காரணம்
அன்றாடம் வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் காணப்பட்ட போதும் வாகன சாரதிகளினதும், பாதசாரிகளினதும் அசமந்த போக்கே அதிகளவில் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.
சாரதிகள் அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டும் போது வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் சாரதிகளின் கவனயீனங்கள், வீதி சமிஞ்ஞைகள் மற்றும் குறியீடுகளை கவனிக்காமல் வாகனங்களை ஓட்டிச் செல்லுதலும் விபத்துக்களிற்கு காரணமாகின்றன.
பாதசாரிகள் தொலைபேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது மற்றும் வீதியின் உட்புறத்தால் நடந்து செல்வது போன்றவற்றாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளை தவிர்ப்பதனால் விபத்துக்களை ஒரளவு குறைத்துக் கொள்ளலாம்.
சாலை விதிமுறைகள்
சாலையில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுவதற்காக பல விதிமுறைகள் நாட்டின் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அறிவுறுத்துவதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருப்பர்.
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்படுவதோடு தண்டப்பணம் அறவிடுதல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.
பொதுவாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளாக வீதியால் பயணம் செய்யும் பாதசாரிகளுக்கும், வாகனங்களை ஓட்டுகின்ற சாரதிகளுக்கும் தனித்தனியான விதிமுறைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.
பாதசாரிகள் பாதசாரிகடவை ஊடாகவே பாதையை கடக்க வேண்டும். கடவையினூடாக ஓடி பாதையை கடப்பதையோ, பாதுகாப்பற்ற வளைவுகளினூடாக கடப்பதையோ தவிர்க்க வேண்டும்.
வாகன சாரதிகள் போக்குவரத்து குறியீடுகளை அவதானித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மிதமான வேகத்தில் பயணிப்பதோடு, பாதசாரி கடவையை அண்மித்த பிரதேசங்களில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும்.
சாலை பாதுகாப்பு
விபத்துக்களை குறைப்பதற்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கும் பல சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதசாரி கடவைகள் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அருகாமையில் வீதி சமிஞ்ஞைகளும் பூட்டப்பட்டுள்ளன. தற்போது சில நாடுகள் சாரதிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக முப்பரிமான தோற்றமுடைய பாதசாரி கடவைகளை உருவாக்கியுள்ளன.
மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதும், வாகனங்களில் பயணிப்போர் இருக்கைப்பட்டி அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது அரச சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறுவோர் அபராதங்களை செலுத்த நிர்பந்திக்கப்படுவதோடு, செலுத்த முடியாதவர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
அரசாங்கம் சாலை பாதுகாப்பிற்காக அதீத கவனம் எடுக்கின்றது. ஆனால் அரசாங்கம் எவ்வளவு தான் முயன்றாலும் தனிநபர்கள் அக்கறையோடு செயற்பட்டால் மாத்திரமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
முடிவுரை
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சாலை விதிமுறைகளை பின்பற்றுவது நமக்கு மட்டுமல்லாது சாலையில் பயணம் செய்கின்ற அனைவருக்கும் நன்மை பயக்கும்.
எவ்வளவு அவசரமான பயணமாக இருந்தாலும் சாலைகளில் கவனம் வைத்து வாகனத்தை ஓட்டுவதே சிறந்ததாகும்.
சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை விதிமுறைகளை பின்பற்றி வீதியால் பயணிக்கின்ற அனைவரினதும் உயிரை காப்போமாக.
You May Also Like :