இந்த பதிவில் ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை பதிவை காணலாம்.
வெற்றியாளர்களின் ரகசியம் தனிமனித ஒழுக்கம் தான். வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால் ஒழுக்கம் மிக அவசியம்.
ஒவ்வொரு மனிதர்களும் சிறுவயதில் இருந்தே சுயஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒழுக்கம் உயர்வு தரும்
- Olukkam Uyarvu Tharum Katturai In Tamil
வாய்மையே வெல்லும் கட்டுரை
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஓழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
- உயர்வும் ஒழுக்கமும்
- தீயொழுக்கம் தீமைதரும்
- முடிவுரை
முன்னுரை
“ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்” என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு மனிதனது வாழ்க்கையில் ஒழுக்கம் அவனது உயர்வுக்கு காரணமாக இருக்கிறது ஆதலால் தான் வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட மேலானதாக பார்க்கப்படுகிறது.
ஒழுக்கம் தவறியவர்கள் வாழ்வில் உயரமுடியாது மாறாக துன்பங்களையே சந்திக்க நேரிடும். இதனை கல்வியே நமக்கு போதிக்கின்றது.
அதாவது ஒழுக்கத்தை தராத கல்வியும் விளைச்சலை தராத வயலும் வீணானது என்று கூறுவார்கள். கல்வியின் பயன் அறிவு, அறிவின் பயன் ஒழுக்கம் இவ்வாறு மனிதர்கள் வாழ்வில் ஒழுக்க சீலர்களாக வாழவேண்டியது வலியுறுத்தப்படுகிறது.
இக்கட்டுரையில் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், உயர்வும் ஒழுக்கமும் மற்றும் தீயொழுக்கம் தீமை தரும் ஆகிய விடயங்கள் நோக்கப்படுகிறது.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
நாம் மனதிலே எண்ணிய எல்லாவற்றையும் அடையவேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு தோன்ற கூடாது. உலகின் எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆசையே என்று போதிக்கின்றார் புத்தபெருமான்.
நமது வாழ்க்கையில் புயல்போல எழும் மன சஞ்சலங்களை எவரெல்லாம் அடக்கியாள கற்றுக்கொள்கின்றார்களோ அவர்களே பின்னாளில் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள்.
இதனால் தான் தனி மனித ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு அவசியம் என போதிக்கப்படுகிறது. ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்கு துணையாக அமையும்.
ஒழுக்கம் தவறி ஒருவர் வாழ்வார் ஆயின் அது அவருடைய குடிப்பிறப்பையே அசிங்கப்படுத்திவிடும் என்பதால் நம் முன்னோர்கள் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தனர்.
ஒழுக்கம் உடைய ஒரு மனிதனுடைய மனதில் நல்லெண்ணங்கள் இருக்கும் நல்ல குணங்கள் வாய்க்க பெறும் சக மனிதர்களின் அன்பும் மரியாதையும் அவனுக்கு கிடைக்கபெறும்.
ஆகவே தான் ஒரு மனிதனுக்கு செல்வங்களை விட ஒழுக்கம் என்பது விலைமதிப்பற்றதாக சொல்லப்படுகிறது.
உயர்வும் ஒழுக்கமும்
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” என்று திருக்குறள் கூறுகிறது.
அதாவது ஒழுக்க நெறி நிற்பவர்கள் என்றைக்கும் உயர்நிலையை அடைவார்கள் என்பது தெய்வ வாக்காகும்.
உதாரணமாக நேர்மையான வழியில் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேறியவர்கள் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றம் காண்பார்கள் மாறாக தவறான வழியில் முன்னேற நினைப்பவர்கள் அவற்றை இழந்து துன்பமடைவார்கள் என்பது இயற்கை.
வறுமையான நிலையிலும் நல்லொழுக்கம் தவறாது கல்வி கற்று உயர்ந்த பல தலைவர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஒரு செருப்பு தைக்கும் தொழிலாழியின் மகனான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர காரணம் அவரது கடின உழைப்பும் அவரது நேர்மையும் ஆகும்.
இவ்வாறு தமது சுய ஒழுக்கத்தால் முன்னேறியவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். பத்திரிகை போடும் சிறுவன் பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானி ஆகியமை என பல மனிதர்களை தனிமனித ஒழுக்கம் வாழ்க்கையில் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
தீயொழுக்கம் தீமைதரும்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” என்கிறார் வள்ளுவர்.
நல்லொழுக்கம் ஆனது ஒரு மனிதனை எவ்வாறு பெரிய உயரத்துக்கு கொண்டு போய் சேர்க்கிறதோ அதனை போலவே தீய வழியில் நடப்பவர்கள் என்றும் முன்னேறாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பது பொய்யாமொழி.
தீய ஒழுக்கம் சிறிது காலத்துக்கு இனிப்பாகவே இருக்கும் ஆனால் பின்னாளில் அது பெரும் துன்பத்தை தரும் இதனையே “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறுவார்கள்.
ஆகவே நாமும் தீய வழியில் செல்லாது நம்மை சுற்றியிருப்பவர்களையும் நல்வழியையும் நல்லொழுக்கத்தையும் கூறி வழிப்படுத்துதல் சால சிறந்ததாகும்.
முடிவுரை
அன்று தொட்டு இன்று வரை ஒழுக்கமே சிறந்தது என ஒழுகி வரும் இனம் சார்ந்த நாம் எப்போதும் நம்மை உயர்த்த கூடிய ஒழுக்க நெறி நின்று இவ் வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டும்.
இன்றைக்கு ஒழுக்கமற்ற சமுதாயம் அதிகரித்து செல்வது மன வருத்தத்திற்கு உரியதாகும். இவற்றினால் எமது சமூகம் சீரழிந்தே செல்கிறது.
இதை தடுக்க நல்வழியை உணர்ந்து ஒழுக்க சீலர்களாக வாழ்வோம் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்போம் இதுவே எல்லார்க்கும் நன்மை பயப்பதாக அமையும்.
You May Also Like: