ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

pancha boothangal katturai in tamil

இந்த பதிவில் “ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை” பதிவை நோக்கலாம்.

வானம்⸴ காற்று⸴ நெருப்பு⸴ நீர்⸴ நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும்.

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. ஐம்பூதங்கள்
  2. ஆகாயம்
  3. காற்று
  4. நெருப்பு
  5. நீர்
  6. நிலம்
  7. முடிவுரை

முன்னுரை

ஐம்பூதங்களானவை “பஞ்ச பூதங்கள்” எனவும் அழைக்கப்படுகின்றன. வானம்⸴ காற்று⸴ நெருப்பு⸴ நீர்⸴ நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும்.

உலகமானது பஞ்சபூதங்களாலானது என்பதைத் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகின்றது. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்ˮ எனக் கூறுகின்றது.

மனித உடலானது ஐம்பூதங்களின் சேர்க்கையாலானது இவற்றின் இயக்கத்தால் தான் உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஐம்பூதங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆகாயம்

ஆகாயமானது மற்றைய நான்கு பூதங்களான காற்று⸴ நிலம்⸴ நீர்⸴ தீ ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாக அமைகின்றது. ஆகாயத்தை முடிவில்லா பேரண்டம்⸴ வெட்டவெளி என்றும் அழைப்பர்.

இதில் ஏழு வண்ணம் வானவில்லாக புவிக்கு அழகாய் காட்சியளிக்கும். நாம் வணங்கும் தெய்வங்கள் வாழும் இடம் என்று நம்பப்படுகின்றது.

ஆகாயம் பற்றிய பழமொழிகளாக⸴ “வானம் நினைத்தால் மழை⸴ மனிதன் நினைத்தால் வினைˮ போன்ற பல காணப்படுகின்றன.

காற்று

காற்றின்றி இவ்வுலகம் இயங்காது. மனித உயிர் வாழ்க்கைக்கு மிகமிக அவசியமானது. காற்றினை வளி⸴ உயிர்வளி என்றும் அழைப்பர். காற்றானது தன்னடக்கத்திற்கு உதாரணமாகும்.

காற்று நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை மூச்சுவிடும் ஒவ்வொரு கணமும் உணர்த்துகின்றது.

முன்னோர்கள் காற்றின் அடிப்படையாகக் கொண்டு பல பழமொழிகளை கூறியுள்ளனர்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ˮ⸴ “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்ˮ⸴ “ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்ˮ என்றெல்லாம் கூறியுள்ளனர்.

நெருப்பு

உலகிலுள்ள எந்தப் பொருட்களையும் எரித்து சாம்பலாக்கும் அல்லது தன்னுடையதாகக்கிக் கொள்ளும் சக்தி நெருப்புக்குண்டு. இதனை அக்கினி⸴ தேயு எனவும் அழைப்பர்.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மேல் நோக்கியே செல்லும் தன்மையை கொண்டது. மனிதர்களுடைய பிரார்த்தனைகளை⸴ கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துக்கூறும் சிறப்பு தன்மை கொண்டது.

இதனால்தான் இந்துமத வழக்கப்படி அக்கினி சாட்சியாத் திருமணம் செய்யப்படுகின்றது.

நீர்

நீரானது புனல்⸴ தண்ணீர்⸴ அமிர்தம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது நீராகும். எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவகையில் இயல்பாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.

தண்ணீர் கீழ் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது. இது பணிவின் வெளிப்பாடாகும். தண்ணீர் பாசத்துக்கும்⸴ பணிவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

கங்கை⸴ காவிரி ஆறு இந்துக்களின் புனித இடங்களாகும். இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் கழிகின்றன என்ற நம்பிக்கையுண்டு.

நிலம்

ஐம்பூதங்களில் முதன்மையானதாக நிலம் விளங்குகின்றது. நிலத்தைப் பூமி⸴ மண் என்றெல்லாம் அழைப்பர். நிலம் பொறுமைக்கு உதாரணமாக இருக்கின்றது.

அறியாமையால் இந்த மண்ணை உயிரற்றது என்கின்றோம். உயிரற்ற மண்ணிலிருந்து உயிருள்ள தாவரங்கள் தோன்றாது. பொறுமையின் இலக்கணம் இப்பூமியாகும்.

மனிதனால் எவ்வளவு துன்புறுத்தி தோண்டப்பட்டாலும் நமக்கு தேவையான தண்ணீர்⸴ பல வகையான உலோகங்கள்⸴ கனிமங்களைத் தருகின்றது. நாம் உண்ணும் உணவை விளையச் செய்கின்றது.

மண்மகள்⸴ நிலமகள்⸴ நிலமடந்தை⸴ பூமகள் என்ற சொற்கள் நிலத்தை சம்பந்தப்படுத்தி பெண்களின் பெருமை கூறப்படுகின்றது.

முடிவுரை

பஞ்சபூதங்களை வழிபட்டால் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட மனித உடலானது தூய்மை பெறும். இன்றைய மனிதன் பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் உணராது அதனுடன் போராடி தனது விஞ்ஞான சாதனைகளைப் படைக்கின்றான்.

இதனால் பல விளைவுகளை எதிர்நோக்குகின்றான். இயற்கைக் கோலம் சீராக இருந்தால் தான் மனிதகுலம் சிறப்பாக வாழ முடியும். எனவே இயற்கை மீது பேரன்பு கொண்டு நலமாய் வாழ்வோம்.

நீர் மேலாண்மை கட்டுரை
காலம் பொன் போன்றது கட்டுரை