விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

Virunthombal Katturai In Tamil

தமிழர் பண்பாடுகளில் ஒன்றான “விருந்தோம்பல் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நாம் உண்கின்ற உணவைப் புதிதாக வருபவர்களுக்கு கொடுத்து உபசரிக்கும் பண்பு விருந்தோம்பல் ஆகும்.

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விருந்தினர்
  3. தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல்
  4. விருந்தோம்பலும் அதிலுள்ள அறிவியலும்
  5. மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு
  6. முடிவுரை

முன்னுரை

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டுˮ என வள்ளுவர் கூறுகின்றார்.

அதாவது இல்லத்தில் இருந்து பொருட்களை பாதுகாத்து வாழ்க்கை நடத்துவது எல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்வதற்கே ஆகும்.

இத்தகைய சிறப்புமிக்க விருந்தோம்பல் தமிழர் பண்பாடுகளில் ஒன்றாகும். நாம் உண்கின்ற உணவைப் புதிதாக வருபவர்களுக்கு கொடுத்து உபசரிக்கும் பண்பு விருந்தோம்பல் ஆகும்.

அவ்வாறு செய்யும்போது தானமும்⸴ தர்மமும் தலைகாக்கும். இத்தகைய தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விருந்தோம்பல்⸴ அதன் சிறப்பு⸴ இன்றைய நிலை போன்ற பல விடயங்களை இக்கட்டுரையில் காண்போம்.

விருந்தினர்

தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சமாக விருந்தோம்பல் பண்பாடு யாரை உபசரிக்க தோன்றியது என்பதனை இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் விருந்தினர்கள் என்போர் யார் எனக் கூறப்படுகின்றது.

விருந்து என்னும் சொல்லிற்கு புதுமை என்று பொருள். விருற்தினர் என்பது புதிதாக வந்து இருக்கக்கூடியவர்கள். அவர் தமது உற்றார்⸴ உறவினர்கள்⸴ நண்பர்கள் விருந்தினராக மாட்டார்கள். எமக்கு யார் என்று தெரியாத புதியவர்கள் தான் விருந்தினர்கள் என்று இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல்

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்⸴ திருமந்திரம்⸴ திருக்குறள் எனப் பல நூல்களில் விருந்தோம்பல் பற்றி அழகாகக் கூறப்படுகின்றது. தொல்காப்பியத்தில் விருந்தோம்பல் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகின்றார்.

விருந்தே புதுமை அதாவது விருந்தினர் என்பது வேறு உறவினர்கள் என்பது வேறு இருவரும் ஒன்று அல்ல. முன்பின் தெரியாத ஒருவரை வீட்டுக்கழைத்து உணவளித்தல் விருந்தோம்பல் ஆகும் என்கின்றார்.

திருவள்ளுவர் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் விருந்தோம்பல் பற்றிப் பத்து குறள்களில் கூறியுள்ளார்.

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்றுˮ
அதாவது தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நாள்தோறும் போற்றுபவர் வாழ்க்கைத் துன்பத்தால் அழிவதில்லை என்பதாகும்.

சங்க இலக்கியப் பாடல்களில் பத்து பாட்டுக்களில் ஒன்றான பொருணராற்றுப்படையில் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரித்து மறுபடியும் அவர்கள் திருப்பிச் செல்லும்போது வீட்டிற்கு வெளியே வந்து அவர்களோடு 7 அடி நடந்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

இதேபோல் எட்டுத்தொகையில் ஒன்றான “புறநானூறு” வறுமை இருப்பினும் வந்தவர்களுக்கு இல்லை எனக் கூறாது உபசரிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகின்றது.

விருந்தோம்பலும் அதிலுள்ள அறிவியலும்

தமிழர்களின் ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணியிலும் ஓர் அறிவியலுள்ளது. வரும் விருந்தினர்களுக்கு வாயில்களில் நீர் வைக்கப்பட்டிருக்கும். நீரில் விருந்தினர்கள் கை⸴ கால்களைக் கழுவிய பின்னர் உள்ளே வருவர்.

இதன் பின்னுள்ள அறிவியல் நமக்கு உணர்த்துவது என்னவெனில் பெரும்பாலும் கை⸴ கால்களிலுள்ள கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும். சுத்தப்படுத்துவது மூலம் நோய்த்தொற்று தடுக்கப்படுகின்றது.

வாழை இலையில் உணவு பரிமாறும் வழக்கத்தைத் தமிழர்கள் பின்பற்றினர். வாழை இலையின் குறுகிய பாகம் அமர்ந்து இருப்பவர்களின் இடதுபுறமும் தடிமனான பகுதி வலதுபுறமாக வைக்கப்படும்.

இதன் காரணம் உணவின் பயன்பாட்டைப் பொறுத்தே வைக்கப்படுகின்றது. சாதம் அதற்கான கூட்டு வகைகள் போன்றன அடிக்கடி எடுத்து உண்ணக்கூடிய உணவுகள். இவை அனைத்தும் இலையின் தடிமனான பகுதியில் இருக்கும்.

அடிக்கடி பயன்படுத்தாத ஊறுகாய்⸴ உப்பு போன்றவை இடதுபுறமாக இருக்கும். இதனால்தான் இலையின் வைப்பு இச்சாராம்சத்திலுள்ளது.

மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு

இன்று தமிழர் பெருமை பேசும் மரபுகள் எத்தனையோ மறக்கப்பட்டுவிட்டது. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்த பண்புகளை நாம் நமது இயல்பிற்கும்⸴ நவீன வாழ்க்கை முறைக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைத்துள்ளோம்.

விருந்தினர்களை உபசரிக்கும் பண்பு என்பது இன்று பெரிதும் அருகிப் போய்விட்டது. தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்கள்⸴ ஆடம்பர வாழ்க்கைமுறை⸴ மேற்கத்திய நாகரிகக் கலப்பு போன்றவை விருந்தினரை உபசரிப்பதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசித்தவர்க்கு உணவளிக்கும் பண்பில்லாமல் பகட்டுக்கு உணவளிக்கும் நிலை வந்துள்ளது. பகுத்துண்டு விருந்தோம்பலை மேற்கொண்ட இனம் இன்று நெறி தவறிப்போய்க் கொண்டிருக்கின்றது.

முடிவுரை

வழிப்போக்கர்களை உபசரிக்கும் முன்னோர்களின் விருந்தோம்பல் பண்பினை முழுமையாக பின்பற்ற முடியவில்லை என்றாலும் பசியால் வருவோருக்கு அவர்களைப் புறக்கணிக்காமல் இன்முகத்துடன் வரவேற்று உணவளிக்க வேண்டும்.

உலகிற்கு விருந்தோம்பல் பண்பை கற்றுக்கொடுத்த நம் முன்னோர்களின் பெருமை மங்காது நாமும் செயற்படுவோம்.

You May Also Like :
பாரதியார் தமிழ் பற்று கட்டுரை
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்