இந்த பதிவில் உலக வெப்பமயமாதல் கட்டுரை பதிவை காணலாம்.
மனிதர்களின் செயல்பாடுகள் தான் உலக வெப்பமயமாலுக்கு காரணமாக இருக்கின்றது அதில் முக்கிய காரணமாக மரங்கள் அழிக்கப்படுவதே ஆகும்.
- Ulagam Veppamayamathal Katturai In Tamil
- உலக வெப்பமயமாதல்
வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை
உலக வெப்பமயமாதல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலக வெப்பமயமாதல்
- வெப்பமயமாதலிற்கான காரணங்கள்
- தடுப்பதற்கான வழிமுறைகள்
- உலக ஸ்தாபனங்களின் பங்களிப்பு
- முடிவுரை
முன்னுரை
தற்போது உலகினை காட்டுத்தீ, நிலநடுக்கம், வளி மாசடைதல் போன்ற பல சூழல் பிரச்சினைகள் அச்சுறுத்திவருகின்ற போதும், இவற்றுள் மிக முக்கியமாக கருதப்படுவது உலக வெப்பமயமாதல் ஆகும்.
சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களிலும் மனிதன் வாழ்வதற்குரிய நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் ஒன்றாக அமைந்திருப்பது பூமியில் மட்டுமே ஆகும்.
அத்தகைய வளம் பொருந்திய பூமியில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் பல்வேறுபட்ட காரணிகளால் சிறிது சிறிதாக குறைவடைந்து வருகின்றது. அக் காரணிகளில் உலக வெப்பமயமாதலிற்கு மிகப் பெரிய இடமுண்டு.
பூமியினது வெப்பநிலையானது அதிகரிப்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதும் மனிதர்களது செயற்பாடுகளே பிரதான காரணமாக விளங்குகின்றன.
இக்கட்டுரையில் உலக வெப்பமயமாதலுக்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
உலக வெப்பமயமாதல்
சமீப காலமாக பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலை மிகவும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
கோடை காலத்தில் மனிதர்கள் வீட்டை விட்டு வெளிச்செல்ல முடியாதவாறு சூரியனின் கதிர்கள் பூமிக்கு நேரடியாக வந்து சேர்கின்றன. மேலோட்டமாக பார்க்கும் போது சூரியனது வெப்பநிலை அதிகரித்து விட்டது போல தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.
உலக வெப்பமயமாதல் எனப்படுவது வளிமண்டலத்தில் காபனீரொட்சைட், குளோரோ புளோரோ காபன் போன்ற வாயுக்களின் அதிகரிப்பினால் பூமியின் மேற்பரப்பானது வழமைக்கு மாறாக அதிகூடிய அளவில் வெப்பமடைவதே ஆகும்.
வெப்பமயமாதலிற்கான காரணங்கள்
புவி வெப்பமடைதலை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் காடழிப்பு, பசுமை குடில் வாயுக்களின் அதிகரிப்பு, எரிமலை வெடிப்புக்களின் போது வெளியேற்றப்படும் நச்சுப் புகைகள், மற்றும் பொலித்தீன் பிளாஸ்ரிக் போன்ற குப்பை கூழங்களை வெட்டவெளியில் எரித்தல் போன்றன முக்கியமாக கருதப்படுப்பகின்றன.
பசுமைக்குடில் வாயுக்களான காபனீரொட்சைட், குளோரோ புளோரோ காபன் போன்றன இப் பூமியை உறைநிலை அடையவிடாமல் காக்கின்ற போதும் அளவுக்கு அதிகமாகக் காணப்படும் போது பூமியின் வெப்பநிலையானது கணிசமான அளவில் அதிகரிக்கின்றது.
புவிவெப்பமடைதலிற்கு இன்னொரு முக்கிய காரணியாக அமைவது ஓசோன் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்.
அதாவது சூரிய ஒளியில் காணப்படும் மனிதர்களிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புற ஊதாக்கதிர்கள் இப்பூமியினை வந்தடைவதை இவ் ஓசோன் படை மண்டலங்கள் தடை செய்கின்றன.
ஆனால் பூமிக்கு நன்மை செய்கின்ற ஓசோன் மண்டலத்தை பசுமைக்குடில் வாயுக்கள் தாக்கி அதில் துளைகளை ஏற்படுத்துகின்றன.
இதனால் புறஊதாக்கதிர்களானவை பூமியை நேரடியாக வந்தடைந்து பூமியில் வெப்பமடைதலை அதிகரிக்கின்றது. இவையே புவி வெப்பமயமாதலிற்கான காரணங்களாகும்.
தடுப்பதற்கான வழிமுறைகள்
புவி வெப்பமடைதல் அதிகரிப்பதனால் துருவப்பகுதிகளான ஆட்டிக், அந்தாட்டிக்கா பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கின்றன. இதனால் கடல் மட்டமானது உயர்வடைந்து உலகின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்க வேண்டிய அபாயம் எழுந்துள்ளது.
அத்தோடு புவி வெப்பமடைவதால் காலநிலைகள் எதிர்பாராத வகையில் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. அவற்றுள் பருவகாலங்களில் திடீரென ஏற்படுகின்ற மாற்றங்கள், மழைவீழ்ச்சி அளவுகளில் ஏற்படும் மாற்றம், காற்றின் செறிவில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம்.
இப் புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான பிரதான வழி பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதலாகும்.
பொலித்தீன், இறப்பர் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தல் அல்லது மீள் சுழற்சிக்கு உட்படுத்துதல் வேண்டும். வாகனம் மற்றும் தொழிற்சாலை புகைபோக்கிகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்க வேண்டும்.
இவை புவி வெப்பமடைதலை குறைப்பதில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.
உலக ஸ்தாபனங்களின் பங்களிப்பு
உலக வெப்பமயமாதலை குறைத்து பூமியை பாதுகாப்பதில் உலக நாடுகள் அதற்கென தனித்தனி அமைப்புக்களை உருவாக்கி அதிகளவு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
ஓசோன் படையை பாதுகாப்பதற்காக 1987 இல் “மான்ரீல் உடன்படிக்கை” ஏற்படுத்தப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் செப்ரம்பர் மாதம் 16ம் திகதி “சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்” கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் புவிவெப்பமடைதலைப் பற்றி ஐப்பானில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் புவிவெப்பமடைவதை குறைப்பதற்காகவும், சூழலை பாதுகாப்பதற்காகவும் தத்தமது நாடுகளில் சட்டரீதியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
முடிவுரை
புவி வெப்பமடைதலானது உலகை அதன் அழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கின்றது. புவி வெப்பமடைதலின் அபாயம் முன்னரே உணரப்பட்டமையால் உலக நாடுகள் ஒன்றிணைந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் தாக்கத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
ஆனாலும் இப்பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாத்திரமே அந்நிலையை தொடர முடியும்.
எனவே சூழலிற்கு தீமை தருகின்ற விடயங்களை தவிர்த்து இயற்கையை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோமாக.
You May Also Like: