பேனாவின் சுயசரிதை கட்டுரை

பேனாவின் சுயசரிதை

இந்த பதிவில் 150 சொற்கள் கொண்டமைந்த இரண்டு(02) “பேனாவின் சுயசரிதை கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய உலகில் மாணவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக பேனா திகழ்கின்றது. எழுவதற்கு மக்கள் அதிகம் பேனாவினை தான் பயன்படுத்துகின்றார்கள்.

பேனாவின் சுயசரிதை கட்டுரை – 1

வாழ்வு முடிந்தது என்று முடிவு செய்யப்பட்டு தூக்கி எறியப்படுகின்ற நிலையினை அனுபவித்திருந்தால் என்னுடைய நிலையானது அவர்களுக்கு நன்கு புரியும். ஆம் நான் ஒரு மை தீர்ந்து போன பழைய பேனா.

நான் இன்று யாருக்கும் உபயோகமற்றவன் என்பதனால் கவனிக்கப்படாமல் ஒரு பழைய பெட்டியினுள் கவனிப்பாரற்று கிடக்கின்றேன். முத்து முத்தாக வெள்ளை காகிதங்களை நான் முத்தமிட்டு எழுதிய எழுத்துக்களை நினைக்கையில் மனம் கனக்கின்றது.

ஒரு புத்தகக்டையில் புதுவரவாக அன்று நான் விளம்பரப்படுத்த பட்டிருந்தேன். அன்று பாடசாலை துவங்கும் நேரத்தில் ஓடோடி வந்த ஒரு சிறுவன் என்னை ஆசையோடு கடைக்காரரிடம் கேட்டு வாங்கி கொண்டான்.

நன்றாக எழுதுகிறதா என்று வெற்று தாளில் கிறுக்கி பார்த்து அவன் உறுதி செய்து கொண்டான். பின்பு மகிழச்சியோடு என்னை தனது சட்டை பையில் பத்திரப்படுத்தி கொண்டான்.

புதிய பேனையை வாங்கிய பின் புதிதாக ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வத்தோடு வகுப்பிற்கு ஓடியவன். தனது கொப்பியின் முதல் பக்கத்தில் தனது பெயரை அழகாக எழுதி பார்த்து கொண்டது எனக்கு இன்னும் நினைவிருக்கின்றது.

“ப.தமிழ்க்குமரன்” என்று நான் எழுதிய முதல் வார்த்தை அத்தனை அழகாக இருந்தது. அன்றிலிருந்து நான் அவனுக்க உற்ற நண்பனானேன். அவனது அழகிய கையெழுத்துக்களாக அவனது அப்பியாச கொப்பிகளை நான் அலங்கரித்து கொண்டேன்.

அத்துடன் அவனிடம் நல்ல பேனா என்ற புகழையும் பெற்றேன். இவ்வாறு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எனது வாழ்க்கையில் எனது மை குறைய குறைய எனது வாழ்வும் குறைகின்றது என்பதனை என்னால் உணர முடிந்தது.

மை முடிந்த ஒரு பேனையாக நான் ஆனதும் அவன் என்னை தூக்கி எறியாது ஒரு அன்போடு தன் வீட்டு பழைய பெட்டியில் கொண்டுபோய் போட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்று வரை அங்கே தான் நான் கிடக்கின்றேன்.

பேனாவின் சுயசரிதை கட்டுரை – 2

“தேவை படுகின்ற போது தேடப்படுவோம் தேவை முடிந்ததும் தூக்கி எறியப்படுவோம்” என்பது எனது வாழ்வில் நன்றாக பொருந்துவதாக இருக்கின்றது.

பாடசாலையின் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வருகின்ற குமரன் என்பவனது கைகளை அலங்கரித்தவன் என்ற பெருமை உடையவனாக இன்று குப்பபையில் இருந்து ஒரு பேனா பேசுகின்றேன்.

ஆம் அவன் ஒரு திறமையான மாணவன். ஆர்வத்துடன் கல்வி கற்று அனைத்து பாடங்களிலும் சிறந்த புள்ளிகளை பெற்று அனைவராலும் பாராட்டப்படுகின்ற ஒரு மாணவன். அவன் தனது பத்தாம் தர இறுதி பரீட்சைக்காக சமூகம் அளிக்கின்ற வேளையில் என்னை ஒரு கடையிலே வாங்கி கொண்டான்.

அவன் ஆர்வத்தோடு எழுதிய விஞ்ஞான பாட பரீட்சையின் விடைத்தாள்களில் நான் எனது முழு திறனோடு அவனுக்கு பலம் சேர்த்தேன். சிறந்த முறையிலே அவன் பரீட்சை எழுத நான் அவனுக்கு ஒரு கருவியாய் உதவினேன்.

திறமையான ஒருவனுடைய கையில் நான் சென்று சேர்ந்திருப்பதையிட்டு மனதுக்குள் மகிழ்ந்து போனேன். பரீட்சைகள் முடிந்து பெறுபேறுகள் வந்தன எல்லா பாடங்களிலும் அவனே உயர்வான புள்ளிகளை பெற்றிருந்தான்.

ஒரு பேனையாக அவனது வெற்றிக்காக உழைத்த பெருமை எனக்கு இருந்தது. அப்போது எனது மை முன்பிலும் வெகுவாக குறைந்து விட்டது.

இதனை அவதானித்த அவன் நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் இன்னும் என்னை போன்ற பல புதிய பேனைகளை அவன் வாங்கி கொண்டு என்னை தூக்கி வீசி விட்டான்.

நானோ மனம் உடைந்து போனேன். புதியவர்களை கண்டால் பழையவர்களை மறக்கின்றது மனித இயல்பு போல நானும் குப்பையில் வீசப்பட்டேன். அன்றில் இருந்து இன்றுவரை கண்ணீரோடு நான் இங்கே தவித்துக்கொண்டிருக்கின்றேன்.

You May Also Like:

கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை கட்டுரை

நான் ஒரு மிதிவண்டி கட்டுரை