ஆசிரியர் பற்றிய கட்டுரை

aasiriyar patri katturai in tamil

இந்த பதிவில் “ஆசிரியர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நம் மூதாதையர் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர்.

ஆசிரியர் பற்றிய கட்டுரை

ஆசிரியர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆசிரியர்களின் சிறப்புகள்
  • உலக ஆசிரியர் தினம்
  • நல்ல ஆசிரியரின் பண்புகள்
  • ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என பெற்றோருக்கு பின் உயர்ந்த இடத்தில் ஆசிரியர்களே முன் நிறுத்தப்படுகின்றனர்.

வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது. ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களை ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, மாணவர் வாழ்க்கையில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் தெய்வங்களாகிய ஆசிரியர்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

ஆசிரியர்களின் சிறப்புகள்

மாணவர்களாகப் பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.

மாணவர்களின் சமூக பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். மாணவர்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்கள் ஆசிரியர்கள்.

குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் நம் மூதாதையர் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர்.

உலக ஆசிரியர் தினம்

ஒக்டோபர் 05 “உலக ஆசிரியர் தினம்” உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்களால் ஆற்றப்படும் பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து மடல்கள், சுவரொட்டிகள், பரிசுகள் போன்றவற்றை மாணவர்கள் அன்பளிப்புச் செய்கின்றனர்.

ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல ஆசிரியரின் பண்புகள்

ஆசிரியர் ஒருவர் நல்ல தொடர்பாடல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பர். மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள கூடியவாறு கற்பித்தலை மேற்கொள்ள கூடியவராக இருப்பார்.

மாணவர்கள் மீது மிகுந்த அக்கறையும் அவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு வழிவகுப்பர். மாணவர்களின் திறன்களின் அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ள கூடியதாக இருப்பார்.

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்பித்தல் முதல் மாணவர்களை வழிநடத்துவது வரை பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாணவர் ஆசிரியர்கள் இடையிலான உறவுகள் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மாணவர்களது திறமைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.

ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் ஒரே பாடத்தை நன்கு படித்த குழந்தைகள் மற்றும் அதில் அறிமுகமே இல்லாத குழந்தைகள் என இரண்டு வகையான சிறார்களுக்கும் கற்றுத்தர வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்.

குழந்தைகள் மிகைக் குறும்பு குழந்தைகளாக, கற்பதில் சிரமம் உள்ள குழந்தைகளாக இருக்கும் போது அவர்களை வழிநடத்துவது கடினமாகிறது.

முடிவுரை

ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்கள் ஆசிரியர்களேயாவர்.

வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் என்றென்றும் போற்றுதற்கும், மரியாதைக்கும் உரியவர்களாவர்.

ஒரு மாணவனுடைய வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களே மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள்.

இவர்களது தியாகங்களுக்கு மதிப்பளித்து என்றென்றும் ஆசிரியர்களைப் போற்றுவோம்.

You May Also Like:
மாணவர் ஒழுக்கம் கட்டுரை
கல்வி கண் திறந்தவர் கட்டுரை