பாரதியார் தமிழ் பற்று கட்டுரை

Bharathiyar Tamil Patru Katturai In Tamil

இந்த பதிவில் பாரதியார் தமிழ் பற்று கட்டுரை பதிவை காணலாம்.

மகாகவி என்று மக்களால் அழைக்கப்படும் பாரதியார் தமிழுக்கும் சமூகத்திற்கும் பல சேவைகளை செய்துள்ளார்.

பல தொன்மையும் சிறப்பும் கொண்ட தமிழ் மொழி மீது பாரதியார் கொண்ட பற்று அளவிட முடியாதது.

  • பாரதியார் தமிழ் பற்று
  • Bharathiyar Tamil Patru Katturai In Tamil
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

பாரதியார் தமிழ் பற்று கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வரலாறு
  3. பாரதியாரின் தமிழ் பற்று
  4. படைப்புக்கள்
  5. சிறப்பு பெயர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக நூற்றாண்டுக்கு முன்னதாகவே தன் கவிதையால் உரக்க குரல் கொடுத்தவன் தான் பாரதி.

இவருடைய கவித்திறனை மெச்சி “பாரதி” என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசவையால் வழங்கப்பட்டது.

தேசிய கவிஞன் என் பாசமிகு மீசை முறுக்கு கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெருமைகளையும் தமிழ் பற்றையும் இக்கட்டுரையில் காண்போம்.

வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சின்னச்சாமி என்பவருக்கும் லக்ஷ்மி அம்மாள் என்பவருக்கும் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பாரதியார் பிறந்தார். இவர் பிறந்த போது அவருக்கு சூட்டப்பட்ட இயற்பெயர் “சுப்பிரமணியன்” ஆகும்.

தனது தாத்தாவான ராமசாமி அய்யரிடம் தன் தாய்மொழி தமிழை கற்க ஆரம்பித்தார். பாடம் கற்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே சிறிய சிறிய கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

சிறுவயதிலேயே தனது தந்தையின் பணி இடமான எட்டயபுர அரண்மனையில் உள்ளவர்களை தனது கவி திறமையால் கவர்ந்து “பாரதி” என்ற பெயரினை பெற்றுக்கொண்டார்.

அவரது 14வது வயதில் செல்லம்மா என்கிற 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட பின் மதுரையில் தமிழாசிரியராகவும் சுதேச மித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர் சுதந்திர தாகம் காரணமாக அரசியலில் ஆர்வம் காட்டினார். இந்தியா என்ற வார இதழையும் பாலபாரதம் என்ற ஆங்கில வார இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.

இந்திய சுதந்திரத்திற்காக தன்னுடைய எழுத்துக்களில் எதிர்ப்பை காட்டியதன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் சிறிது காலம் கழித்தார்.

1921 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று தனது 39 வது வயதில் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டார்.

பாரதியாரின் தமிழ் பற்று

பாரதி ஒரு பன்மொழிப் புலவர். தமிழ் தவிர ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளை கற்று தேர்ந்தார்.

எனவே தமக்கு தெரிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியினை ஒப்பிட்டுப் பார்த்து தமிழ் மொழி இனிய மொழியாகவும் சிறந்த மொழியாகவும் இருப்பதை எண்ணி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

அடுத்த நிலையில் தாம் அறிந்த புலவர்களிலேயே தமிழ்ப்புலவர்கள் ஆகிய “கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் போல சிறந்த புலவர்கள் வேறு எங்கும் பார்க்கவில்லை” என்றார் பாரதியார்.

இவர் குழந்தைகளுக்காக பாடிய பாப்பா பாட்டில் குழந்தைகளுக்கு பலவிதமான அறிவுரைகளையும் கூறுகின்றார். தாய் நாட்டின் பெருமை, தாய்மொழியின் பெருமை ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு உரைக்கின்றார்.

அவ்வாறு கூறும் போது தமிழ் சொற்களின் பெருமையினை “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழி செல்வாக்குப் பெற்று தமிழர்களாலும் கூட தமிழ்மொழி ஒதுக்கப்பட்டது. இதனைப் பார்த்து வேதனை அடைந்த பாரதியார் தமிழுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும்.

தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழி வாழும் வளரும் என அறிந்து அதற்காக சில விடயங்களை முன்னிறுத்தி ஆக்கங்களை வெளியிட்டார்.

அவையாவன தமிழ்நாட்டில் பிள்ளைகள் தமிழ் வழியிலேயே கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் எங்கும் எதிலும் தமிழ் இருக்கவேண்டும். எல்லா துறைகளிலும் தமிழைப் புகுத்த வேண்டும்.

அப்பொழுதுதான் தமிழ் செழிக்கும் உலகங்களும் பிறமொழியில் உள்ள நல்ல நூல்கள் ஆக்கங்கள் என்பன தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மொழி வளம் பெறும் எனவும் கூறியுள்ளார்.

படைப்புக்கள்

பாரதியார் தந்த படைப்புகளில் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, பாப்பா பாட்டு, விநாயகர் நான்மணிமாலை, பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, பாரத தேவியின் திருத்தசாங்கம் என்பவை கவிதைகளாகும்.

உரைநடை நூல்களாக தராசு, சந்திரிகையின் கதை, ஞானரதம் என்பன காணப்படுகின்றன.

சிறுகதை ஆக்கங்களாக ஸ்வர்ண குமாரி, சின்ன சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு, பூலோகரம்பை, தண்டிம சாஸ்திரி, கதைக் கொத்து, நவதந்திரக் கதைகள் என்பன காணப்படுகின்றன.

சிறப்பு பெயர்கள்

பாரதியார் தாம் கொண்டிருந்த தமிழ் பற்று மற்றும் கவித்திறனால் பல சிறப்புப் பெயர்களை பெற்றுள்ளார்.

அவையாவன மகாகவி, மக்கள் கவிஞர், தேசியகவி, விடுதலைக் கவி, முனன்றி புலவன், தமிழ்கவி, உலக கவி, தற்கால இலக்கிய விடிவெள்ளி, பைந்தமிழ் தேர்ப்பாகன், சிந்துக்கு தந்தை என்பனவாகும்.

முடிவுரை

பாரதியார் தன் கவி திறனிலும் தமிழ் மீது கொண்ட பற்றிலும் பெண் விடுதலையிலும் சமூக சீர்திருத்தங்களிலும் அரசியல் கொள்கைகளிலும் மிக முற்போக்கான எண்ணங்களை கொண்டிருந்தார்.

எனவே தான் பாரதி மறைந்தாலும் கூட பாரதியின் எண்ணங்களும் கவிதைகளும் பாடல்களும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

You May Also Like :

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை