இந்த பதிவில் ஓதுவது ஒழியேல் கட்டுரை பதிவை காணலாம்.
ஓதாமல் ஒருநாளும் இருக்க கூடாது அதாவது அன்றாடம் படிக்க வேண்டும். படிக்காமல் சென்ற நாள் வீணாக நாள் ஆகும்.
ஓதுவது ஒழியேல் என்றால் அன்றாடம் படிக்க வேண்டும். நமக்கு உணவு, உறக்கம் எப்படி அவசியமோ அவ்வாறே அன்றாடம் படிப்பதும் அவசியம்.
- ஓதுவது ஒழியேல்
- Othuvathu Oliyel Katturai In Tamil
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை
ஓதுவது ஒழியேல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கல்வியின் மகத்துவம்
- கல்வி இன்மையால் நிகழும் விளைவுகள்
- கல்வியே அழியா செல்வம்
- முடிவுரை
முன்னுரை
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்று பிற” என்கிறார் வள்ளுவர் அதாவது இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை விடவும் சிறப்பு வாய்ந்த செல்வம் ஒன்று உள்ளது என்றால் அது கல்வி செல்வமே ஆகும் என்கிறார்.
இதனாலேயே ஒளவையாரும் “ஓதுவது ஒழியேல்” என்று பாடுகிறார் நாம் பிறந்த நாள் தொட்டு இறக்கும் வரையில் கற்று கொள்வதை நிறுத்த கூடாது. ஒவ்வொரு நாளும் கற்பதை நிறுத்த கூடாது என்பது இதன் கருத்தாகும்.
படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பது சிறந்தது என்கிறார் பேரறிஞர் “பிளேட்டோ”. கல்வியினால் உயர்ந்தவர்கள் ஏராளம் ஆகையால் தான் கல்வி உயர்ந்த விடயமாக பார்க்கப்படுகிறது.
இக்கட்டுரையில் கல்வியின் மகத்துவம், கல்வி இன்மையால் நிகழும் விளைவுகள், கல்வியே அழியா செல்வம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.
கல்வியின் மகத்துவம்
மனிதர்களாக நாம் பிறந்ததின் பிறவி பயனாக கல்வியே உள்ளது. அதாவது உலகத்தில் உள்ள எல்லா படைப்புக்களை விடவும் மனிதன் ஒரு படி உயர்ந்து நிற்க காரணம் சுயமாக சிந்திக்கும் திறனும் கற்று அதன் வழி ஒழுகவும் மனிதன் அறிந்திருப்பதே எனலாம்.
இதனால் தான் வள்ளுவ பெரும்பாவலர் “கண்ணுடையோர் என்போர் கற்றோர் கல்லாதோர் முகத்திரண்டு புண்ணுடையர்” என்று கற்றவர்களின் பெருமையை கூறி நிற்கிறார்.
கல்வி ஒன்றினாலேயே மனிதன் அறியாமை எனும் இருளில் இருந்து விடுபட்டு ஆக்க பூர்வமாய் சிந்திக்க தலைப்படுகின்றான்.
கற்றவர்கள் அதிகம் பண்புடையவராய் இருப்பர் கற்ற பின் அதற்கேற்ப ஒழுகுவர் ஆதலால் ஓதுதலும் அதனை உணர்ந்து வாழ்தலும் மக்கள் வாழ்வினை அழகாக்கிறது.
இதனை ஒளவையார் சிறப்பிக்கையில் “மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன்“
ஏனெனில் மன்னற்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று கற்றோரின் பெருமையையும் கல்வியின் பெருமையையும் கூறி பெருமை கொள்கிறார்.
அதனால் தான் நம் முன்னோர் “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று கல்வியின் மகத்துவம் எடுத்துரைக்கின்றனர்.
கல்வி இன்மையால் நிகழும் விளைவுகள்
வளர்ந்து பிறப்பது வாரிசு உரிமை பிறந்து வளர்வதே பிறப்பின் பெருமை ஆகையால் என்ன தான் பணக்காரர்களாய் பிறப்பினும் அவர்களது பணத்தை விடவும் ஒரு ஏழை குடிசையில் பிறந்தவர்களின் கல்வி பல மடங்கு உயர்ந்தது.
சிறு வயதிலே கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி நாம் படிக்கவில்லை என்றால் காலம் முழுவதும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி மாடாய் உழைத்து ஓடாய் தேய்கின்ற நிலையானது உருவாகும்.
இதனை வள்ளுவர் “வேற்றுமை தேய்ந்த நாட்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் கீழப்பால் ஒருவனும் அவன் கட்படும்” என்கிறார்.
அதாவது எந்த குலத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவன் படிப்பினால் உயர்ந்தான் என்றால் அவனுக்கு கீழ் தான் மற்றவர்கள் என்பது கருத்து கல்வியை அறியாது போகின்ற ஒரு சமூகம் பாரிய பின்னடைவுகளை எதிர்கொள்ளும்
அச்சமூகத்தில் ஒழுக்கமற்றவர்களாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு அச்சமூகமே சீரழியும் நிலையானது உருவாகும்.
சரி எது தவறு எது என பகுத்தறியும் நிலையினை கல்வியே உருவாக்கி தருகிறது. உலகில் முழுமையான கல்வியறிவை பெறாதவர்களே சமூகத்துக்கு வேண்டாத செயல்களில் ஈடுபடுவர்.
கல்வியே அழியா செல்வம்
உலகில் உள்ள எல்லா செல்வங்களும் அழிவடைய கூடியவை ஆனால் கல்வியே அழிவில்லாதது இயற்கை அனர்த்தங்களாலோ பகைவராலோ கொள்ளையிட முடியாது கொடுத்தாலும் நிறைவன்றி குறைவுறாத செல்வம்.
பணத்தை அதிகமாக வைத்திருப்பவன் அதனை பாதுகாக்க வேண்டி அச்சம் கொள்வான். அவனுக்கு எதிரிகளும் விரோதிகளும் அதிகமாக இருப்பார்கள்.
ஆனால் கல்வி செல்வம் உடையவர்கள் அதிகம் நண்பர்களை கொண்டிருப்பர். மனதுக்கு அமைதியையும் வாழ்வில் நிம்மதியையும் தர வல்ல செல்வம் ஒன்று உள்ளது என்றால் அது கல்வியே ஆகும்.
ஆதலால் தான் “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று ஒளவையார் பாடுகிறார்.
கல்வியினால் உயர்ந்தவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் கடினமாக இருப்பினும் நெல்லிக்கனி போல பின்னாளில் இன்பத்தை கொடுக்கும் என்பதே தெட்ட தெளிவான உண்மையாகும்.
முடிவுரை
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசுவதை போலவே கற்றோரோடு சேர்ந்த சுற்றமும் அந்த நாடும் நல்வழி அடைவதால் கற்றவர்களே சிறந்த முன்னோடிகளாக இருப்பதனால் அனைவரும் கற்க ஆர்வம் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.
அதனாலே தான் உலகநீதி எனும் நூல் “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்கிறது.
பெற்றவரும் சுற்றவரும் ஒருவர் கல்வியில் உயர்வதையே விரும்புவதனால் அனைவரும் கற்று வாழ்வில் உயர்வோம்.
You May Also Like: