இந்த பதிவில் “பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.
பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை – 1
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனித உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது பெற்றோர்கள் தான் ஆகவே தான் நாம் பெற்றோர்களை மதிக்க வேண்டும்.
எவன் ஒருவன் தனது தாய் தந்தையர்களுக்கு கீழ்பணிந்து அவர்களது வழிகாட்டுதலில் வாழ்கின்றானோ அவன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் என்பது திண்ணமாகும். ஏன் என்றால் பெற்றோர்கள் தான் எமக்கு இந்த உடலையும் இந்த உலக வாழ்க்கையினையும் கொடுத்தவர்கள்.
எம்மை பத்து திங்கள் தன் கருவில் சுமந்து பெற்றெடுத்த தாய் எம்மை பாலூட்டி சீராட்டி வளர்க்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார். அது போல எம்மையும் எமக்கான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கென எமது தந்தை எவ்வளவு வியர்வை சிந்தி கடினமான உழைத்திருப்பார்.
தமது குழந்தைகளுக்கு அன்பையும் கல்வியினையும் ஊட்டி அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்று எண்ணுகின்ற சுயநலம் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமானால் அது பெற்றோர்களாக தான் இருக்க முடியும்.
எனவே நாம் அவர்களது அன்பையும் அரவணைப்பையும் வாழ்வனைத்தும் பெற்று கொள்வது எமது பாக்கியமாகும்.
அதற்கு நாம் கைமாறு செய்வதாக இருந்தால் அவர்களை பெருமைப்படுத்தும் படியாக ஒரு நல்ல மனிதனாக இந்த சமூகத்தில் வாழ்வதோடு அவர்களது இறுதி காலம் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தான். இதனை விட உயர்ந்த செயல் இந்த உலகில் எதுவும் இருந்து விட முடியாது என்பதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோரை மதிப்போம் தமிழ் கட்டுரை – 2
“தாயில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று பாடியருளினார் ஒளவையார். அதாவது இந்த உலகத்தில் எம்மை பெற்ற அன்னையை விடவும் வணங்குவதற்கு உயர்ந்த விடயங்கள் எதுவும் இருக்க முடியாது என்பது கருத்தாகும். அது போல எமது வாழ்வில் தந்தை சொல்கின்ற வார்த்தைகள் தான் உயர்வானது என்று கூறியிருக்கின்றார்.
எனவே நாம் எம்மை பெற்ற தாய் தந்தையரை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்கள் அனைவரும் தமது பெற்றோர்களை மதித்தவர்கள் தான். தாம் பெற்ற குழந்தைகளை நல்வழியிலே வளர்த்து ஆளாக்குவதற்காக பெற்றோர்கள் தம்மையே அர்ப்பணிக்கின்றார்கள்.
இவர்களது தியாகத்துக்கு நிகராக இந்த உலகத்தில் வேறு எதுவும் இருந்து விட முடியாது. ஆகச்சிறந்த அன்பை தரும் அன்னையினையும் மிகச்சிறந்த ஆசிரியனாக தந்தையினையும் பெற்று கொண்ட அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறலாம்.
தாம் வாழ்வில் அனுபவித்த துன்பங்களை தமது பிள்ளைகள் அனுபவித்து விடக்கூடாது என்று எண்ணுகின்றவர்கள் தான் பெற்றோர்கள். இவ்வாறான வணக்கத்துக்குரியவர்களை மதிக்காது நாம் நடப்போமானால் எம்மை போன்ற கயமை நிறைந்தவர்கள் வேறுயாராகவும் இவ்வுலகில் இருக்க முடியாது.
இதனால் தான் நம் சான்றோர்கள் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று வழங்கி வருகின்றார்கள். இன்றைய காலத்தில் பலரும் தம்மை பெற்று வளர்த்த பெற்றோர்களை மதிக்காமல் அவர்களை முதியோர் இல்லங்களில் விடுகின்ற கொடுமையினை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். எமது பெற்றோரை மதித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.
You May Also Like: