புத்தகம் பற்றிய கட்டுரை

Puthagam Katturai In Tamil

இந்த பதிவில் “புத்தகம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நல்ல புத்தகங்கள் நம் வாழ்வை உயரத்திற்கு கொண்டு செல்ல உதவுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வை மாற்றக்கூடிய சக்தி புத்தகங்களுக்கு உண்டு.

புத்தகம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. புத்தகங்களின் முக்கியத்துவம்
  3. புத்தகப் பிரியர்கள்
  4. புத்தகங்களின் மகத்துவம்
  5. சிறந்த புத்தகங்களைக் கண்டறிவது
  6. முடிவுரை

முன்னுரை

தொட்டு தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம். தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும்.

“புத்தகம் இல்லாத அறை உயிரில்லாத உடலுக்கு ஒப்பானதுˮ என்கிறார் சிசரோ. “மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ என்கின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

“புத்தகங்களை நேசி ஒரு புத்தகத்தைத் தொடுகின்ற போது நீ ஒரு அனுபவத்தை பெறுவாய்ˮ என்கின்றார் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்கள்.

எனவே புத்தகங்களே வாழ்வில் சிறந்த நண்பர்களாகின்றன. உலகில் உயரமான இடத்திற்கு சென்றவர்கள் பலரும் புத்தகப்பிரியர்களே. புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

புத்தகங்களின் முக்கியத்துவம்

எண்ணப் பதிவாகிய கருத்துக்களை உருவில் காட்ட புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன. நூல்களின் முக்கியத்துவம் அறிந்த நம் முன்னோர்கள் பனை ஓலையில் எழுதப்பட்ட பதிவுகளை துளையிட்டு நூல்கயிற்றில் கோர்த்து வைத்தனர்.

எப்போதோ நிகழ்ந்ததை இப்போது அறிந்து கொள்ள புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன. நம் அறிவைப் பெருக்கிக் கொண்டு வாழ்வில் வளம் பெற புத்தகங்கள் முக்கியமானவையாகும்.

தெரியாத விடயங்களைத் தெரிந்து கொள்ளவும்⸴ புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் புத்தகங்கள் முக்கியம் பெறுகின்றன.

புத்தகப் பிரியர்கள்

உலகின் பெரிய மேதைகள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. நூல்களை வாசிப்பது என்பது ஓர் அற்புதமான கலையாகும்.

கிரேக்க சிந்தனையாளரான சாக்ரடீஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு கொடுக்கும் வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

நேரு அவர்கள் தன் சடலத்தின் மீது மலர்களுக்குப் பதிலாகப் புத்தகங்களை வைக்கச் சொன்னார். இது அவர் புத்தகங்கள் மீது கொண்டுள்ள பிரியத்தை வெளிப்படுத்துகின்றது.

இது போல் பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அறுவைச் சிகிச்சை அன்று தான் படித்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னார்.

இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் புத்தகப் பிரியர்களே!

புத்தகங்களின் மகத்துவம்

புத்தகங்களானவை காரிருளில் செல்பவர்களுக்கு பேர் ஒளியாகவும்⸴ வழி தவறிச் செல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.

ஒருவர் பயிலும் சிறந்த புத்தகங்கள் அவரின் சிறந்த நண்பர்களாக விளங்குகின்றன. ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாகக் கழிக்கவும்⸴ அறிவை மேம்படுத்தவும் புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அறிவுப் பசிக்குப் புத்தகங்கள் தீனி போடுகின்றன.

சிறந்த புத்தகங்களைக் கண்டறிவது

பாடநூல்கள் மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் வாழ்க்கை முறை⸴ ஒழுக்க நெறிகளை வளப்படுத்த பொது நூல்கள் அடித்தளமாய் உள்ளன.

நல்ல நூல்களே நம்முள் நல்ல குணங்களை வளர்க்கின்றன. ஆர்வத்தைத் தூண்டி தொடர்ந்து படிக்க வைக்கும் நூல்களே சிறந்த நூல்கள் ஆகும்.

எவை நம்மைத் தூங்க விடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துகின்றதோ அவையே சிறந்த புத்தகங்கள் ஆகும். எனவே நன்கு ஆராய்ந்து பயன் தரும் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும்.

முடிவுரை

ஒருவர் எவ்வளவு தூரம் நூல்களைத் தேடிப் படிக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவரது படைப்பாற்றல் நிலைத்திருக்கும்.

“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவுˮ என்கின்றார் அவ்வையார். இதற்கிணங்க நல்ல புத்தகங்களைப் படித்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

நூலகத்தின் சிறப்பு கட்டுரை

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்