இந்த பதிவில் “ஆரோக்கியம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
உடல் நிலை, மன நிலை மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் ஆரோக்கியமாகும்.
ஆரோக்கியம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரோக்கியம் என்பது
- ஆரோக்கியத்தின் அவசியம்
- மன ஆரோக்கியம்
- உடல் ஆரோக்கியம்
- முடிவுரை
முன்னுரை
மனித வாழ்வில் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லையென்றால் பயனில்லை. இத்தகைய மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியம் ஆகும். எனவே மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது இன்றியமையாததாகும்.
உடல் நிலை, மன நிலை மற்றும் சமுதாய நலத்துடன் தொடர்புடையது தான் ஆரோக்கியமாகும். ஒரு மனிதனின் சந்தோஷம் ஆரோக்கியத்தில் அடங்கியுள்ளது.
இதனால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஆனால் இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்கள் பின்பற்றிய பல ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் தற்போது காணாமல் போய் விட்டன என்றே கூறலாம்.
ஆரோக்கியம் என்பது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே ஆரோக்கியம் எனலாம்.
உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தை நோய்களால் பாதிக்கப்படுவதைத் தாண்டி நல்வாழ்வின் நிலை என்று வரையறுக்கிறது. மேலும் இது உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வையும் உள்ளடக்கியது எனக் கூறுகின்றது.
ஆரோக்கியத்தின் அவசியம்
சிறந்த ஆரோக்கியமே அனைத்திற்கும் வழிகாட்டும். மக்களின் உடல் ஆரோக்கியம் நாட்டில் ஒரு பெரும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆரோக்கியத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
அன்றாட வாழ்வில் வேலைகளை சிரமமின்றி செய்து முடிப்பதற்கு ஆரோக்கியம் அவசியமாகின்றது. நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகின்றது.
நீண்ட ஆயுளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியமாகின்றது.
மன ஆரோக்கியம்
மன ஆரோக்கியம் ஒருவரின் உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை குறிக்கின்றது. ஒரு நபரின் மன ஆரோக்கியம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் போலவே முக்கியமானது.
மனஅழுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு மன ஆரோக்கியம் அவசியமாகின்றது.
மன அழுத்தத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம், மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் தேர்வுகள் செய்வது என்பதையும் தீர்மானிக்க மன ஆரோக்கியம் உதவுகிறது.
போதுமான தூக்கம் பெறுதல், மற்றவர்களுக்கு உதவுதல், மன அழுத்தத்தை நிர்வகிக்க புதிய சமாளிக்கும் திறன்களைக் கற்றல், மற்றவர்களுடன் இணைந்திருத்தல் போன்றவற்றின் மூலம் மன ஆரோக்கியத்தை பேணலாம்.
உடல் ஆரோக்கியம்
உடல் ரீதியான ஆரோக்கியம் வாழ்க்கை முறையை அபாயம் இல்லாமல் அதாவது நோயில்லாமல் அமைத்துக் கொள்வதில் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலமே நோயற்ற வாழ்வினை வாழ முடியும்.
முறையற்ற உணவுமுறை, உடல் உழைப்பு மற்றும் உடற் பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், எதிலும் அவசரம், முறையான உறக்கம் இன்மை இவைகள் எல்லாம் பல்வேறு வியாதிகளுக்கு வித்திடுகின்றன.
சீரான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி, உடலுக்கு சரியான ஓய்வு போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலம் பெறலாம்.
முடிவுரை
உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும். அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.
உணவில் ஒழுக்கம், உடலுக்குரிய ஓய்வு, எண்ணங்களை சரி செய்து விழிப்புடன் நல்ல எண்ணங்களை மட்டும் பின்பற்றி வாழ்தல், தியானம், மூச்சு பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்வை வாழலாம்.
மேலும் தனிமனித ஒழுக்கத்தை வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கையை துன்பமின்றி வாழலாம்.
You May Also Like: |
---|
உணவை வீணாக்காமல் உண்ணுதல் |
நெகிழி தீமைகள் கட்டுரை |