இந்த பதிவில் வாய்மையே வெல்லும் கட்டுரை பதிவை காணலாம்.
“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” எந்த ஒரு சூழ்நிலையிலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது நிதர்சனம்.
நாம் அனைவரும் சத்தியம், உண்மையின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் வாழ்வில் மகிழ்ச்சி நிம்மதி நீடிக்கும்.
- வாய்மையே வெல்லும்
- Vaimaye Vellum Katturai In Tamil
தூய்மை இந்தியா கட்டுரை
வாய்மையே வெல்லும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாய்மை எனப்படுவது
- வாய்மையின் வலிமை
- நிகழ்காலம்
- முடிவுரை
முன்னுரை
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத செயல்” என்கிறார் வள்ளுவர்.
அதாவது வாய்மை எனப்படுவது பிறருக்கு தீங்கு விளைவிக்காத செயல்கள் வாய்மை எனும் வகைக்குள் அடக்கப்படுகின்றன. ஒழுக்கம் நிறைந்த மனிதர்கள் வாய்மையினை கடைப்பிடிப்பார்கள்.
நம்முன்னவர்கள் சத்தியம் உண்மை என்பவற்றை கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். வாய்மையினை கடைப்பிடித்து வாழ்பவர்கள் வாழ்வில் சிறப்படைவார்கள். வாய்மை என்பது உயர்ந்த அறநெறி ஆகும்.
இக்கட்டுரையில் வாய்மை எனப்படுவது, வாய்மையின் வலிமை மற்றும் நிகழ்காலம் ஆகிய விடயங்கள் நோக்கப்படுகின்றன.
வாய்மை எனப்படுவது
வாய்மை எனப்படுவது அதாவது மனிதன் வாழ்வில் மனசாட்சியோடு தான் வாழ்வனைத்தும் வாழ்ந்தாக வேண்டும். மனச்சாட்சிக்கு ஏற்ப மனிதன் வாழ்வதனையே வாய்மை என்று கூறலாம்.
நன்மையினை பயக்குமாக இருந்தால் பொய்யினை கூறுவது கூட நன்மையை பயக்கும் என்கிறார் வள்ளுவர் இதனை “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்று கூறுகிறார்.
வாய்மையின் வழி வாழ்பவர்கள் மன நிறைவுடன் வாழ்வதனை நாம் அவதானிக்கலாம். வாய்மையோடு வாழ்கின்ற வாழ்க்கை தான் அறம் என்று திருக்குறள் கற்பிக்கின்றது.
வாழ்வில் எந்தநிலை வரினும் மனம் தளராது சத்திய வழிநின்றவர்கள் என்றும் மங்காப்புகழ் உடையவர்களாக இம் மண்ணில் வாழ்ந்து போயுள்ளனர்.
உதாரணமாக அரிச்சந்திரனுடைய வாழ்க்கையானது வாழ்வில் எவ்வகையான துன்பங்கள் சோதனைகள் வந்த போதிலும் நேர்மை தவறாது பொய்யுரைக்காது வாழ்ந்தவர்.
வாய்மையின் வழியில் வாழ்பவர்களை இறைவன் சோதிப்பான் ஆனால் ஒருபொழுதும் கைவிடமாட்டான். ஆனால் வாய்மை தவறியவர்களுக்கு நிறையவே கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான்.
எனவே நாமும் வாய்மையினை கடைப்பிடிக்க வேண்டும்.
வாய்மையின் வலிமை
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்கிறார் வள்ளுவர். அதாவது பொய்யாமையை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் பிற அறச்செயல்களை ஆற்றாது விடினும் அது நன்மையை தரும் என்கிறார்.
அந்தளவிற்கு வாய்மை வலிமையுடையது பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும். நமது வாழ்வில் அதர்மம் செய்பவர்கள் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் நல்ல மனதுடையவர்கள் வேதனையுடன் வாழ்வார்கள் இருப்பினும் இறுதி காலங்களில் அவர்கள் செய்த வினைக்குரிய பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல நேரிய வழி சென்றவர்கள் வேதனைகளை அனுபவித்தாலும் அவர்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றியடைவார்கள் என்பது திண்ணம்.
இன்னா செய்தாரை தெய்வம் ஒறுக்கும் வாய்மை உடையாரை தெய்வம் காக்கும் என்பது வாய்மையின் வலிமையாகும். ஆதலால் தான் சட்டநிறுவனங்கள் நீதிமன்றங்களில் “வாய்மையே வெல்லும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
நிகழ்காலம்
“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்பது ஆன்றோர் வாக்காகும்.
இன்றைக்கு கலிகாலம் எங்கும் அதர்மமும் அநியாயமும் அடக்குமுறைகளும் தலை விரித்தாடுகின்றன. இன்றைக்கு வாய்மை இல்லாத மனிதர்களே செல்வந்தர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் உள்னர்.
தவறான வழியில் உழைத்தால் தான் முன்னேறமுடியும் என்ற தவறான எண்ணம் இன்று அனைவருக்குள்ளும் வேரூன்றி விட்டது.
சத்தியம், நேர்மை, வாய்மை எனும் வழியில் நிற்பவர்களையும் அவற்றை பற்றி பேசுபவர்களையும் ஏளனமாக பார்க்கும் மனநிலையானது இன்றைக்கு வளர்ந்து விட்டது.
இவ்வாறான மனநிலை அழிவின் பாதைக்கு மனிதர்களை இட்டுசெல்கிறது.
முடிவுரை
“சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளை” என்பது போல என்ன தான் அதர்மிகள் ஆண்டாலும் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டாலும் ஊழ்வினை என்றொரு விடயம் இருக்கிறது.
அதன் பிரகாரம் வாய்மை தவறியவர்கள் மனிதமற்ற அரக்கர்கள் இயற்கையை சூறையாடுபவர்கள் போன்றவர்கள் நிச்சயம் ஒரு நாள் அழிக்கப்படுவார்கள். வாய்மை வெல்லும் மனிதர்களான நாம் வாய்மையின் வழி வாழ்வோமாக.
You May Also Like: