சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை

Silapathikaram Katturai In Tamil

இந்த பதிவில் அறநெறி கருத்துக்களை வெளிப்படுத்தும் “சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

சிலம்பு – அதிகாரம் என்ற இரு சொற்களால் சிலப்பதிகாரம் உருவானது. சிலம்பு காரணமாக அமைந்ததால் சிலப்பதிகாரம் ஆயிற்று இது 5001அடிகளைக் கொண்டுள்ளது.

சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. சிலப்பதிகாரத்தை எழுதியவர்
  3. முக்கிய கதாபாத்திரங்கள்
  4. காப்பிய அமைப்பு
  5. சிலப்பதிகாரச் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழர்களுக்கு கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது கைவந்த கலையாகும். தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரமானது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.

தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்றாகும். ஏனைய காப்பியங்கள் அனைத்தும் அரசனையோ அல்லது தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு காணப்பட சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுந்த காப்பியம் ஆகும்.

இதனாலேதான் சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்றும் கூறுவர். காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். சிலப்பதிகாரம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சிலப்பதிகாரத்தை எழுதியவர்

இன்பியல் துன்பியல் கலந்த சிலப்பதிகாரம் என்னும் நூலை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். இவர் புகழ்பெற்ற சேர மன்னன் செங்குட்டுவன்னுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச்சாத்தனார் எனும் புலவர் மூலம் அறிந்த இளங்கோவடிகள் கண்ணகியின் கற்பு ஒழுக்கத்திலும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையாலும் கவரப்பட்டு சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார்.

முக்கிய கதாபாத்திரங்கள்

பாட்டுடைத் தலைவி “கண்ணகி” கோவலனது மனைவியாக, கற்புக்கரசியாக வாழ்ந்தவளாவாள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தாள். “கோவலன்” கண்ணகியின் கணவன் ஆவான்.

இவன் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். சிலப்பதிகாரத்தின் மற்றுமோர் முக்கிய கதாபாத்திரம் “மாதவி” ஆகும். பேரழகியான மாதவி ஆடற் கலையில் சிறந்தவள்.

காப்பிய அமைப்பு

சிலப்பதிகாரம் சோழ, பாண்டிய, சேர நாடுகளில் மூவேந்தரின் நகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம், புகார் காண்டம் என்னும் மூன்று காண்டங்களாககப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று காண்டங்களிலும் முப்பது காதைகள் அமைந்துள்ளன.

சிலப்பதிகாரச் சிறப்புகள்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரமாகும். கண்ணகி கோவலன் கதை கூறும் படைப்பாக மட்டுமல்லாது தமிழர்களின் கலை, இலக்கியம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது காணப்படுகின்றது. பாடல் வடிவில் இவ்விலக்கியம் எழுதப்பட்டுள்ளது. பண்டைய நாகரிகம், பண்டைய வாழ்வியல் நெறிமுறைகள் என்பவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வகையில் அமைந்துள்ளது.

முடிவுரை

சிலப்பதிகாரமானது அறநீதிகளை எமக்கு உணர்த்தும் சிறந்த நூலாகும். அரசியலில் பிழை செய்தவனுக்கு அறமே யமன் என்றும், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் போற்றுவார் எனவும், ஊழ்வினை தொடர்ந்து வந்தே தீரும் எனவும் வெளிப்படுத்தப்படுகின்றது.

இத்தகைய அறநெறிக் கருத்துக்களை உணர்த்தும் சிலப்பதிகாரத்தின் கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடித்து அறநெறி தவறாமல் வாழ்வோமாக.

You May Also Like:

கப்பலோட்டிய தமிழன் கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை