கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரை தமிழ்

Coronavirus Katturai In Tamil

இந்த பதிவில் “கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.

இன்று உலகையே ஆட்டம் காண செய்துள்ளது இந்த வைரஸ். மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை இந்த நோயின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரை தமிழ்

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. கொரோனா வைரஸ்சின் தொடக்கம்
  3. முடங்கிய உலகம்
  4. கொரோனா வைரஸ் அறிகுறிகள்
  5. கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகை உலுக்கிய வைரஸ் வரிசையில் கொரோனா வைரஸ்ம் ஒன்றாகும். எப்போதெல்லாம் உலகம் கட்டுக்கடங்கா போக்கில் செல்கின்றதோ அப்போதெல்லாம் இயற்கை தனது சீற்றத்தை வெளிப்படுத்தும்.

2020 ஆம் ஆண்டினை வரவேற்க உலக மக்கள் காத்திருந்த வேளை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூகான் நகரில் ஆரம்பமானது. இதுவரை கண்டறியப்படாத புதிய வைரஸ் இனமாக இது காணப்பட்டது.

யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு கோரத்தாண்டவத்தை உலகிற்குக் காட்டியது. இக்கட்டுரையில் கொரோனா வைரஸ் பற்றிக் காண்போம்.

கொரோனா வைரஸ்சின் தொடக்கம்

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரத்திலுள்ள பெரிய மீன் சந்தையில் முதன் முதலில் தோன்றியது. 4பேர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காது இறந்தனர்.

இதனைத் தொடர்ந்து பலர் நிமோனியாக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்களுக்கு இடம்பெற்ற இரத்த மாதிரி பரிசோதனையில் இதுவரை இனங்காண புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது பரவக்கூடிய நோய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

முடங்கிய உலகம்

ஜனவரி மாதம் வருடக் கொண்டாட்டம் என்பதனால் வூகானிலிருந்து பலர் தமது சொந்த நாட்டுக்குப் பயணித்தனர். இவர்கள் பல நாட்டாளர்களாக இருந்தனர். மருத்துவ மாணவர்கள்⸴ வணிகர்கள்⸴ சுற்றுலாப் பயணிகள் என பலரும் வூகானை விட்டு வெளியேறினர்.

இதுவே பின்னாளில் உலகம் முடக்குவதற்குக் காரணமாயிற்று. அனைத்து உலக நாடுகளும் ஆரம்பத்தில் சீனாவிற்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்க அடுத்த கணமே வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தொடர்ச்சியாக இரையாகின.

இத்தாலி⸴ பிரான்ஸ்⸴ அமெரிக்கா என பலம் கொண்ட நாடுகளெல்லாம் சுகாதார கட்டமைப்பு ரீதியாகவும்⸴ பொருளாதார ரீதியாகவும் ஆட்டம் கண்டன.

இறப்பு விகிதம் அதிகரித்த வண்ணமே சென்றது. இறப்பவர்களைத் தகனம் செய்யக்கூட முடியாத அளவு திணறின.

நாடுகள் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி⸴ சர்வதேசப் பயணங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கிப் போயின.

கொரோனா வைரஸ் அறிகுறிகள்

தொடர்ச்சியான இருமல் ஏற்படும் இந்த இருமல் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் 3 அல்லது 4 தடவை தொடரலாம். மேலும் காய்ச்சல் அதிகரிக்கும்⸴ உடல் வெப்பமானது 37.8டிகிரி செல்சியத்தை விடவும் அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் தோன்றும். தலைவலி⸴ சளி முதலான அறிகுறிகளும் தோன்றும்.

கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

கொரோனா வைரஸிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தம் செய்ய வேண்டும்.

தொற்றுப் பாதிக்கப்பட்ட இடங்களில் அல்லது தொற்றாளர்கள் பயணம் செய்த இடங்களிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்த வரை தேவையற்று வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

முடிவுரை

இன்றுவரை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து உலக நாடுகள் முழுமையாக வெளிவரவில்லை. பல உலக நாடுகளில் இன்றும் வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டேயுள்ளது.

எனவே நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். இப்போது தடுப்பூசிகள் பல உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையில் பாவனைக்கு வந்துள்ளன. எனவே அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் வைரஸ் இல்லா உலகைக் கட்டியெழுப்புவோம்.

You May Also Like:

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கட்டுரை

டெங்கு ஒழிப்பு கட்டுரை