இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை

India Suthanthira Porattam Katturai In Tamil

இந்த பதிவில் “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை” பதிவை காணலாம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரத்தினை வழங்கினர்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. இந்தியா என்னும் சொர்க்கம்
  3. அடக்குமுறையின் ஆரம்பம்
  4. விடுதலை விருட்சம்
  5. சுதந்திரப் போராட்ட வீரர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று நாம் அனைவரும் இந்திய சுதந்திர மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் என்பது சுயமாகக் கிடைத்ததில்லை.

நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க பல போராளிகள் தங்களையும் தங்கள் வாழ்நாளையும் தியாகம் செய்துள்ளனர்.

இன்று நாம் சுதந்திர இந்தியாவில் வாழ எண்ணற்ற முன்னோர்களின் தியாகம் நடந்துள்ளது. அத்தகைய செங்குருதியால் செதுக்கப்பட்ட விடுதலை வரலாற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியா என்னும் சொர்க்கம்

பூமியில் சொர்க்கம் என்பது இருக்குமெனில் அது இந்தியா என பேரரசர் ஜஹாங்கீர் கூறியுள்ளார். பூமியில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் பல நோக்கங்களில் இந்தியாவிற்கு படையெடுத்தனர்.

போத்துக்கீச மாலுமியான வாஸ்கோடகாமா இந்திய நாட்டின் நறுமணப் பொருட்களான ஏலம், கிராம்பு, மிளகு ஆகியவை கடல்வழியாக உலகின் கரங்களுக்கு சென்றடைய காரணமாக இருந்தார்.

ஒருவர்பின் ஒருவராக வாணிப நோக்கில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என பாரதத்துக்குள் உள்நுழைந்தனர்.

அடக்கு முறையின் ஆரம்பம்

இவர்களுள் ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனி என்னும் மாபெரும் அமைப்பை உருவாக்கினர். ஆங்கிலேயரின் அதிகாரம் மேலோங்க அரசர்களும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றனர்.

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் போத்துக்கீசரினை விரட்டினர். மன்னர் ஆட்சி பகுதிகள் மாகாணங்கள் ஆக்கப்பட்டன. மன்னர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தவில்லை என்றால் கடும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தாய்மண்ணின் வாழ்வதற்கு வரி செலுத்தும் அவலநிலையை இந்தியர்கள் அனுபவித்தனர். ஒரு சிலர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தனர்.

அவர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருதுசகோதரர்கள் போன்றவர்களைக் குறிப்பிட்டு கூறலாம். இவர்கள் இந்திய விடுதலை முழக்கமிட்டு இன்னுயிர் நீத்தனர்.

விடுதலை விருட்சம்

காந்தியடிகளின் வருகை போராட்ட வரலாற்றில் புதுமையான அத்தியாயத்தை உருவாக்கியது. காந்தியடிகள் தனது போராட்ட ஆயுதமாக அகிம்சையைக் கையில் எடுத்தார். இதனைத் தடுக்க ஆங்கிலேயர் பல முயற்சிகளை நடத்தினர். எனினும் அவை தோல்வியடைந்தன.

1919 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் அரங்கேற்றிய மாபெரும் ரத்த சரித்திரம் படைத்த “ஜாலியன் வாலாபாக்” படுகொலைச் சம்பவம் நீங்கா ரத்த வாடையை ஆங்கிலேயர் கையில் படரச் செய்தது.

சோதனைகள் வந்தும் விடுதலை வேட்கை தணியவில்லை. உப்புச் சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பன இந்தியர்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்தது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு வீரர்களின் உன்னதமான பங்களிப்பு போற்றுதற்குரியது ஆகும்.

குறிப்பாக காந்தியடிகள், நேருஜி, பகத்சிங், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

இவர்கள் போன்ற பல போராளிகளின் அயராத உழைப்பும் பாரத தேசத்தின் மீது கொண்ட பற்றுமே இன்று சுதந்திரக் காற்றை நாம் அனுபவிக்க வழிவகை செய்தது எனலாம்.

முடிவுரை

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார நெருக்கடியானது ஆங்கிலேயருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேவேளை இந்தியர்களின் தொடர் போராட்டத்திற்கும் இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரத்தினை வழங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு சன்மானமாக சுதந்திரம் கிடைத்தது.

பல தியாகங்களால் தீட்டப்பட்ட நம் சுதந்திர இந்தியாவை அவர்களின் புகழ் மங்காத வகையில் வளர்ச்சியடையச் செய்வது நம் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

தேர்தல் பற்றிய விழிப்புணர்வு

விடுதலைப் போரில் பகத்சிங்