இந்த பதிவில் “நான் ஒரு மிதிவண்டி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டமைந்துள்ளன.
நான் ஒரு மிதிவண்டி கட்டுரை – 1
காலங்கள் மாறினாலும் இந்த உலகத்தில் எந்த காலத்திலும் மாறாத சில அடையாளங்கள் இருக்க தான் செய்கின்றன. மிதிவண்டி என்பது அத்தகையதே. ஆம் நான் ஒரு மிதிவண்டி ஆரம்ப காலங்களில் கால்நடையாக திரிந்த மனிதனை விரைவாக பயணிக்க செய்த பெருமை எனக்கு உண்டு.
மனிதன் இரண்டு சில்லுகளை பயன்படுத்தி மிதிபலகையை மிதிக்க மிதிக்க முன்னேறி செல்கின்ற ஒரு எளிமையான வாகனமாக நான் உருவாக்கப்பட்டேன்.
இன்றளவும் பல அதிவேகமாக செல்ல கூடிய வாகனங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவன் நான் தான். எனக்கும் மனிதனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கின்றது.
ஆரம்பகால மக்களின் வாழ்வில் கிடைத்த ஒரு குடும்பவாகனம் நான் தான் அப்பாவின் மிதி வண்டி தான் பிள்ளைகளை பாடசாலையில் கொண்டுபோய் விடுவதில் இருந்து வேலைக்கு சென்று வரவும் உதவும்.
வீட்டு தேவையான பொருட்களை வாங்கி வர கடைக்கும் சந்தைக்கும் சென்று வர உதவும். மாலைநேரங்களில் தண்ணீர் அள்ள கோவில் கிணற்றடிக்கு சென்று வரும் பலரின் வாகனம் நானாவேன்.
அப்பா இல்லாத நேரங்களில் மைதானங்களுக்கும் சென்று வர நானே வாகனமாய் இருந்திருக்கின்றேன். அந்த மக்களின் வாழ்வில் நான் வெறும் வாகனம் மட்டுமல்ல. ஒரு ஆழமான உணர்வு என்றால் மிகையல்ல.
என்னை பாவிப்பவர்களுக்கு எரிபொருள் செலவு தேவையில்லை அதனால் தான் என்னை ஏழைகள் அதிகம் விரும்பி வாங்கி வைத்திருப்பார்கள்.
அதுபோல என்னை ஓட்டி செல்வது சிறந்த உடற்பயிற்சி என்று வைத்தியர்கள் கூறுவதனால் இன்று பணக்காரர்கள் கூட என்னை வாங்கி ஓடுகிறார்கள். இவ்வாறு எனக்கான இடம் இந்த சமூகத்தில் தனித்துவமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
நான் ஒரு மிதிவண்டி கட்டுரை – 2
ஒரு தூசு படிந்த பாழடைந்த அறையொன்றிலே நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் என்னை யாரும் இன்று கண்டுகொள்வதேயில்லை. ஆம் நான் ஒரு மிதிவண்டி ஆவேன்.
முன்பொரு காலத்தில் என்னை ஒரு வைத்தியர் தனது மகனுக்காக என்னை வாங்கினார். என்னை அவர் வாங்க வரும் போது நானும் எனது சகாக்களும் ஒரு நகரத்தின் கடையில் புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தோம்.
கடைக்கு வந்து எம்மை பற்றி கடைக்காரரிடம் விசாரித்த அவருக்கு என்னை வெகுவாக பிடித்து விட்டது. தனது மகனுக்கு என்னை பிடிக்கும் என்று எண்ணிய அவர் என்னை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக தனது மகனுக்கு கொடுத்தார் என்னை பார்த்ததும் அவன் பூரித்து போனான்.
தனது தந்தையை கட்டியணைத்து கொண்டான். அன்று முதல் பாடசாலைக்கும் தனியார் வகுப்புக்களுக்கும் என்னை எடுத்து கொண்டு மகிழ்சியாக ஓடி செல்வான். நானும் அவனை சுமந்து கொண்டு ஒரு பந்தைய குதிரை போல விரைந்து செல்வேன்.
எனது அழகான மிடுக்கான தோற்றத்தை கண்டு என்னை பற்றி அவனது நண்பர்களில் பேசாதவர்கள் யாருமில்லை. ஆசையோடு என்னை ஓட்டிபார்க்க வருவார்கள் என்னை பார்த்து பெரிதும் மகிழ்ந்து போவார்கள்.
பாடசாலை முடிந்ததும் அவனது நண்பர்களையும் அவனையும் சுமந்து கொண்டு நான் பயணிப்பேன். அவனும் என்னை கவனமாக பார்த்து கொள்வான். இவ்வாறு சிறிதுகாலம் செல்ல அவனது பாடசாலை காலமும் முடிவடைந்தது.
அவனை உயர் கல்வி கற்பிக்க கல்லூரிக்கு அனுப்ப அவனது தந்தை முடிவு செய்தார். அதனால் குடும்பத்தோடு அவர்கள் நகரத்துக்கு போய்விட்டார்கள்.
என்னை பிரியமுடியாது வருத்தத்தோடு அவன் பிரிந்து சென்றதை என்னால் மறக்க முடியாது. அன்றிலிருந்து இன்றுவரை நான் இந்த அறையில் வேதனையோடு தனித்து கிடக்கின்றேன்.
You May Also Like: