நான் ஒரு கிளி கட்டுரை

Naan Oru Kili Katturai

இந்த பதிவில் “நான் ஒரு கிளி கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.

உலகின் அழகான உயிரினம் நான் தான் என் அழகை கண்டு அனைவரும் வியப்பும் பொறாமையும் அடைவார்கள்.

நான் ஒரு கிளி கட்டுரை – 1

நான் ஒரு கிளி ஆனால் இந்த அழகிய வானத்தில் பச்சை சிறகுகளால் பறந்த படியே ஆனந்தமாக கீச்சு குரலில் பாடிக்கொண்டே பறப்பேன்.

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அழகான படைப்பு நானாக தான் இருக்க வேண்டும். முற்பிறப்பில் நான் செய்த புண்ணியத்தின் பலனாக தான் நான் ஒரு கிளியாக இங்கே படைக்கப்பட்டேன். காலை முதல் மாலைவரை எங்களுடைய வாழ்வு கலகலப்பாகவே இருக்கும்.

நாங்கள் கூட்டமாகவே வாழ்வதனால் எமக்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. ஒற்றுமையும் அன்பும் நிறைந்த எங்கள் குடும்பம் அழகானது. ஆலமரத்தின் விழுதுகளில் நாங்கள் ஆனந்தமாய் பாடி கொண்டே எங்கள் பொழுதை கழிப்போம்.

பசியெடுத்தால் இந்த இறைவன் படைப்பில் உள்ள அற்புதமான கனிகளை சுவைப்போம். பழங்கள் என்றால் எமக்கு அலாதி பிரியம். கொவ்வை பழம், மாம்பழம், கொய்யாப்பழம் என எமக்கு பிடித்த பழங்களை தேடி கூட்டமாக பறந்து செல்வோம் ஒற்றுமையாக உணவை பகிர்ந்து உண்போம்.

வயிறு நிறைய உண்டதும் ஓய்வெடுப்பதற்காக அழகிய சோலைகளை நாடி சென்று அங்கே மகிழ்ந்திருப்போம். நாள் முழுவதும் எங்களுக்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. எங்களுக்கு கிடைத்த சுதந்திரமான வாழ்க்கை யாருக்கும் வாய்த்துவிடாது. இது மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை.

நெல் அறுவடை காலம் நெருங்கி விட்டால் எங்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பம் கூட்டம் கூட்டமாக சென்று நெற்கதிர்களை உண்போம். அந்த அழகான வயல் வெளிகளில் பறக்கும் போதெல்லாம் இந்த பூமி எமக்கு சொர்க்கமாக தெரியும். இவ்வாறு என்னுடைய வாழ்வின் எல்லை வரை நான் மகிழ்ச்சியாக பாடி கொண்டே சுதந்திர பறவையாக வாழ்வேன்.

நான் ஒரு கிளி கட்டுரை – 2

நான் ஒரு கிளி ஆனால் மிகவும் மகிழச்சி அடைவேன். மகிழ்ச்சி என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதை நான் அனுபவிப்பேன். எனக்கு பொறுப்புக்களும் கவலைகளும் இல்லை என்பதனால் நான் சுதந்திரமாக வாழ்வேன்.

இந்த மரங்களின் உயரத்தில் எனது வீடு இருக்கும் மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத உயரம் அது. மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் ஆடி கொண்டு என் நண்பர்களோடு இந்த வானில் அழகான குரலில் பாடி கொண்டு தெளிந்த ஓடை போன்ற இந்த வானில் எனது சிறகுகளால் நீந்தி கொண்டு நான் ஒரு சொர்க்த்தில் வாழ்வது போல இங்கே வாழ்வேன்.

ஆம் இந்த பூமி சொர்க்கம் தான் ஆனால் மனிதர்களுக்கு தான் அதனை அனுபவிக்க தெரியவில்லை. எனக்கு மனிதர்கள் அளவுக்கு அறிவு இல்லை என்றாலும் எனக்கு கவலைகள் எதுவும் இல்லை போட்டிகளும் இல்லை பகைவர்களும் இல்லை இதனால் தான் இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கின்றது.

எங்களது வாழ்க்கையை கண்டு மனிதர்கள் நிச்சயம் பொறாமை கொள்வார்கள். இதனால் தான் என்னவோ எங்களை பிடித்து கூட்டினுள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

நான் சுதந்திரமானவன் எனது மகிழ்ச்சிக்காக நான் உயரங்களை தாண்டி பறப்பேன் இந்த இயற்கையை நான் ஆழமாக நேசிப்பேன் அதனால் தான் அது என்னை பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. எனக்கு வேண்டிய உணவை அது தருகின்றது. எனக்கு வாழ்விடமும் தருகின்றது.

மனிதர்கள் மொழியை என்னால் பேச முடியும் அதனால் தான் ஒன்றை மனிதர்களுக்கு சொல்கின்றேன். நீங்கள் இந்த இயற்கையை ஒரு போதும் அழிக்காதீர்கள் இல்லையென்றால் இங்கு நாம் நீங்கள் என்று எல்லோரும் அழிந்து விடுவோம்.

எனவே நீங்கள் எங்களை பார்த்து கற்று கொள்ளுங்கள் இயற்கையோடு சேர்ந்து வாழ பழகுங்கள் என்று நான் கூறுவேன்.

You May Also Like:

மாலை நேர காட்சி கட்டுரை

நான் ஒரு எறும்பு ஆனால் கட்டுரை